வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : சனி, 20 ஜூன் 2015 (10:53 IST)

சினிபாப்கார்ன் - காமெடியன்களின் காலைவாரும் கதாநாயக ஆசை

அப்படியெல்லாம் அத்துட்டு ஓடிர முடியாது
 
மூன்று ஹிட் படங்களை கொடுத்த ராஜேஷின் நிலைமை கொஞ்சம் சிக்கலாகதான் இருக்கிறது. அழகுராஜா என்ற ஒரேயொரு தோல்விப்படம் அனைத்தையும் காவு வாங்கிவிட்டது. தற்போது ஆர்யா, சந்தானம் நடிப்பில் அவர் இயக்கிவரும், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை ஆர்யா தயாரிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மை வேறு.
ஆர்யா, சந்தானம், ராஜேஷ் மூவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். அதாவது ராஜேஷுக்கு இந்தப் படத்தை இயக்க சம்பளம் இல்லை. படம் லாபம் சந்தித்தால் மட்டும் சதவீத அடிப்படையில் பணம் கிடைக்கும்.
 
சம்பளம் வாங்கிட்டு டப்பா படத்தை தந்து நீங்க தலைமவாயிடுவீங்க, தயாரிப்பாளர் கஷ்டப்பட வேண்டுமா என்ற தார்மீக அடிப்படையில் போடப்பட்டதாம் இந்த ஒப்பந்தம். ஆர்யாவும், சந்தானமும் நடிகர்களாக மட்டுமே இருக்கும் படங்களிலும் இதனை - சம்பளத்துக்குப் பதில் லாபத்தை - நடைமுறைப்படுத்தலாம்.

காமெடியன்களின் காலைவாரும் கதாநாயக ஆசை
 
என்னாலதான் படமே ஓடுது, அதனால் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று இனிமே இப்படிதான் படத்தை எடுத்தார் சந்தானம். படத்தைப் பார்க்க தியேட்டரில் ஆளில்லை. வடிவேலுவும் அப்படியொரு முடிவில் எடுத்த தெனாலி அவுட். நேற்று வெளியான எலியின் ரிசல்டும் கிலி கிளப்புகிறது.
 
காமெடியன்கள் எப்போதும் தொட்டுக்க ஊறுகாய்தான். அதுவும் சந்தானம் கவுண்டர் டயலாக் மற்றும் இரட்டை அர்த்த வசனம் மூலமாக மட்டுமே சிரிப்பை உற்பத்தி செய்பவர். ஹீரோவுக்கு இந்த இரண்டுமே அந்நியம். உடன் நடிக்கும் துணை கதாபாத்திரங்களை ஹீரோ இரண்டரை மணிநேரமா கலாய்க்க முடியும்? காதல், ஆக்ஷன் என்று வரும்போது சந்தானத்தைப் பார்க்க ரசிகர்களால் முடியவில்லை. இனிமே இப்படிதான் படத்திலும் துணை கதாபாத்திரங்களை கலாய்த்துதான் ஓரளவு ஒப்பேற்றினார் சந்தானம். 
ஒரு படம் ஒகே. எல்லா படத்திலும் இது சாத்தியமா?
 
வடிவேலுவின் அப்பாவித்தனமும், அடிவாங்கும் விதமும், வெகுளித்தனமுமே அவரது நகைச்சுவையின் ஊற்றுக்கண். அதைவிட்டு அவர் கருத்து சொல்றேன் என்று காட்சிகளில் கடுப்படிக்கும் போது வடிவேலு என்ற என்டர்டெய்னர் மறைந்து போகிறார். இந்திரலோகத்தில் நா அழகப்பனிலேயே இந்தத் தவறைதான் செய்தார். எலியிலும் அது தொடர்கிறது.
 
சிரிக்க வைத்தவர்களே சித்திரவதை செய்வது கொடுமைதான்.

இதுவும் கடந்து போகுமா?
 
மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் செய்த புலிவால், சென்னையில் ஒரு நாள், அதிதி, மாலினி பாளையங்கோட்டை, உன் சமையல் அறையில் என எல்லாமே தோல்விப் படங்கள். இந்தப் படங்கள் அனைத்தும் கேரளாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை. இதற்கு முக்கிய காரணம், அந்த கதைகள் நமது கலாச்சார, வாழ்வியல் பின்னணிக்கு ஒத்துவருமா என்று கவனிக்காததும், மோசமாக அவற்றை திரைப்படமாக்கியதுமேயாகும்.
இப்போது பெங்களூர் டேய்ஸ் திரைப்படத்தை, இதுவும் கடந்து போகும் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். முந்தைய படங்களில் நேர்ந்த அதேதவறைதான் இவர்களும் செய்கிறார்கள்.
 
பெங்களூர் டேய்ஸ் படம், உறவுக்கார இளைஞர்கள் (இதில் ஒருவர் இளைஞி) மூவரின் கொஞ்சகால பெங்களூர் வாழ்க்கையை சொல்கிறது. மலையாளிகளின் ஆகப்பெரிய கனவு எது என்று நீங்கள் வாக்கெடுப்பு நடத்தினால் 60 சதவீதம் பேர் பெங்களூரில் செட்டிலாக வேண்டும் என்று கூறுவார்கள். பெங்களூர் அவர்களின் கனவு பிரதேசம். அதனால் பெங்களூர் பின்னணியில் ஒரு படம் அவர்களை ரொம்பவும் ஆகர்ஷித்தது. படத்தின் கதை, காட்சிகள் அளவுக்கு இந்த பின்னணிக்கும் முக்கியத்துவம் உண்டு.
 
தமிழில் பெங்களூரை சிங்கப்பூராக மாற்றியிருக்கிறார்களாம். கதை சிங்கப்பூரில் நடக்கிறது. தமிழ்ப் படத்தில் தமிழர்களின் வாழ்விடப் பின்னணி இல்லையென்றால் அப்படம் வெற்றி பெறுவது கடினம். பெங்களூர் சாலையில் கேமரா வைத்தால் அது பெரிய வித்தியாசமாக தெரியாது. சென்னை, கொச்சி போலதான் தெரியும். ஆனால், சிங்கப்பூர் அப்படியல்ல. உடனடியாக ஒரு அந்நியத்தன்மை வந்துவிடும். இந்த அந்நியத்தன்மைதான் - உறுதியாகச் சொல்கிறோம் - இதுவும் கடந்து போகும் படத்தின் வில்லனாக இருக்கப் போகிறது.