வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2015 (10:36 IST)

தமிழர் பிரச்சனைகளுக்கு நடிகர் சங்கம் போராடாது - விஷாலின் பேச்சு சரியா?

காவிரிப் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை போன்றவற்றிற்கு நடிகர் சங்கம் போராடாது என்று அறிவித்துள்ளார் விஷால்.
 

 


அதனை கண்டித்து தமிழ் தேசியவாதிகள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். விஷால் வீட்டை முற்றுகையிடும் போராட்டமும் நடந்துள்ளது.
 
விஷாலின் பேச்சு விஷமத்தனத்துடன் உள்ளதாக அனைவரும் கருதும் நிலையில், உண்மை நிலையை புரிந்து கொள்வது நமது கடமையாகும்.
 
நடிகர் சங்கம் உள்பட அனைத்து தமிழ் சினிமா சங்கங்களும் ஆளும் கட்சியை அண்டியே உள்ளன. அரசுக்கு ஒவ்வாத எந்தப் பிரச்சனையையும் அவர்கள் கண்டு கொள்வதில்லை. அரசை குளிர்விக்கும் நடவடிக்கைகளில் மட்டுமே அனைத்து சங்கங்களும் ஈடுபடும்.
 
இதற்குமுன் திரையுலகம் காவிரிக்காவும், ஈழத்துக்காகவும் நடத்திய போராட்டங்கள் அனைத்தும், ஆளும் கட்சியின் விருப்பத்தின்படியே நடந்தன. அரசின் விருப்பதைமீறி ஒரு அங்குலம் நகர்ந்ததில்லை நடிகர் சங்கம்.
 
திரைத்துறை சங்கங்கள் இதற்குமுன் நடத்திய அனைத்துப் போராட்டங்களும் ஆளுங்கட்சியின் வழிகாட்டுதலின்படியே நடந்திருக்கும் நிலையில், அப்படியான போராட்டங்களை நடத்தாமலிருப்பதே மேல்.
 
மேலும், இந்தப் போராட்டங்கள் அதன் பிரச்சனையை திசை திருப்பி மோசமான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும். அப்படித்தான் இதுவரை நடந்திருக்கிறது.
 
ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களின் போது, நடிகர்கள் வருகையில் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி போராட்டத்தின் நோக்கத்தையே கொச்சைப்படுத்தினர்.
 
நடிகர் சங்கம் உள்ளிட்ட திரைத்துறை சங்கங்களை ஆளும் கட்சி...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

தனது ஆதாயத்துக்கு பயன்படுத்தும் செயல், விஷாலின் பேச்சால் தடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தமிழர் விரோத நடவடிக்கையாக பார்ப்பது மிகவும் மேலோட்டமான பார்வை. 


 

 
காவிரிப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து தமிழர்நலப் பிரச்சனைகளும் ஒட்டுமொத்த தமிழர்களையும் பாதிப்பவை. அதற்காக போராடுவது என்றால் எல்லோரும்தான் போராட வேண்டும்.
 
அதை விடுத்து நடிகர்களை மட்டும் போராடு என்று களத்தில் இறக்கிவிடுவது, எல்லாவற்றிலும் நடிகர்களை முதன்மைப்படுத்தும் நமது ஆபாச குணத்தையே காட்டுகிறது. 
 
தனிப்பட்ட முறையில் இந்தப் பிரச்சனைகளில் ஒரு நடிகர் போராடுவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று விஷால் கூறியுள்ளார்.
 
நிச்சயம் இது வரவேற்கப்பட வேண்டிய முடிவு. தமிழ் தேசியவாதிகளின் வெற்றுக் கூச்சலுக்கு தமிழக மக்கள் செவிசாய்க்காமல் இருக்க வேண்டும்.