1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : திங்கள், 23 மார்ச் 2015 (13:59 IST)

ஆள்வதும் நீங்கள், அழுவதும் நீங்களா? - தங்கர் பச்சானுக்கு சாரு நிவேதிதாவின் திறந்த மடல்

எழுத்தாளர் சாரு நிவேதிதா குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், சமூகம் வழமையாக சிந்திப்பதிலிருந்து மாற்றி சிந்திக்கும்,  அத்தியாவசியமான எழுத்தாளர் அவர். வசந்தபாலனின் அங்காடித்தெருவில் குள்ளனை மணம் செய்து கொண்ட பாலியல் தொழிலாளி, தனக்குப் பிறந்த குழந்தை குள்ளமாக இருப்பதற்கு சந்தோஷப்படுவாள். இன்னொருத்தனுக்கு பிறந்தது என்று யாரும் சொல்ல மாட்டாங்களே என்று அதற்கு விளக்கமும் கூறுவாள். அங்காடித்தெரு படத்தில் பாராட்டப்பட்ட, கைத்தட்டல் பெற்ற இந்த காட்சியை சாரு கடுமையாக கண்டித்திருந்தார். 
 
இந்த உலகம் குற்றப்படுத்தும் என்பதற்காக குழந்தை ஊனமாக பிறந்தாலும் பராவாயில்லை என்பது என்ன மாதிரியான மனநிலை என்று அதனை சாடியிருந்தார். உண்மை. சமூகத்திடம்  நல்ல பெயர் வாங்கணும் என்பதற்காக தனது குழந்தை உடல் ஊனத்துடன் பிறந்தது நல்லது என எந்த தாயாவது கூறுவாளா?
 
தங்கர் பச்சான் மேடை கிடைத்தால் புரட்சி பேசித் தள்ளுகிறவர். அவரது மேடைப் புரட்சி எப்படி என்பதை தனது திறந்த மடல் மூலம் விளாசியிருக்கிறார் சாரு. அவரது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் அந்தக் கடிதம், தங்கர் குறித்தும், அவர் போன்ற மேடை புரட்சியாளர்கள் குறித்தும் நமக்கிருக்கும் போலி கிளர்ச்சியை கருவறுக்கும். இனி சாரு...
 
 
அன்பு நண்பர் தங்கர் பச்சானுக்கு,
 
வணக்கம்…
 
உங்களை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சந்திக்கிறேன்.    பத்திரிகைகளில் நீங்கள் தொடர்ச்சியாக எழுதும் பத்திகளையும் பார்க்கிறேன்.  எல்லாமே இந்த சமூகத்தில் நடந்து வரும் அநீதிகளைக் கண்டு கொதித்து எழுதப்படும் ஆவேசக் கட்டுரைகள்.  இப்படி ஆவேசப்படுகின்றவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டே தான் வருகிறார்கள்.  
 
சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் சுதந்திரம் கிடைத்ததும் எப்படித் தானும் சீரழிந்து, தேசத்தையும் சீரழித்தது என்பதை நாம் அறிவோம்.  பராசக்தியிலும் மற்றும் இன்னோரன்ன படங்களிலும் கருணாநிதி எழுதிய பொறி பறக்கும் வசனங்களைக் கண்டு தங்கள் குருதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஓட விட்டுக் கொண்டவர்கள் கோடானுகோடி.  என் தந்தையும் அவர்களில் ஒருவரே.  அதன் பிறகு கருணாநிதி ஆட்சியில் தமிழகம் என்ன ஆனது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  திமுக, அதிமுக இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.  மக்களுக்கு அந்த இரண்டு கட்சிகளை விட்டால் வேறு வழியில்லை. 

 
டாக்டர் ராமதாஸ் குடிதாங்கிப் போராட்டம் நடத்திய போது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  உங்களுக்குத் தெரியும்.  இப்போது எப்படி இருக்கிறார் என்பதும் உங்களுக்குத்  தெரியும்.  உங்களைப் போலவே – இன்னும் அதிகமாகவே – ஆவேசக் குரல் எழுப்பியவர் டாக்டர் ராமதாஸ்.  என் குடும்பத்தினரை பதவிக்குக் கொண்டு வந்தால் என்னைக் கட்டி வைத்து அடியுங்கள் என்றார்.  அப்படியெல்லாம் நம்மால் செய்ய முடியுமா என்ன?  உங்களிடமிருந்தும் அதே போன்ற வீர வசனங்களெல்லாம் தினம் தினம் வந்து கொண்டே இருக்கின்றன.  உங்களுக்கு ஒரு பதவியைக் கொடுத்தால் அடங்கி விடுவீர்கள் என்றே இந்த வீராவேசத்தைக் கண்டால் சொல்லத் தோணுது.
 
