1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2015 (09:09 IST)

வைரமுத்துவுக்கு ஜெயகாந்தன் எழுதிய பாராட்டுக் கடிதம்

எவ்வளவு நாளா ஏங்கிக் கிடந்தார்களோ. இணையம் முழுவதும் போட்டு துவைத்து எடுக்கிறார்கள். ஆமாம், என் கட்சிக்காரர் அப்படி என்னதான் செய்துவிட்டார்?


 
 
பிரபல வார இதழில் கவிப்பேரரசு சிறுகதை எழுதியிருக்கிறார். அதைப் படித்த மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் - தான் மறைவதற்கு முன் படித்து ஒரு பாராட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். அது பற்றி அந்த வார இதழில் கவிப்பேரரசு உணர்ச்சிமிகுதியில் இப்படி சொல்கிறார்.
 
"எனக்கு அப்படி ஒரு கடிதம் வந்தது. கிடைத்தவுடன் நான் ஜெயகாந்தனுக்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன். அவர் மகிழ்வுடன் அதனை ஏற்றுக்கொண்டார். உங்களை வந்து பார்க்கிறேன் எனச் சொன்னேன். வாங்கோ என்றார்." 
 
வைரமுத்து எழுதிய சிறுகதையைப் படித்து பரவசப்பட்டு ஜெயகாந்தன் எழுதிய கடிதத்தையும் அந்த வார இதுழில் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் என்னய்யா குற்றம் இருக்கிறது?
 
ஜெயகாந்தனின் மகள் தீபா லக்ஷ்மி, அப்பா அந்த மாதிரி எந்தக் கடிதமும் எழுதித்தரலை என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார். அப்படி என்ன அவர் எழுதியிருக்கிறார்?
 
"சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது். இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.
 
அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.


 
 
ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே. அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று.
 
அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது."
 
இந்த கடிதத்தை வைத்துதான் கவிப்பேரரசு மீது கல்லெறிகிறார்கள். தமிழ் இதுவரை எனக்கு சோறு போட்டது, இனி தமிழுக்கு நான் சோறு போடுவேன் என்று தமிழை ஊட்டி வளர்த்த கவிப்பேரரசுக்கா இந்த நிலை? 
 
கவிப்பேரரசரே கவலையை விடுங்க. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் கடைசியில் தர்மமே வெல்லும். தூற்றுகிறவர்கள் தூற்றட்டும். நாம் அசோகமித்ரனிடம் அடுத்தக் கடிதம் வாங்குவதற்கான வழியைப் பார்ப்போம். இவங்களையெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா?