1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.அர்
Last Updated : சனி, 9 மே 2015 (11:01 IST)

நடைமுறைக்கு சாத்தியமா பெரிய படங்களுக்கான கட்டுப்பாடு? - ஓர் அலசல்

ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் கார்ப்பரேட்டின் பாரசூட் தியரி நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை இருந்து வந்த, திரையரங்குகளில் படம் வெளியாவதற்கும், அப்படங்கள் திரையரங்குகளில் ஓடும் நாள்களுக்குமான தாள லயத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
 
முன்பு குறைவான திரையரங்குகளில் படங்கள் வெளியாகி அதிக தினங்கள் ஓடின. இன்று அதிக திரையரங்குகள் குறைவான தினங்கள் என அப்படியே தலைகீழ் மாற்றம். இதனால், மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது சின்ன பட்ஜெட் படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றன. அப்படியே கிடைத்தாலும் ஒன்றே இரண்டோ தினங்கள். மூன்றாவது நாள் திரையரங்கைவிட்டு தூக்கப்படும்.  
சின்ன பட்ஜெட் படங்கள் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரேயொரு தீர்வை நெடுநாள்களாக முன்வைக்கிறது. அது, பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீட்டை கட்டுப்படுத்துவது. படங்களின் எண்ணிக்கையை அல்ல, அவை வெளியிடும் நாள்களின் எண்ணிக்கையை வரையறைக்குள் கொண்டு வருவது. 
 
ரூ.15 கோடி மற்றும் அதற்கு அதிக பொருட்செலவில் தயாராகும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர்கள் பொங்கல், குடியரசு தினம், தமிழ்ப்புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய பத்து நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று புதிய கட்டுப்பாடை தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்துள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் ஜுன் 1 -ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
 
இப்படி தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு விதிப்பது இது முதல்முறையல்ல. எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக இருந்தபோதும், இதேபோன்ற ஒரு விதியை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அந்த விதிமுறை எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன் விஜய் நடித்த படமே முதலில் உடைத்தது. 
 
இந்நிலையில், தாணுவின் அறிவிப்பு நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி எழுவது இயல்பானது.

சங்கம் அறிவித்திருக்கும் 15 கோடி இலக்குக்கு அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் தமிழில் ஐந்து பேர் இருக்கிறார்கள். 15 கோடிக்கு அருகே சம்பளம் பெறுகிறவர்கள் அரை டஜனுக்கும் மேல். நேற்று வந்த சிவ கார்த்திகேயனின் படத்தையே 15 கோடிக்குள் முடிக்க முடியாது என்பதுதான் இன்றைய நிலை.  சிவ கார்த்திகேயன், சிம்பு, தனுஷ், விக்ரம், விஜய், கார்த்தி, அஜீத், விஷால், கமல், ரஜினி என்று பத்துக்கும் மேற்பட்ட நடிகர்களின் எந்தப் படத்தையும் 15 கோடிக்குள் முடிக்க முடியாது என்பதே யதார்த்த நிலை.

பிரபுசாலமன், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் சின்ன நடிகர்களை வைத்து எடுக்கும் படங்களும் 15 கோடியை தாண்டிவிடுகின்றன. இப்படி அரை டஜன் காஸ்ட்லி இயக்குனர்கள் தமிழில் இருக்கிறார்கள். ஒரு வருடத்தில் 30 படங்களாவது தயாரிப்பாளர்கள் சொல்லும் பெரிய பட்ஜெட் பட்டியலுக்குள் வந்துவிடுகிறது. இந்த முப்பது படங்களையும் குறிப்பிட்ட பத்து தினங்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்கிறார்கள்.
 

 
ரஜினி படம் வெளியாகும்போது வேறு எந்தப் படத்தையும் வெளியிட முடியாது என்பதே யதார்த்தம். அதேபோல் விஜய், அஜீத் படங்கள். இவர்களின் படங்களுடன் வேறெnரு பெரிய படம் வெளியானால் இரு படங்களின் வசூலும் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என யாருமே விரும்புவதில்லை.
 
சமீபகாலமாக பெரிய படங்களின் வசூலைப் பார்த்தால் ஒரு உண்மை தெரியவரும். அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு அதீத விளம்பரங்களின் மூலம் முதல் மூன்று தினங்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி விற்பதால் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் நஷ்டத்திலிருந்து தப்பிக்கின்றன. இந்தப் படங்களின் மொத்த வசூலில் 60 முதல் 70 சதவீத வசூல் முதல் ஐந்து தினங்களில் கிடைக்கிறது. அதிக திரையரங்குகளில் வெளியாவதால் படம் சுமாராக இருந்தாலும் ஐந்துநாள் ஓபனிங்கில் படம் தப்பித்துவிடுகிறது. அதேபடம் குறைவான திரையரங்குகளில் வெளியானால்...?
 
பத்து தினங்களில் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்களை வெளியிட முடியும் என்ற கட்டுப்பாடு வருகையில் இரண்டு மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் ஒரேநாளில் வெளியாக வேண்டிய நெருக்கடி உருவாகும். படங்களுக்கு கிடைக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறையும். எண்ணிக்கை குறையும் போது தானாகவே வசூலும் குறையும். இது தயாரிப்பாளர்களை மட்டும் பாதிக்காது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
 
பெரிய பட்ஜெட் படங்கள் கடுமையான நஷ்டத்தை தந்தாலும் அதுபோன்ற படங்களின் மீதே விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். நாலு பெரிய பட்ஜெட் படம் நஷ்டத்தை தந்தாலும், ஒரு படம் ஓடினால் நாலு படத்தின் நஷ்டத்தையும் சரி செய்துவிடும். அந்த வலிமை சின்ன பட்ஜெட் படங்களுக்கு கிடையாது. தங்களின் நம்பிக்கையான பெரிய பட்ஜெட் படங்கள் நெருக்கடிக்குள்ளாவதை விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் விரும்ப மாட்டார்கள். எஸ்.ஏ.சந்திரசேகரன் இதற்குமுன் கொண்டு வந்த கட்டுப்பாடு எந்த எதிர்ப்புமின்றி மீறப்பட்டதற்கு இதுவே முக்கிய காரணம்.
 
இந்த நடைமுறை யதார்த்தத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் கருத்தில் கொண்டதற்கான எந்தத் தடயமும் இல்லை. தாணுவின் அறிவிப்பு பலன் தருமா என்பதைவிட, தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.