1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (12:41 IST)

தமிழின் டாப் கான்ட்ரவர்சிகள்

தமிழின் டாப் கான்ட்ரவர்சிகள்

செத்த கிளிக்கு எதுக்கு தங்கச் சிறகு?
 
த லெஜென்ட் ஆஃப் புண்ணியகோடி என்ற சமஸ்கிருத அனிமேஷன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்போசிஸில் பணியாற்றும் ரவிசங்கர் என்பவர் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இசை இளையராஜா. 


 
 
புண்ணியகோடி என்ற பசுமாட்டின் தூய்மை, உண்மை, நேர்மையின் வழியாக மனிதர்களுக்கு இவற்றை போதிக்கும் படமாம் இது. இந்தப் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
 
சமஸ்கிருதம் பேச்சு மொழியல்ல. அதனை பேச்சு மொழியாகக் கொண்டவர்கள் இந்தியாவில் இல்லை. கோவில்களில் வேத மொழியாக மட்டுமே அது உள்ளது. மோடி அரசு சமஸ்கிருதத்தை வலிந்து திணித்துவரும் நிலையில், பேச்சு வழக்கில் இல்லாத மொழியில் ஒரு திரைப்படம் எடுப்பது, அம்மொழியை வலிந்து திணிக்கும் ஒரு முயற்சியே என்பது தமிழார்வலர்களின் கருத்தாக உள்ளது. கவனிக்க... தனிப்பட்ட முறையில் ஒருவர் சமஸ்கிருதம் படிப்பதை, கற்றுக் கொள்வதை இங்கு யாரும் எதிர்க்கவில்லை.
 
இரண்டாவது இந்த அனிமேஷன் படத்தின் கதை. புண்ணியகோடி என்ற பசுமாட்டை புலி பிடித்துவிடுகிறது. உடனே அந்த பசுமாடு, என்னுடைய கன்றுக்கு பால் கொடுக்க வேண்டும், அதை கொடுத்துவிட்டு வருகிறேன், அதன் பிறகு என்னை கொன்றுவிடு என்கிறது (கன்னுகுட்டி அடுத்தவேளை பாலுக்கு என்ன செய்யுமாம்?). புலியும் அதனை விட்டுவிடுகிறது. பசுவும் கன்றுக்கு பால் கொடுத்துவிட்டு, புலியிடம் அதற்கு இரையாவதற்காக வருகிறது. அதன் நேர்மையை கண்டு புலியும் அதனை கொல்லாமல் விட்டுவிடுகிறது.
 
பசுவை கொல்கிறார்கள், மாட்டு இறைச்சி உண்ணுகிறார்கள் என்று மனிதர்களை அடித்து நொறுக்கும், கொலை செய்யும் காலகட்டத்தில் பசுவை மேலும் புனிதப்படுத்தும் விதமாக, இந்தப் படம் உருவாகியுள்ளது. புலியே பசுவை கொல்லாமல் விடுகிறது என்ற கதையின் மூலம், மாட்டுக்கறி சாப்பிடுவதை இந்தப் படம் கொடூரமான செயலாக சித்தரிக்கிறது. இன்று மோடி அரசும், இந்துத்துவா அடிப்படை சக்திகளும் நடத்தும் மாட்டுக்கறி அரசியல் வன்முறைக்கு தூபம் போடுவதாகவே இந்தப் படம் உள்ளது.
 
இந்த அரசியல் ஒருபுறம் இருக்கட்டும். பசு பெண். அந்த பசுவுக்கு ஆண் பெயரான புண்ணியகோடியை வைத்திருக்கிறார்கள். இந்த புண்ணியகோடிக்கு டப்பிங் பேசப் போவது நடிகை ரேவதி. 
 
என்ன டிசைன்பா இது?
 
விஜய் வீட்டுமுன் ஆர்ப்பாட்டம்
 
படப்பெயர்களுக்கு பஞ்சமா அல்லது ரஜினி, எம்ஜிஆர் படங்களின் பெயரை வைத்தால் உடனடி விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்று நினைக்கிறார்களா?
 
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு, எங்க வீட்டுப் பிள்ளை என்று பெயர் வைக்கவிருப்பதாக தகவல். எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளையை தயாரித்த விஜயா ஸ்டுடியோஸே விஜய் படத்தையும் தயாரிப்பதால் பெயரை வைக்க யாருடையை அனுமதியையும் பெற வேண்டியதில்லை. ஆனால், எம்ஜிஆர் இன்றும் பல்லாயிரம் ரசிகர்களின் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரது புகழின் ஒரு துணுக்கைக்கூட இன்னொருவர் எடுத்துக் கொள்வதை பொறுக்காதவர்கள் ரசிகர்கள்.
 
எங்க வீட்டுப் பிள்ளை என்றால் அவர்களுக்கு எம்ஜிஆர் மட்டுமே. அதனை விஜய்க்கு விட்டுத்தர அவர்கள் தயாராக இல்லை.
 
அனைத்துலக எம்ஜிஆர் பொதுநல சங்கத்தினர், எங்க வீட்டுப் பிள்ளை பெயரை விஜய் படத்துக்கு வைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, வரும் 14 -ஆம் தேதி விஜய் வீட்டுமுன் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அதற்குப் பிறகும் பெயரை பயன்படுத்தினால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.
 
என்ன நடந்தாலும், எங்க வீட்டுப் பிள்ளை என்ற உரிமையை எம்ஜிஆரை தவிர்த்து வேறு யாருக்கும் தர அவர்கள் தயாராக இல்லை.