எல்லாப் பத்திரிகைகளிலும் ஆவேசப்படுவதைப் போலவே நீங்கள் தி இந்து நாளிதழிலும் ஆவேசப்பட்டு வருகிறீர்கள்.  தினமுமோ அல்லது ரெண்டு நாளைக்கு ஒருமுறையோ அந்த ஆவேசம் அச்சில் வருகிறது.    என்ன தோன்றியதோ, திடீரென்று இந்துவில் எழுதி வரும்  தொடரை whats app-இல் அனுப்ப ஆரம்பித்தீர்கள்.  எனக்கும் அது கிடைத்துக் கொண்டிருந்தது.  ஆச்சரியமாக இருந்தது.  ஓ, நம் தங்கரும் இளைஞர்களின் உலகத்துக்குள் நுழைந்து விட்டாரே என்பதுதான் ஆச்சரியத்தின் காரணம்.  
 
இன்னொரு காரணம், நீங்கள் பேசுவது, எழுதுவது எல்லாமே எனக்கு நூறாண்டுக் காலம் பின்னோக்கிச் செல்வது போல் தோன்றும்.  ஏதோ போன நூற்றாண்டைச் சேர்ந்த கிழவர் ஒருவரிடம் பேசுவது போலவே பேசுகிறீர்கள். எல்லாமே அரதப் பழசு.  இன்றைய இளைய தலைமுறைக்கும் உங்களுக்கும்  ஒரு கலந்துரையாடல் நடத்தினால் பல கொலைகளும் தற்கொலைகளும் நிகழும்; அதில் சந்தேகமே இல்லை.  நீங்களே எழுதியதுதான்,  உங்கள் வீட்டில் இருக்கும் ஜிம்மில் உங்கள் புதல்வன் கேட்கும் பாடல்களை உங்களால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை என்று.  அந்தப் பாடல்களைத்தான் ஐயா, நான் நாள் தோறும் கேட்டு வருகிறேன்.  என் வயது 62.  உங்களுக்குப் பிடித்த ஒருவருடைய இசையைக் கேட்டால் இளைஞர்கள்  தெறித்து ஓடுகிறார்கள்.  அப்படித் தெறித்து ஓடுபவர்களில் அடியேனும் ஒருவன்.  எனக்குப் பிடித்தது சந்தோஷ் நாராயணன் தான்.
 
இசையை விடுங்கள்.  பொதுவாகப் பேசுவோம்.  உங்கள் மகனிடம் நீங்கள், மகனே, என் படத்தில் நடிக்கிறாயா என்று கேட்ட போது, ஐயோ, டாடி, ஆளை விடுங்கள் என்று அந்தப் பிள்ளை தெறித்து ஓடியிருக்கிறது.  ஓடும் போது, “எனக்கும் நடிக்க வேண்டும் என்றுதான் ஆசை, ஆனால் நான் வேறு இயக்குனர் மூலமாக அறிமுகம் ஆகிறேன்” என்று சொல்லி விட்டு ஓடியிருக்கிறது.   இதையும் உங்கள் எழுத்தில் தான் படித்தேன்.  அந்தப் பிள்ளையின் மனதில் இருந்தது மணிரத்னமாக இருக்க வேண்டும்.  அல்லது, சூது கவ்வும் இயக்குனராக இருக்கலாம்.  இப்படிப்பட்ட தலைமுறை இடைவெளியில் வாழ்கிறீர்கள் நீங்கள்.  வாழுங்கள்.  அது உங்கள் உரிமை.  அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.  அப்படியானால் ஏன் இதை எழுதுகிறேன் என்றால்…

