வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : திங்கள், 16 ஜனவரி 2017 (11:43 IST)

த்ரிஷாவும் ஜல்லிக்கட்டும் - அநாகரிகம், ஆபாசம், ஆதரவு மற்றும் எதிர்ப்பு

ஜல்லிக்கட்டில் காளைகள் சித்திரவதைக்குள்ளாகின்றன என்பதே ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களின் வாதம்.  அதனடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை பிறப்பித்தது. இந்தப் பொங்கலுக்கு காளைகளைவிட அதிகம் வதைக்குள்ளானவர், நடிகை த்ரிஷா.

 
தெருநாய்கள் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டவர் த்ரிஷா. பீட்டாவின் உறுப்பினர். ஜல்லிக்கட்டு தடைக்குப் பின்னால் பீட்டா  இருப்பதால் த்ரிஷா கலந்து கொண்ட படப்பிடிப்புதளத்தை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். த்ரிஷாவையும், அவரது குடும்பத்தையும் அப்போது சிலர் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.  சமூகவலைத்தளங்களில் சொல்லவே கூசுகிற அளவுக்கு வசைகள், மீம்ஸ்கள் எழுதப்பட்டு பகிரப்பட்டன. எய்ட்ஸால் த்ரிஷா  மரணமடைந்தார் என்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர் உருவாக்கப்பட்டு உற்சாகமாக பகிரப்பட்டது.
 
பீட்டா உறுப்பினர்தான், ஆனால், ஜல்லிக்கட்டுக்கு எதிராக எப்போதும் பேசியதில்லை என்று த்ரிஷா விளக்கமளித்த பிறகும்  வசைகள் தொடர்கின்றன.
 
ஒருவர் எதிர்கருத்தை கொண்டிருந்தால் அவரது இடுப்புக்குக் கீழ் தாக்குவதுதான் இணைய போராளிகளின் செயலாக உள்ளது.  பெண்ணாக இருந்தால் இணையத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். இதனை ஏதோ சமூகவிரோத கும்பல்கள்  செய்யவில்லை. படித்த இளைஞர்கள், மாணவர்கள், குடும்பத் தலைவர்களே செய்கின்றனர். அதுதான் மேலும் பயமுறுத்தக்  கூடியது.
 
த்ரிஷா மீதான ஆபாச தாக்குதலுக்கு கமல், அரவிந்த்சாமி, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் உடனடியாக எதிர்வனையாற்றியது  ஆறுதல். த்ரிஷா மீதான தாக்குதலை நடத்தியவர்கள், அவர் கடை திறப்பு விழாவுக்கு வந்தால் முண்டியடித்து அவரை காண  வந்தவர்கள்தான். அவரது படத்தைப் பார்க்க கால்கடுக்க க்யூவில் நின்றவர்கள்தான். நாம் காத்திருந்து பார்க்கிற நிலைமையில்  ஒருவர், அதுவும் ஒரு பெண் இருக்கிறார் என்பது இவர்களது மனங்களில் இவர்களை அறியாமலே ஒரு உறுத்தலாக  படிந்திருக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்கள் அமைகையில் இவர்களே உருவாக்கிய புனித பிம்பங்களை இவர்களே மிகவும்  ஆபாசமான முறையில் சிதைக்க ஆரம்பிக்கின்றனர். அவர்களின் உறுத்தல் இங்கு விஷமாக வெளிப்பட்டிருக்கிறது.
 
தமிழ் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தையும், எதிர்கருத்துகளை நசுக்குவதில்  மேற்கொள்ளப்படும் வன்முறையையும் த்ரிஷா மீதான ஆபாச வசைகள் நமக்கு உணர்த்துகின்றன. இத்தனை குரூரமாக நடந்து  கொள்கிறவர்கள் உருவாக்கும் அரசுகளும் இதே குரூரத்துடன்தான் தங்கள் மீதும் செயல்படும் என்பதை இவர்கள் அறியவில்லை.  அறமற்ற அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அறமற்ற மக்களே முதல்பொறுப்பு.