வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : சனி, 1 நவம்பர் 2014 (09:30 IST)

விஷால் வர்றார்... ஷட்டரை போடு.... ஓட்டம் எடு...

திருப்பூர். பூஜை படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஊர் ஊராகச் செல்லும் விஷால், திருப்பூர் வருகிறார். காரில் செல்கிறவரின் கவனத்தை சீடி கடையொன்றின் முன்னால் ஒட்டப்பட்டிருக்கும் கத்தி, பூஜை படங்களின் போஸ்டர்கள் ஈர்க்கின்றன. சீடி கடைக்கு முன்னால் எதுக்கு புதுப்பட போஸ்டர்கள்...?
 
உதவியாளரை அனுப்பி விசாரித்தால் அந்தக் கடையில் கத்தி, பூஜை இரு படங்களின் சீடிகள் கன ஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. கத்திக்கும், பூஜைக்கும் தியேட்டர்வரை போக வேண்டியதில்லை, இங்கே வந்தால் ஐம்பது ரூபாயில் அட்டகாசமான சீடியே கிடைக்கும் என்று பொதுஜனத்துக்கு தெரியப்படுத்ததான் அந்த போஸ்டர்கள். கடைக்கு உள்ளேயும் போஸ்டரை ஒட்டியிருக்கிறார்கள். 
பணம் போட்டு படம் எடுத்த விஷால் அடுத்து என்ன செய்திருப்பார்...?
 
ஆள் அம்புடன் கடைக்குள் அதிரடியாக பிரவேசித்தவர் பூஜை எவ்வளவு சீடி வச்சிருக்க, கத்தி எவ்வளவு இருக்கு என்று நேரடியாகவே அனைத்தையும் கைப்பற்றினார். போலீஸுக்கு தகவல் பறக்க, உடனடியாக கடைக்காரர் கைது செய்யப்பட்டார். 
 
விஷால் இப்படி நேரடியாக களத்தில் இறங்கி திருட்டு டிவிடிகளை கைப்பற்றுவது முதல்முறையல்ல. காரைக்குடிக்கு ஷுட்டிங் போயிருந்த போது அவரது புதிய படத்தை லோக்கல் கேபிளில் ஒளிபரப்பினர். அந்த கேபிள் கடை எங்கிருக்கிறது என்று இரவே தேடிப்பிடித்து அங்கு படத்தைப் போட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்த இருவரை போலீஸில் பிடித்துத் தந்தார். அதேபோல் திருட்டு டிவிடி விற்றவர்களையும் உள்ளே தள்ள உதவி செய்தார்.
தமிழ் சினிமாவுக்கு பெரிய தலைவலியாக மாறியிருப்பது திருட்டு டிவிடி. நாள்தோறும் அதன் சந்தை அதிகரித்து வருகிறது. திருட்டு டிவிடியை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை அந்த விஷயத்தில் கடும் சோம்பேறித்தனத்தை காட்டுகிறது. கேரளாவிலும் திருட்டு டிவிடி விற்பனை உண்டு. ஆனால் ஒரு படம் வெளியாகி இரண்டு மாதங்கள் கழிந்த பிறகே திருட்டு டிவிடி கடைக்கு வரும். இங்கு இரண்டாவது நாளே துல்லியமான 5.1 வந்திருக்கு சார் என்கிறார்கள்.
 
பொதுமக்களைப் பொறுத்தவரை தியேட்டருக்குப் போனால் எந்த தியேட்டர்காரனும் நியாயமான விலையில் டிக்கெட் விற்பதில்லை. அரசு நிர்ணயித்தது ஐம்பது ரூபாய் என்றால் இவர்கள் வசூலிப்பது நூற்றைம்பது. புதுப்படம் என்றால் இருநூறு, முந்நூறு. எவன் தியேட்டருக்கு போவான்? இதுதவிர வெளியே ஐந்து ரூபாய்க்கு விற்கும் சமோசாவை முப்பதுக்கு விற்கும் பகல் கொள்ளை.
 
ஒருவர் பணம் போட்டு தயாரிக்கும் படத்தை திருட்டு டிவிடி போட்டு விற்பதும், பார்ப்பதும் குற்றம். அந்த குற்றத்துக்கு அடிப்படையாக இருப்பது தியேட்டர்களின் கட்டணக் கொள்ளை. அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இப்படி அதிரடி ரெய்டு நடத்துவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. பார்வையாளனுக்கு நியாயமான டிக்கெட் விலையில் படம் பார்ப்பதற்கான சூழல் இல்லாதவரை திருட்டு டிவிடிகளை அவன் தேடிப் போகவே செய்வான். 
 
விஷாலின் பூஜை படத்தின் டிக்கெட்டையும் அரசு நிர்ணயித்ததைவிட அதிக விலைக்கே திரையரங்குகள் விற்பனை செய்தன. அதனை ஏன் விஷாலால் தட்டி கேட்க முடியவில்லை. இந்த அதிகபடி டிக்கெட் கொள்ளையை நம்பிதான் தயாரிப்பாளர்கள் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள், நடிகர்களுக்கு அவர்களின் திறமையையும், வியாபாரத்தையும் மீறிய பெருத்த சம்பளத்தை தருகிறார்கள். 
 
இந்த அடிப்படை குற்றத்தை களையாதவரை விஷாலை கண்டால் திருட்டு டிவிடி விற்பவர்கள் ஷட்டரை போட்டு ஓடுவார்களே தவிர விற்பனையை நிறுத்திக் கொள்ளவோ, ஜனங்கள் திருட்டு டிவிடியில் படம் பார்ப்பதை குறைத்து கொள்ளவோ போவதில்லை.