நீங்கள் பத்திரிகைகளில் எழுதும் ஆவேசக் கட்டுரைகளில் வெளியிடும் கருத்துகள் அனைத்தும் நாம் அன்றாடம் ஆட்டோவில் பயணம் செய்யும் போது ஆட்டோ டிரைவர்கள் பேசுபவை.  இந்த சமூகத்தைப் பார்த்து ஒரு இந்தியப் பிரஜைக்கு வரும் நியாயமான கோபத்தையே அந்த ஆட்டோ டிரைவர் வெளிப்படுத்துகிறார்.  பாருங்க சார், எல்கேஜி அட்மிஷனுக்கு அஞ்சு லட்சம் வாங்குறானுவோ.  பாருங்க சார், ஒரு பய புள்ளைக்கும் தமிள்ளயே பேசத் தெரியல, எழுதத் தெரியல…  நாடு போற போக்கே சரியில்ல சார்.  கொஞ்சம் படித்த ஆட்டோக்காரராக இருந்தால், அன்னிக்கே பட்டுக்கோட்டையார் சொல்லிட்டாரு சார்… நிலத்தில் உழைப்பவன் பிச்சை எடுக்கிறான்… அதை வாங்கி விக்கிறவன் ப்ளெஷர்ல போறான்…  (என்ன பாட்டு என்று ஞாபகம் இல்லை தங்கர், நீங்களே சரியா நிரப்பிக்கிங்க, ஸாரி)  
 
சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் மீது கட்டற்ற கோபத்துடன் பேசிக் கொண்டிருப்பார் என் தெருமுனை ஆட்டோக்காரர்.  எனக்கும் அவ்வளவு அரசியல் அறிவு கிடையாது என்பதால் அவரோடு சேர்ந்து ஒத்து ஊதுவேன்.  பிறகு தேர்தல் வந்தது.  மோடி ஜெயித்தார்.  பேப்பரில் எனக்கு மோடி படத்தைப் பார்க்கும் போது மன்மோகன் சிங் மாதிரியே தெரிவதால் கண்ணாடிக் கடைக்குப் போய் கண்ணாடியை மாற்ற வேண்டி வந்து விட்டது.  ஆனால் நேற்று அதே ஆட்டோக்காரரைப் பார்த்தேன்.  அவரும் அதையேதான் சொன்னார்.  அதாவது, நரேந்திர மோடியின் பட்ஜெட்டை ஒரு அலசு அலசிய ஆட்டோக்காரர் பிறகு, மோடிக்கும் மன்மோகன் சிங்குக்கும் வித்தியாசமே இல்ல சார், ரெண்டு பேரும் ஒன்னுதான் என்றார்.   அடடா, இது தெரியாமல் போய் கண்ணாடிக்குக் காசை செலவழித்தோமே என்று நொந்து கொண்டேன்.

எனக்கு அந்த ஆட்டோக்காரரின் ஆவேசத்துக்கும் உங்கள் கட்டுரைகளில் பெருகும் ஆவேசத்துக்கும் வித்தியாசமே தெரியவில்லை.  மீட்டர் போடுன்னு சொல்றானே, இவன் ரோடு போடுறானா சார்?  அவர் கேட்கும் ஆயிரக்கணக்கான ஆவேசக் கேள்விகளில் இதுவும் ஒன்று.  அவர் என்றது ஆட்டோக்காரரை.
சரி, எல்லாவற்றையும் விடுங்கள்.  நானே அரசியல், சமூகம், பொருளாதாரம் என்ற தலைப்புகளில் எழுத நினைக்கும் போது அந்த ஆட்டோக்காரருடன் ஒரு ரவுண்டு போய் விட்டு வந்துதான் எழுதுவேன்.  நான் என்ன அமார்த்யா சென்னா?  எனக்குத் தெரிந்தது சினிமா, இலக்கியம், aphrodisiac.  அவ்ளோதான்.  சமீபத்தில் ஒரு வாசகர் அமார்த்யா சென் பற்றி உங்கள் கருத்து என்ன என்று அந்திமழையில் கேட்டிருந்தார்.  தொடரையே நிறுத்தி விட்டேன்.
 
