வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2015 (10:02 IST)

தமிழகத்தில் தமிழ்ப் படங்களை முந்தும் ஆங்கில, இந்திப் படங்கள்

என்ன ஆச்சு தமிழ் திரையுலகுக்கு? படங்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரிக்கும் போது, படங்களின் வெற்றி சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. அதுவும் சமீபமாக எந்தப் படமும் சரியாகப் போகவில்லை. பட்ஜெட்டை வைத்துப் பார்த்தால், ஒரேயொரு விதிவிலக்கு காக்கா முட்டை.
 
காக்கா முட்டை போன்றவை அரிதாக எப்போதாவது நடக்கும் அதிசயம். அதனை விட்டுவிடலாம். மற்ற படங்கள்? தமிழ் சினிமாவின் மந்தகதியை பயன்படுத்தி இந்தி மற்றும் ஆங்கிலப் படங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. முக்கியமாக நகர்ப்புறங்களில்.
 

 
இந்தியில் சமீபமாக வெளியான பிக்கு, தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ஏபிசிடி 2 ஆகியவை சென்னை பாக்ஸ் ஆபிஸில் பல வாரங்கள் டாப் 5 -க்குள் இடம்பிடித்தன. பல தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்காத வசூல் இந்தத் திரைப்படங்களுக்கு கிடைத்தன. 
 

 
சென்ற வாரம் தமிழில் வெளியான மூணே மூணு வார்த்தை திரைப்படம் சென்னையில் ஒரு லட்சத்தைகூட வசூலிக்கவில்லை என விநியோகஸ்தர் தரப்பு கூறுகிறது. விமல், சமுத்திரகனி நடித்த காவல் டாப் 5 -க்குள் இல்லை. அதேநேரம் ஏபிசிடி டாப் 5 -இல் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. விமலின் காவல் 12.5 லட்சங்களை வசூலிக்க ஏபிசிடி 2 இந்திப் படம் 13.4 லட்சங்களுக்கு மேல் வசூலித்துள்ளது. அதுவும் இரண்டாவது வார இறுதியில்.

சென்னை பாக்ஸ் ஆபிஸில் இந்த வாரம் அனைத்து நேரடித் தமிழ்ப்படங்களையும் பின்னுக்கு தள்ளி ஜுராஸிக் வேர்ல்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இப்படம் சென்னையில் 2.52 கோடிகளை வசூலித்துள்ளது. நம்புங்கள், இது மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தின் வசூலைவிட அதிகம். சமீபத்தில் வெளியான படங்களில் நல்ல வசூல் என்று சொல்லப்பட்ட ரோமியோ ஜுலியட் படத்தின் வசூல் இதைவிட குறைவு, 2.26 கோடிகள்.
ஆங்கில, இந்திப் படங்களின் ஆதிக்கம் நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்களுக்குள்ளும் ஊடுருவுகிறது. முக்கியமாக ஆங்கிலப்படங்கள். 
 
இந்திப் படங்கள் வழக்கமான கதைகளிலிருந்து தங்களை துண்டித்து புதிய கதைப்பரப்புக்குள் பிரவேசித்து தங்களுக்கான பார்வையாளர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. பிக்கு, தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படங்களின் வெற்றிகள் இதற்கு சான்று. 
 
மரபான கதைகளிலிருந்து, கதை சொல்லும் முறையிலிருந்து தமிழ் சினிமா தன்னைவிடுவித்துக் கொள்ளாதவரை இந்த ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது.