வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (15:11 IST)

நவீனமாக நடந்த தூங்கா வனம் பாடல்கள் வெளியீட்டு விழா

சிடி என்றால் என்ன என்று பலரும் அறியாத காலகட்டத்தில், தனது படத்தின் புகைப்படங்களை சிடியில் தந்து, இனிமே எல்லாமே இந்த வட்டத்தட்டில்தான் வரப்போகிறது என்று முன்னறிவித்தவர் கமல்ஹாசன்.


 
 
உத்தம வில்லன் படத்தின் பாடல்களை மும்பையில் இருந்த ஸ்ருதியிடம் டவுன்லோடு செய்ய வைத்து, பாடல்கள் வெளியீட்டு விழாவில் புதுமையை புகுத்தினார்.
 
தூங்கா வனத்தில் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடனேயே சத்யம் திரையரங்குக்கு குவிந்திருந்தனர் திரையுலகினர். அதில் சரிபாதி பேராவது, விஷாலின் பாண்டவர் அணியை சேர்ந்தவர்களாக இருப்பர். கமல் விஷால் அணிக்கு ஆதரவு தெரிவித்தபின், கமலை அந்த அணியின் பிராண்ட் அம்பாசிடராக அறிவிக்காமலே ஆக்கிவிட்டார்கள்.
 
பாடல்கள் வெளியீட்டுவிழா என்றால், பிரமாண்ட அட்டை சிடி இல்லாமலா? விழா அமைப்பாளர்கள் அதற்கான வேலையில் இறங்க, கமல், வேண்டாம் என்று தடுத்தார். பாடல்களை ஐடியூனில் இப்போதே டவுன் செய்து கொள்ளலாம் என்றார்.
 
விழா நிகழ்ச்சிகளை 25 திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள்...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

செய்யப்பட்டிருந்தன. இந்நேரம் இருபத்தைந்தாயிரம் பேர் இந்த நிகழ்ச்சிகளை கண்டுகளித்துக் கொண்டிருப்பார்கள் என்றார் கமல்.
 
அத்துடன், யூடியூபிலும் நிகழ்ச்சியை நேரடியாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆக, சத்யம் திரையரங்கில் சில நூறு பேர்களின் முன்னிலையில் நடந்த தூங்கா வனம் விழாவை உலகம் முழுவதும் பல லட்சம் பேர்கள் பார்த்திருப்பார்கள்.


 

 
மேடையை பயன்படுத்திக் கொண்டதிலும் வித்தியாசம். விருந்தினர்களை மேடைக்கு அழைக்காமல், அவர்கள் இருந்த இடத்திலேயே மைக்கை தந்து பேச வைத்தார்கள்.
 
அப்படியானால், அவர்களின் பேச்சை கேமரா எப்படி கவர் செய்திருக்கும் என்று சந்தேகம் வருகிறதா? அதற்காகத்தான் மினி ஹெலிகேம் கேமராவை அந்தரத்தில் தொங்கவிட்டிருந்தார்கள். அது இங்கும் அங்கும் பறந்தபடி நிகழ்ச்சிகளை படம் பிடித்தது.
 
பேச கிடைத்த வாய்ப்பில், சிம்பு 'இது நம்ம ஆளு' படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததை சுட்டிக்காட்டி சோகத்தை தணித்துக் கொண்டார் இயக்குனர் பாண்டிராஜ். "எனக்கும் உங்களை வைத்து படம் இயக்க ஒரு வாய்ப்பு தாருங்கள்" என்றார் கமலிடம்.
 
விஷால் பேசும்போது, நடிகராக மட்டுமின்றி, நல்ல மனிதராகவும் கமலை வியந்து பார்ப்பதாக தெரிவித்தார்.
 
தனுஷ், கிரேஸிமோகன், லிசி, உமா ரியாஸ், வைரமுத்து, கௌதம் வாசுதேவ மேனன், அமீர், செல்வமணி, ஸ்ருதி, தனஞ்செயன், கருணாஸ், ஜிப்ரான், சுகா, இயக்குனர் விஜய் என ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். கமல் மட்டும் மேடையேறி பேசினார்.
 
"தூங்காவனம் படம் 40 நாட்களில் எடுக்கப்பட்டது, 38 நாட்களில் எடுக்கப்பட்டது என ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள். உண்மையை சொல்ல  வேண்டுமானால், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது.
 
இரண்டு மொழிகளிலும் எடுக்க வேண்டுமானால், ஒரு கார் சீன் வந்தாலும், அதற்கு நம்பர் பிளேட் மாற்றித்தான் மறுபடியும் சீன் வைக்கவேண்டும். அதேபோல், போலீஸ்காரர் வருகிறாரென்றால், தமிழுக்கு ஒரு யூனிபார்ம், தெலுங்குக்கு ஒரு யூனிபார்ம் என மாற்றி மாற்றிதான் எடுக்கவேண்டும். 
 
இந்த படத்தை நாங்கள் 52 நாட்களில் எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துதான் தொடங்கினோம். அதன்படி முடித்தோம். இருந்தாலும், கடைசி நேரத்தில் படத்திற்கு முக்கியமாக சில காட்சிகள் தேவைப்பட்டதால், மேலும் 8 நாட்கள் எடுத்துக்கொண்டோம்.
 
ஆக, மொத்தம் இந்த படம் 60 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளிலும் எடுத்துள்ளதால், ஒரு படத்துக்கு 30 நாட்கள் என்று பிரித்துக் கொள்ளலாம்.
 
தூங்கா வனம் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும்" என்றார்.