சரி, இதிலெல்லாம் தப்பில்லை.  பிறகு ஏன் ஐயா நொய் நொய் என்று நொய்ந்து கொண்டிருக்கிறாய் என்று கேட்கிறீர்களா?  நீங்கள் நேற்று ஒரு மெஸேஜை வாட்ஸ் அப்பில் தட்டி விட்டீர்கள்.  இனிமேல் என்னுடைய தி இந்து கட்டுரை – சொல்லத் தோணுது – தி இந்துவில் மட்டுமே வரும்.  வாட்ஸ் அப்பில் வராது.  இது போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லாம் வீண்.  இதில் படிப்பவர்களெல்லாம் வீண்.  இவர்களெல்லாம் தெருவுக்கு வந்து போராடத் துணிவு இல்லாதவர்கள்.  அதனால் நிறுத்தி விடுகிறேன்.
 
இந்த அறிவிப்பைப் படித்து விட்டுத்தான் இவ்வளவு பெரிய பிலாக்கணத்தை எழுதத் துணிந்தேன்.  ஏன் தங்கர், நீங்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?  மகாத்மா காந்தி என்றா?  அவர் இளைஞர்களுக்கு அறைகூவல் விட்டார்.  இளைஞர்கள் அத்தனை பேரும் கல்லூரிப் படிப்பை விட்டு விட்டு, குடும்பத்தை விட்டுப் போராட்டத்தில் குதித்து சிறைக்குச் சென்றார்கள்.  நீங்களும் அப்படியா?
 
அதற்கு முன்னால் நீங்கள் என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  நீங்கள் எழுதுவது ஒரு எழுத்தாளனின் இடத்தில்.  இல்லை; நானும் எழுத்தாளன் தான்; நானும் நாவல், சிறுகதை எல்லாம் எழுதியிருக்கிறேன் என்று சொன்னால் நரசிம்மராவும் எழுத்தாளர் தான்.  அவரும் நாவல் எழுதியிருக்கிறார்.  அப்துல் கலாமும் எழுத்தாளர் தான்.  அவரும் நூல் எழுதியிருக்கிறார்.  அவ்வளவு ஏன், நம்முடைய இனிய நண்பர் கோபிநாத்தும் எழுத்தாளர்தான்.  அவரும் தான் விகடனில் தொடர் எழுதுகிறார்; அவர் எழுதிய புத்தகம் முப்பது லட்சம் விற்கிறது.  வைரமுத்து தன் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் கமிட்டிக்கு அனுப்பியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்.  பார்த்திபன் கவிதைத் தொகுதி எழுதியிருக்கிறார்.  தனுஷ் கவிஞராகி விட்டார்.  சிவக்குமாரின் நூலை திருப்பூர் கிருஷ்ணன் தனக்குப் பிடித்த பத்து நூல்கள் வரிசையில் வைக்கிறார்.   
 
