1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : சனி, 18 ஜூலை 2015 (14:18 IST)

சினி பாப்கார்ன் - கானாவிடம் பேரரசுகள் பாடம் படிக்கட்டும்

இதுவா அதுவா தெரியாத குழப்பத்தில் விக்ரம்
 
விக்ரமுக்கு இன்னும் சனி திசை சரியாகவில்லை. ஐ படத்துக்கு 3 வருடங்கள் உழைத்தவர், அதற்கு வட்டியுமாகச் சேர்த்து வருடத்துக்கு மூன்று படங்களில் நடிக்கத் தீர்மானித்து ஒப்புக் கொண்ட படம், 10 எண்றதுக்குள்ள. பட்ஜெட் அதிகமானதால் அப்படம் இன்னும் முடியாமல் உள்ளது.
 
அடுத்து, அரிமா நம்பி ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் மர்ம மனிதன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஐங்கரன் படத்தை தயாரிப்பதாகவும் முடிவானது. ஆனந்த் சங்கர் தனது இரண்டாவது படத்தையும் தாணுவுக்கே இயக்கித் தருவதாக ஒப்பந்தம் போட்டிருந்ததால் மர்ம மனிதனை நானே தயாரிப்பேன் என அடம்பிடித்தார் தாணு. பிறகு ஒருவழியாக தாணுவை சம்மதிக்க வைத்தனர்.
 
இதனிடையில் ராஜதந்திரம் அமித் சொன்ன கதை பிடிக்கவே, அதில் நடிக்க ஒப்புக் கொண்டார். விக்ரமை வைத்து கரிகாலன் படத்தை தொடங்கிய சில்வர்லைன் ஃபேக்டரி அப்படத்தை தயாரிப்பதாக முடிவானது. ஆனால், அவர்களோ படத்தின் பட்ஜெட் அதிகமாக உள்ளது. பத்து கோடிக்குள் பட்ஜெட் என்றால் ஓகே என பின்வாங்கினர். அதேநேரம், கரிகாலன் படத்துக்கு பதிலாக ஆறே மாதத்தில் வேறு படத்தில் விக்ரம் நடித்துத்தர வேண்டும் என்று நெருக்கடி தந்தனர்.
 
அமித் படத்தை இழக்க விக்ரமுக்கு விருப்பமில்லை. அதேநேரம் சில்வர் லைனுக்கு சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் நடித்துதத் தர வேண்டும். என்ன செய்வது என யோசித்தவர், முண்டாசுப்பட்டி இயக்குனரிடம் சில்வர்லைனின் சின்ன பட்ஜெட்டுக்கு ஏற்ற கதை கேட்டிருக்கிறார்.
 
விக்ரமின் பிரச்சனைகளை கேட்டால் நமக்கே சின்னதாக தலைசுற்றுகிறது இல்லையா?

கானாவிடம் பேரரசுகள் பாடம் படிக்கட்டும்
 
கானா பாலாவை ரஞ்சித் அட்டகத்தி படத்தில் அறிமுகப்படுத்தினார். ரஞ்சித் இரண்டாவது படத்தை இப்போதுதான் முடித்து மூன்றாவது படத்துக்கு நகர்ந்துள்ளார். இந்த சின்ன காலவெளியில் 300 -க்கு மேற்பட்ட பாடல்களை எழுதிவிட்டார் கானா பாலா. பலவற்றை அவரே பாடினார். பல படங்களில் அவரே தோன்றி நடித்தார்.
கானா பாலாவை பாடல் எழுதித்தர அணுகினால் அவர் தனக்குத் தெரிந்த இளைஞர்களை சிபாரிசு செய்கிறார். கேட்டால், "நான் தேவைக்கு சம்பாதித்துவிட்டேன். பேரும் புகழும் கிடைத்துவிட்டது. அதனால் புதிய இளைஞர்களுக்கு வழிவிட்டு எழுதுவதையும், பாடுவதையும் குறைத்துக் கொண்டேன்" என்கிறார் தன்னடக்கமாக. 
 
கால்நூற்றாண்டாக பாடல் எழுதிவரும் சில பேரரசர்கள், நேரடியாக இயக்குனர்களுக்கு போன் போட்டு, புதிய பாடலாசிரியர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கிறார்கள். ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதினால்தான் எனக்கு மூடு வரும் என்று பிற பாடலாசிரியர்களுக்கு வழிவிடாமல் தங்களின் கனத்த பிருஷ்டத்தால் வழியை அடைக்கிறார்கள். 
 
இவர்கள் கானா பாலாவிடம் பாடம் படிக்கட்டும்.

நிவின் பாலியுடன் புகைப்படம் எடுத்தது தவறா?
 
கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்றின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் நிவின் பாலி. அந்த விழாவில் எம்.எல்.ஏ, ஐபிஎஸ் அதிகாரி மெரின் ஜோசப் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு நிவின் பாலியுடன் மெரின் ஜோசப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர் கேட்டுக் கொண்டதால் விழாவில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.வே அந்த புகைப்படத்தை எடுத்தார்.
அந்த புகைப்படத்தை உடனேயே மெரின் ஜோசப் தனது பேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்தார்.
 
இதில் என்ன தவறு இருக்கிறது? 
 
ஒரு ஐபிஎஸ் அதிகாரி நடிகருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா? அதுவும் ஒரு விழாவுக்கு வந்த நேரத்தில்? புகைப்படம் எடுக்க ஒரு எம்.எல்.ஏ.விடம் கூறலாமா அவரும்தான் அதை எடுத்துத் தரலாமா? இப்படி செய்தால் ஐபிஎஸ்ஸின் கௌரவம் என்னாவது என்று சில ஊடகங்கள் ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்கின. 
 
மெரின் ஜோசப் பார்க்க அழகாக இருக்கிறார் என்பதே இந்தப் பிரச்சனையின் மையமாக உள்ளது. அழகான பெண்களுக்கு லைக் விழுவதைப் போலவே பிரச்சனைகளுக்குள்ளும் அவர்கள்தான் விழ வைக்கப்படுகிறார்கள். மீடியாவின் பொறுப்பற்ற தன்மையின் இன்னொரு எடுத்துக்காட்டுதான், மெரின் ஜோசப்பை மையப்படுத்திய இந்தப் பிரச்சனை.
 
திருந்துங்கப்பா.