1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (10:36 IST)

காப்பியடிக்கிறாங்க - கதறும் ஹாலிவுட்

காப்பியடிப்பது, கதையை இணையத்தில் கசிய விடுவது போன்றவை இந்தியா மட்டுமில்லை, உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. டாலர்களை கொட்டி எடுக்கப்படும் ஹாலிவுட்டிலும் காப்பி கதறல் அவ்வப்போது கேட்கதான் செய்கிறது.
 

 
சோனி தயாரித்த, இன்டர்வியூ படத்தில் வடகொரியா அதிபரை கிண்டல் செய்திருப்பதாக வந்த தகவலையடுத்து, சோனியின் அலுவலக கம்ப்யூட்டர் செய்திகளை வடகொரியா திருட்டுத்தனமாக கைப்பற்றியது. இன்டர்வியூ படத்தின் கதை மட்டுமின்றி அண்டர் புரொடக்ஷனில் இருக்கும் சில படங்களின் ஸ்கிரிப்டும் அதில் அடக்கம். 
 
பல மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்டு வரும் படங்களின் கதையை வெளியிட்டால், படத்தின் கதி அதோகதிதான். வேறு வழியில்லாமல் வடகொரியாவின் மிரட்டலுக்குப் பணிந்து, இன்டர்வியூ படத்தின் கிண்டலின் வீரியத்தை குறைத்தது சோனி.
 
குயென்டின் டரண்டினோவின், த ஹேட்ஃபுல் எய்ட் படத்தின் திரைக்கதை படப்பிடிப்புக்கு முன்பே இணையத்தில் வெளியானது. அதனால், அந்தக்கதையை படமாக்கப் போவதில்லை என்று சில மாதங்கள் சும்மாயிருந்தார் டிரண்டினோ. பிறகு, அந்த திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து, அதே பெயரில் படத்தை எடுத்து வருகிறார்.
 
இவையெல்லாம் சமீபத்தில், கசிந்த தகவல்கள். காப்பி இன்னும் டெரர்.

2012 -இல் வெளிவந்து டாலர்களை அள்ளிய படம், தி கேபின் இன் தி வுட்ஸ். ட்ரூ கோடார்ட் இயக்கிய இந்தப் படத்தின் திரைக்கதையை ட்ரூ கோடார்டுடன் இணைந்து ஜோஸ் வேடான் எழுதியிருந்தார். எல்லாம் ரசிகர்களுக்கு தெரிந்த பெயர்தான். ஜோஸ் வேடான் பிரபல அவென்சர்ஸ் படத்தை இயக்கியவர். மே 1 யுஎஸ்ஸில் வெளியாகவிருக்கும் அவெஞ்சர்ஸின் இரண்டாம் பாகம், அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தையும் இவரே இயக்கியுள்ளார்.
பிரச்சனை இதுதான். தி கேபின் இன் தி வுட்ஸ் படத்தின் கதை, எழுத்தாளர் பீட்டர் கல்லாகர் எழுதிய, தி லிட்டில் வைட் ட்ரிப் நாவலின் கதையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. நாவலில் வரும் 25 காட்சிகள் அப்படியே படத்தில் இருப்பதாகவும், முக்கியமாக படத்தின் ட்விஸ்ட் தனது நாவலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் பீட்டர் குற்றம்சாட்டியிருக்கிறார். அத்துடன் நஷ்டஈடு கேட்டு கோர்ட்டை அணுகியிருக்கிறார்.
 
நஷ்டஈடாக அவர் கேட்டிருப்பது பத்து மில்லியன் டாலர்கள். நமது ரூபாயில் ஜஸ்ட், 62.25 கோடிகள். 30 மில்லியன் டாலர்கள் செலவில் உருவான படம் யுஎஸ்ஸில் மட்டும் 15 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக லாபம் சம்பாதித்தது. உலகம் முழுவதையும் சேர்த்தால் லாபம் 50 மில்லியன் டாலர்களை தாண்டும்.
 
எழுத்தாளருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் கதையை எழுதிய இருவருடன் படத்தை தயாரித்த லயன்ஸ் கேட்டும் நஷ்டஈடு தரவேண்டியிருக்கும். இங்கு போல், அந்த ஆளை எனக்கு தெரியவே தெரியாது, ஹிட் படங்களை எடுத்த நான் கதையை திருடுவேனா என்றெல்லாம் அங்கு ஜல்லியடித்து தப்பிக்க முடியாது. 
 
தீர்ப்புக்காக இப்போது இருதரப்பும் வெயிட்டிங்.