1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : திங்கள், 15 ஜூன் 2015 (09:48 IST)

விஷால் - ராதாரவி நேரடி மோதல்

ஜுலை 15 நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுகிறது. இப்போது நிர்வாகிகளாக இருக்கும் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, துணை தலைவர் காளை உள்பட அனைவரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். பொருளாளராக இருந்த வாகை சந்திரசேகர், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சங்கத்தை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடத்துகிறார் என குற்றம்சாட்டி, பொருளாளர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.
சரத்குமார் பதவியேற்ற பிறகு சங்கமானது சரத்குமார் மற்றும் ராதாரவியின் சொந்த விருப்பத்துக்கு ஏற்ப வழிநடத்தப்பட்டது. தனியார் நிறுவனத்துக்கு மல்டிபிளக்ஸ் கட்ட நடிகர் சங்க நிலத்தை குத்தகைக்கு விட்டதும் இவர்கள் இருவர் மட்டுமே. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே இந்த விவகாரம் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தெரிய வந்தது.
 
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் வாங்கிய நிலத்தை வேறொருவருக்கு குத்தகைக்கு விடக்கூடாது, நடிகர் சங்க கட்டிடம் மட்டுமே அங்கு வரவேண்டும், தனியாரின் மல்டிபிளக்ஸ் கூடாது என விஷால், நாசர் உள்ளிட்டவர்கள் கூறி வருகின்றனர். ஒன்பது பேர் கையெழுத்திட வேண்டிய ஒப்பந்தத்தில் ராதாரவியும், சரத்குமாரும் மட்டுமே கையெழுத்துப் போட்டதால் அந்த ஒப்பந்தம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதன் பிறகும் சுயநலத்துக்காக சரத்குமாரும், ராதாரவியும் அடம்பிடிக்கின்றனர்.
 
யார் கேள்வி கேட்டாலும், நீ என்ன பெரிய ஆளா? நீ என்றைக்கு சங்கத்துக்கு வந்தவன் தெரியாதா என்று தெனாவெட்டாக பதிலளிப்பதே ராதாரவியின் வழக்கம். இந்த விஷயத்திலும், சங்க தேர்தல் குறித்து பேச விஷால் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது என கூறியிருக்கிறார்.

சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் தனியாரின் மலடிபிளக்ஸ் வரக்கூடாது. இந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டால் சங்க தேர்தலில் போட்டியிட மாட்டேன் என விஷால் கூறினார். ஆனால், சுயநலவாதிகளால் அது முடியவில்லை.
அதனால், ராதாரவியை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக விஷால் அறிவித்துள்ளார். தலைவர் பதவிக்கு விஷால் அணியைச் சேர்ந்த யாரேனும் நிற்கக்கூடும்.
 
நாடக நடிகர்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும், எப்போதும்போல் எளிதாக தேர்தலில் வென்றுவிடலாம் என ராதாரவியும் அவரது அணியும் நம்பிக் கொண்டிருக்கிறது. குயிலி, பசி சத்யா, குண்டு கல்யாணம் போன்ற அதிமுக விசுவாசிகள் அதற்கு சாதகமாக வேலை பார்த்து வருகின்றனர். ராதாரவியும் அவரது அணியும் தோற்பதில்தான் சங்கத்தின் எதிர்கால நன்மை அடங்கியிருக்கிறது.