ஐயோ உலக நாயகனை விட்டு விட்டேனே…  அவர் எழுதிய கவிதையை நியூஸ் சைரன் பத்திரிகையில் படித்தீர்களா இல்லையா?  இல்லையென்றால் நீங்கள் ஒரு கவிதா அனுபவத்தை இழந்து விட்டீர்கள் என்றே அர்த்தம்.  ஆனானப்பட்ட ஜெயமோகனே அந்தக் கவிதை அற்புதமாக இருப்பதாகச் சொன்னார்.  (அப்படி எனக்குக் கனவு வந்தது.  என்னைப் பொறுத்தவரை கனவும் நனவும் ஒன்றுதான்.)   ஆக, என் அருமைத் தங்கர், நான் சொல்ல வருவது என்னவென்றால், சினிமாவில் இருப்பவர்கள்தான் பத்திரிகைகளில் கேள்வி பதில் எழுத வேண்டும்; கவிதை எழுத வேண்டும்; தொடர்கதை எழுத வேண்டும்; சமூக நீதிக்காகப் போராட வேண்டும்; அரசியலில் குதிக்க வேண்டும்; முதலமைச்சர் ஆக வேண்டும்; எல்லாமே உங்களுக்குத்தான்.  சரி, எடுத்துக் கொள்ளுங்கள்.  யார் வேண்டாம் என்றது?  ஆனால் இந்தப் பிச்சைக்காரப் பயல்களான எழுத்தாளனின் இடமும் வேண்டும் என்று அடம் பிடித்து அதையும் அபகரித்துக் கொள்கிறீர்களே, அது நியாயமா?
உங்களுக்கெல்லாம் சம்பளம் கோடிகளில்.  ஆனால் இங்கே எழுத்தாளர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  கோபி கிருஷ்ணன் என்று ஒரு எழுத்தாளன் இருந்தான்.  க்ரியா, நக்கீரன், பாக்கெட் நாவல் என்று பல இடங்களில் வேலை பார்த்தான்.  கடைசியில் அவனால் எங்கேயும் நிலைக்க முடியவில்லை.  எனக்கு அவனை மிக நன்றாகத் தெரியும்.  குடும்பத்தை நடத்துவது அவனுடைய மனைவி.  அவன் என்னிடம் சொன்னதுண்டு.  மாசம் ஐநூறு இருந்தால் போதும்; பிழைத்துக் கொள்வேன்.  மாதாந்திர செலவுக்கானது அந்தப் பணம்.  சிகரெட்டுக்கும் டீக்கும்.  அவனுடைய கதையை எடுத்துக் கொண்டு பிச்சைக்கார ஐநூறு ரூபாய்க்காக ஒவ்வொரு பத்திரிகையாக அலைந்திருக்கிறேன்.  தர்மு சிவராமு எந்த வேலையும் செய்யாமல் நண்பர்களின் உதவியிலேயே வாழ்ந்து செத்தான்.  மற்ற எழுத்தாளர்கள் அத்தனை பேரும் ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை செய்தே வாழ்ந்தார்கள்.  வண்ணதாசனும் கலாப்ரியாவும் வங்கிகளில்.  வண்ணநிலவன் துக்ளக் அலுவலகத்தில்.  பூமணி ஒரு அரசு அலுவலகத்தில்.  நீங்கள் சோற்றுப்பாட்டுக்கு ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டா ஒளி ஓவியம் செய்கிறீர்கள்?  வேறொரு அடிமை உத்தியோகம் பார்த்துக் கொண்டா ஆவேசக் கட்டுரை எழுதுகிறீர்கள்?
 
எனக்கு நேற்று ராயல்டி ஸ்டேட்மெண்ட் வந்தது.  நீங்கள் குடும்பத்தோடு இரவு உணவுக்குப் போனால் எவ்வளவு பில் வருமோ அவ்வளவுதான் என் வருடாந்திர ராயல்டி தொகை.  தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்தேன்.  நிறைய வேலை பாக்கி இருக்கிறது.  அதனால் மல்லாக்கப் படுத்துக் கொண்டு காறித் துப்பிக் கொண்டேன்.  கூலியே இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம் தங்கர்.  இங்கே எங்களுடைய இடத்தைப் பிடுங்கி எழுதிக் கொண்டு, உங்கள் எழுத்தைப் படித்து யாரும் தெருவில் இறங்கிப் போராடவில்லை என்று எழுத உங்களுக்கு எவ்வளவு தில் இருக்க வேண்டும்?  இந்த ’தில்’லை நான் சினிமாவில் இருப்பவர்களிடம் மட்டுமே பார்க்கிறேன்.  
 
காரணம், தமிழர்கள் உங்களை கடவுள் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கிறார்கள்.  அதுதான் உங்களுக்கு அந்த ’தில்’லைக் கொடுக்கிறது.  உங்களிடம் – அதாவது, சினிமா கலைஞர்களிடம் – உள்ள அதிகாரம் பற்றி என்றைக்காவது நீங்கள் யோசித்துப் பார்த்ததுண்டா?  நினைத்தால் நீங்கள் முதல்மந்திரியோடு பேசலாம்.  ஒரே ஒரு படம் எடுத்து விட்டால் போதும்.  அது ஓடியதா இல்லையா என்பது கூடத் தேவையில்லை.  பருத்தி வீரன் எடுத்தார்.  அடுத்த கணமே அவர் தெருவில் இறங்கிப் போராடினார்.  தமிழகத்தின் சே குவேரா.  எழுத்தாளன் அப்படி இறங்கினால் சந்தேகக் கேஸில் போட்டு சூத்துக் கறியை அறுத்து விடுவார்கள்.  எங்களுக்கு இங்கே அடையாளமே இல்லை. இவ்வளவு சலாம் வரிசை எடுக்கிறீர்களே, ஜெயமோகன் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?  அவர் எழுதிய அளவுக்கு இந்த உலகத்திலேயே எந்த எழுத்தாளனும் எழுதியது இல்லை.  காசு?  எல்லாம் ஓசி.  இணையத்தில் ஓசியில் எழுதுகிறார்.  ஆனாலும் அவர் சினிமாவுக்கும் எழுதுவதால் பணம் வருகிறது.  
 
