வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: சனி, 25 ஜூன் 2016 (13:19 IST)

தில்லுக்கு துட்டு திருடப்பட்ட கதையா?

தில்லுக்கு துட்டு திருடப்பட்ட கதையா?

சந்தானம் நடிப்பில் தயாராகியிருக்கும் ஆவிகதை, தில்லுக்கு துட்டு. இந்தப் படத்தின் கதை, எங்களுடைய, ஆவி பறக்க ஒரு கதை படத்தின் திருட்டு காப்பி என்று பேப்பர் பிளைட் பிக்சர்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


 
 
உண்மையில் தில்லுக்கு துட்டு திருடப்பட்ட கதையா?
 
தனது தில்லை காட்ட எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவன் தில்லுக்கு துட்டு நாயகன். பேய்களும், ஆவிகளும்கூட அவனது தில்லுக்கு முன்னால் பயணப்படும். இதனை வைத்து பின்னப்பட்டதுதான் தில்லுக்கு துட்டு படத்தின் கதை. படத்தை இயக்கியிருப்பவர், லொள்ளு சபா மூலம் சந்தானத்தை தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்திய ராம்பாலா.
 
சந்தானம் - ராம்பாலா கூட்டணி அமையும் முன்பு பேப்பர் பிளைட் பிக்சர்ஸ் மஸ்தான் சர்புதீன் தயாரிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டானார் ராம்பாலா. படத்தின் பெயர், ஆவி பறக்க ஒரு கதை. தில்லுக்கு துட்டு போலவே இதுவும் ஆவி கதை. சர்புதீன், அதுபோலவே இல்லீங்க, அதே கதைதான் என்கிறார். இதுதான் இப்போது நீதிமன்றம்வரை போயிருக்கிறது.
 
ஆவி பறக்க ஒரு கதை படத்தை எடுப்பதாக இருந்த ராம்பாலா, சந்தானத்தின் ஆஃபர் வந்ததும் சர்பூதீனை கைவிட்டு சந்தானத்திடம் ஓடியிருக்கிறார். ஆவி பறக்க ஒரு கதையை அப்படியே தில்லுக்கு துட்டு என பெயர் மாற்றி எடுத்தும் முடித்துவிட்டார். இனிமேல் நான் செலவளித்து எடுத்த ஆவி பறக்க ஒரு கதையை என்ன செய்வது என்று கேட்கிறார் சர்புதீன். இந்தப் படத்துக்காக 81 லட்சங்கள் செலவு செய்ததாக அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆவி பறக்க ஒரு கதையை கேட்டு இம்ப்ரஸான் சந்தானம்தான் ராம்பாலாவை இழுத்துக் கொண்டார் என்றும் கூறுகிறார்கள். 
 
ஆவி பறக்க ஒரு கதையை தொடங்கவேயில்லை. 81 லட்சங்கள் சர்புதீன் செலவு செய்ததாக கூறுவது அப்பட்டமான பொய் என்று ராம்பாலா தரப்பு புகாரை மறுத்துள்ளது. படப்பிடிப்பு நடந்ததாக சர்புதீனும் மனுவில் குறிப்பிடவில்லை. எனில் 81 லட்சங்கள் அவருக்கு எப்படி செலவானது என்பது முக்கியமான கேள்வி.
 
தமிழ் சினிமாவில் கதைகள் திருடப்படுவது சாதாரணம். உதவி இயக்குனர்களின் கதையை சொற்ப பணத்தில் அல்லது பணமே தராமல் வாங்கிவிட்டு யார் யாரோ லாபம் பார்க்கிறார்கள். ஆனால், இந்த விவகாரம் சற்று வித்தியாசமானது. என்னுடைய தயாரிப்பில் தொடங்கிய கதையை இப்போது வேறொருவரை வைத்து எடுத்திருக்கிறார் என்பது தயாரிப்பாளர் சர்புதீனின் குற்றச்சாட்டு. இது குறித்து அவர் புகார் மனுவில் விவரமாகவே குறிப்பிட்டுள்ளார்.
 
எங்கள் நிறுவனம் சார்பில் ஆவி பறக்க ஒரு கதை என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க திட்டமிட்டு, அதன் இயக்குநராக ராம்பாலா நியமிக்கப்பட்டார். இப்படத்துக்காக ரூ.81 லட்சம் வரை செலவு செய்தேன். ஆனால், உரிய காரணத்தை தெரிவிக்காமல் படம் எடுப்பதை இயக்குநர் ராம்பாலா தவிர்த்தார்.
 
இந்நிலையில் இயக்குநர் ராம்பாலா ஆவி பறக்க ஒரு கதை படத்தின் கதையை, தில்லுக்கு துட்டு என்ற தலைப்பில் நடிகர் சந்தானத்தைப் போட்டு படமாக எடுத்துள்ளார்.
 
இப்படம் வெளியானால், எனக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே தில்லுக்கு துட்டு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்தானத்தையும், ராம்பாலாவையும் வரும் 28 -ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
 
ராம்பாலாவும், சந்தானமும் இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு கதை என்ன வைத்திருக்கிறார்கள் என்பது அன்று தெரிந்துவிடும்.