1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 29 மே 2015 (09:00 IST)

அதிக விலைக்கு திரையரங்கு கட்டணம் வசூலித்தால்... வழக்குப் போடுங்க பரிசு தருகிறோம்

தமிழ் சினிமாவின் வியாபார சீரழிவுக்கு பெரிதும் காரணமாக இருப்பது திரையரங்கு கட்டணக் கொள்ளை. புதுப்படங்கள் வெளியாகும் போது மட்டுமின்றி சாதாரண தினங்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்திலிருந்து பல மடங்கு அதிகம் திரையரங்குகள் வசூலிக்கின்றன. அதனால் பொதுமக்கள் திரையரங்குகளுக்கு செல்வதைத் தவிர்த்து திருட்டு விசிடிகளை நாடுகின்றனர்.
இந்த நேரடி பாதிப்பு மட்டுமின்றி திரைத்துறையின் அனைத்து சீரழிவுக்கும் இந்த கட்டண கொள்ளையே அடிப்படை காரணமாக உள்ளது. உதாரணமாக லிங்கா பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். படம் வசூலிக்கவில்லை என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும். ஆனால், அவர்கள் சொல்லும் அளவுக்கு நஷ்டம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எப்படி நிரூபிப்பது? டிக்கெட் கட்டணத்தை மட்டும் வசூலித்திருந்தால், டிக்கெட் விற்பனையை வைத்து கண்டுபிடிக்கலாம். ஒரு டிக்கெட்டுக்கு பத்து மடங்கு விலை வைத்து விற்பனை செய்ததால் தயாரிப்பாளர் தரப்பால் லிங்காவின் உண்மையான வசூலை கணக்கிட முடியவில்லை. திணறுகிறார்கள்.
 
இத்தனைக்குப் பிறகும், திரையரங்குகள் சரியான டிக்கெட் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று நடிகர்களோ தயாரிப்பாளர்களோ கூறமாட்டார்கள். இந்த கட்டணக் கொள்ளையால் மட்டுமே மிகப்பெரிய ஓபனிங்கை பெற்று அவர்களின் சுமாரான படங்களும் ஓரளவு வசூலை பெறுகின்றன. இவர்களின் கூட்டுக் கொள்ளையால் பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்கள்.
 
திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலித்தால் அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் செய்யுங்கள், உதவ நாங்கள் இருக்கிறோம், பரிசும் தருகிறோம் என ஆன்டி கரெப்ஷன் அண்ட் க்ரைம் அமைப்பு முன்வந்துள்ளது. இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
 
வணக்கம் நண்பர்களே... தோழர்களே...
 
சூர்யா நடிக்கும் மாஸ் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இந்த திரைப்படங்களை நாம் காண்பதற்கு முன், தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் விற்பனை, புக்கிங் செய்கிறர்களா என்று கவனிக்கவும்.
 
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக விலையில் நுழைவுச்சீட்டு (டிக்கெட்) விற்பனை செய்தால் அது சட்ட விரோதமானது. மேலும், பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் மோசடி செயல்.
புதிய திரைப்படங்களை பார்த்து மகிழும் நாம், அதே வேளையில் உஷாராக இருக்கவேண்டிய தருணம் இது.
 
ஆம்... பொதுமக்களே உஷார்... உஷார்... உஷார்....
 
திரையரங்குகளில் கூடுதல் விலைகொடுத்து நுழைவு சீட்டு வாங்காதீர்...

நுழைவு சீட்டில் திரையரங்கு பெயர் மற்றும் நுழைவு கட்டணம் (டிக்கெட் விலை) குறிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
 
இவ்விவரங்கள் இல்லை என்றாலும்,கூடுதல் விலையில் விற்பனை செய்தாலும் அருகில் உள்ள காவல் நிலையம்,மாநகர காவல் துறை ஆணையாளர், சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு கொடுக்கவும். காவல்துறையிடமிருந்து உடனடியாக சி.எஸ்.ஆர். , எப்.ஐ.ஆர் பெறவும்.
கூடுதல் விலையில் விற்பனை செய்யும் திரையரங்குகள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுங்கள், எங்களிடம் சி.எஸ்.ஆர் நகல் மற்றும் படம் பார்த்து டிக்கெட் கொடுங்கள். நாங்கள் உங்களுக்கு சிறப்பு பரிசு வழங்குகின்றோம். கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்தால் நுகர்வேர் நீதிமன்றத்தை அணுகவும்.
 
திரைப்படங்களை திரையரங்கத்தில் மட்டுமே பாருங்கள்... திருட்டு வி.சி.டி.க்களை தவீர்ப்பீர்...
 
உங்கள் ஒவ்வொரு முயற்சிக்குப் பின்னால் நாங்கள் இருக்கின்றோம்.
 
இப்படிக்கு,
 
அகில இந்திய நுகர்வோர் மற்றும் மனித செயல்பாட்டுக்கு 
எதிரான லஞ்சம் ஊழல் மற்றும் குற்றத்திற்கான எதிர்ப்பு இயக்கம்.
 
இவர்கள் சென்னை மாநகரிலுள்ள திரையரங்குகளின் கட்டண விவரத்தையும் தங்களது அறிவிப்பில் இணைத்துள்ளனர்.