எஸ்.ராமகிருஷ்ணனை அன்றொரு நாள் தருண் தேஜ்பாலுக்கு அறிமுகம் செய்த போது இவர் 150 புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றேன்.  தருண் மிரண்டு போனான்.  அந்த அளவுக்கு இங்கே எழுதிக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் காசு?  பிரபஞ்சன் என்னை நக்கல் செய்தார்.  நான் வாசகர்களிடம் பிச்சை எடுக்கிறேனாம்.  அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த போது தேவைப்பட்ட ஐந்து லட்சத்தையும் கொடுத்தது ஒரு இயக்குனராம்.  எப்படி இருக்கிறது பாருங்கள்.  என்னைப் பிச்சைக்காரன் என்று சொன்னவரின் நிலை அது.  ஞாநி தான் முதலில் இதைக் குமுதத்தில் எழுதினார்.  சாரு ஒரு இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று.  என் பெயரைப் போடாமல் கூட இருந்திருக்கலாம்.  அது முக்கியம் இல்லை.  பெயரைப் போடாவிட்டாலும் ஆள் யாரென்று தெரியாதா?  இப்போது ஞாநிக்கு சனி திசை போல.  அவரே எனக்கு மாசம் 40,000 ஆகிறது, என்ன செய்வது என்று தெரியவில்லை என்று இணையத்தில் எழுதியிருக்கிறார்.  என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று நக்கல் செய்தவருக்கு அந்த நிலை.  
 
புரிகிறதா தங்கர், நான் என்ன சொல்ல வருகிறேன் என்று?  ஞாநி 40 ஆண்டுகளாக பத்திரிகைகளில் சமூக நீதி குறித்து எழுதி வருகிறார்.  அவருக்கே இதுதான் நிலை.  பிரபஞ்சன் 50 ஆண்டுகளாக எழுதுகிறார்.  அவருக்கும் இதுதான் நிலை.  சுஜாதா எழுத்துலக ரஜினி.  இல்லையா?  அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த போது கையில் காசு இல்லாமல் இயக்குனர் மணிரத்னம் தான் 50,000 ரூ தந்தார் என்று பத்திரிகைகளில் படித்தேன்.
 
ஆனால் உங்களுக்கெல்லாம் லட்சங்களில், கோடிகளில் சம்பளம். உங்கள் பிள்ளைகளெல்லாம் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் தான் படிக்கிறார்கள்.  உங்கள் மகன் அமெரிக்காவில் நடிப்புத் துறையில் படித்தவர் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள்.  வீட்டிலேயே ஜிம்.  சொகுசு கார்.  நீங்களெல்லாம் இன்றைய தமிழ்நாட்டின் வழிபாட்டுக் கடவுள்கள்.  நீங்கள் சொல்கிறீர்கள், மக்கள் இறங்கிப் போராடவில்லை என்று.  நாங்கள் எங்கள் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிப் படிக்க வைத்து சொகுசு பங்களாக்களில் வாழ்வோம்; ரேஷன் கடையில் போய் நாயைப் போல் நின்று கொண்டிருக்கும் தறுதலைகளான நீங்கள் போராடிச் சாகுங்கள் என்று சொல்கிறீர்களா?
 
எழுதுங்கள் தங்கர்… உங்கள் காலம்… உங்கள் தேசம்… நடத்துங்கள் உங்கள் ராஜ்ஜியத்தை…
 
கடைசியாக ஒரு வார்த்தை.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மற்ற யாரையும் பேசவே விடாமல் நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்களே, இது எத்தனை பெரிய அராஜகம், ஜனநாயக மறுப்பு என்று உங்களுக்குத் தெரியுமா?  இதையெல்லாம் சுட்டிக் காட்ட உங்களுக்கு ஒரு நண்பர் கூட இல்லாதது உங்களைப் பார்த்து என்னைப் பரிதாபம் கொள்ளச் செய்கிறது.  இப்படியெல்லாம் சுட்டிக் காட்டிய என்னை எதிரி என்பீர்களா, நண்பன் என்பீர்களா?
 
என்றும் உங்கள் நண்பன்,
 
சாரு