1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : புதன், 15 ஜூன் 2016 (15:21 IST)

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்

தமிழ் சினிமாவில் கானட்ரவர்சிகளுக்கு பஞ்சமில்லை. இன்றைய தேதியில் கோடம்பாக்கத்தில் அதிகம் பேசப்படும் ஐந்து கான்ட்ரவர்சிகள் இவைதான்.


 
 
கழற்றிவிட்ட களவாணி
 
களவாணி நடிகர் இதுவரை பரோட்டா காமெடியுடன்தான் இணைந்து நடித்து வந்தார். இந்நிலையில் பாண்டியனார் இயக்குகிற படத்தில் களவாணி நடிகருடன் ரோபோ காமெடியார் இணைந்திருக்கிறார். பரோட்டா வேண்டாம், உடல்நலனுக்கு கேடு என்று விலக்கி வைத்தது களவாணி நடிகரேதானாம். ஏன் இந்த முடிவு?
 
இதற்கு முந்தைய மாப்ள படத்தில் சிங்கிளா சிங்கம் போல் நான்தான் இருக்கணும், அதனால பரோட்டாவோட போர்ஷனை குறைச்சிடுங்க என்று சொன்னாராம் களவாணி நடிகர். இல்லை, பரோட்டா நடிகர்தான் களவாணி நடிகர் அளவுக்கு எனக்கு முக்கியத்துவம் வேணும் என்று கேட்டார் எனவும் சொல்கிறார்கள். எப்படியோ... அதில் ஏற்பட்ட விரிசலில்தான் பரோட்டா உடல்நலத்துக்கு கேடு என்று முடிவெடுத்தாராம்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க...........

காட்டன் வீரன் கலெக்ட் பண்ணுவாரா?
 
நடிகர்களின் மார்க்கெட் தெரியாமல் செலவு செய்து மாட்டிக் கொண்டவர்கள் இங்கு ஏராளம். காட்டன் வீரன் இரண்டு வேடங்களில் நடிக்கும் படத்தின் பட்ஜெட் இதோ அதோ என்று அறுபது கோடிகளை தொட்டிருக்கிறது. இந்தப் பணம் தயாரிப்பாளருக்கு திரும்ப கிடைக்க வேண்டுமென்றால் படம் குறைந்தபட்சம் எண்பது கோடிகளுக்கு மேல் சூலிக்க வேண்டும். நடிகரின் இன்றைய சந்தை நிலவரப்படி நாற்பதுக்கே நாக்கு தள்ளிவிடும். எண்பது எல்லாம் எப்படி சாத்தியம்? கண்டெய்னரில் அடைக்க வேண்டிய பாரத்தை ஆல்டோ காரில் ஏற்றினால்...? அதே கதைதான் இங்கேயும்.
 
காதல் கொண்ட இயக்குனர் பிரியாணி நடிகரை வைத்து இப்படியொரு ஆட்டம் பாமை எடுத்தார். செகண்ட் வேர்ல்ட் என்ற அந்தப் படத்தின் பெரும் சுமையிலிருந்து விடுபட இயக்குனருக்கு பல வருடங்கள் ஆனது. அப்படியொரு நிலைமை காட்டன் வீரன் படத்துக்கு ஏற்படாமலிருக்கட்டும்.


 
 
வதந்தி கிளப்பி வறுக்காதீங்க...
 
காட்டன் வீரனின் அண்ணனை பற்றியது இது. அவர் நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் தோல்வியே கண்டன. வெற்றி பெற்றதாக சொல்லப்பட்ட டுவென்டிஃபோர் படமும் பல இடங்களில் நஷ்டத்தையே சந்தித்தது. பெருமைக்காக உள்காயங்களை வெளியே காட்டவில்லை நடிகர். இந்நிலையில், பூ நடிகையின் கணவர் இயக்கும் பிரமாண்ட சரித்திர படத்தில் இவர் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
பார்த்துப் பார்த்து ஒப்புக் கொள்கிற பெரிய இயக்குனர்களின் படங்களே தோல்வியடைகிற நிலையில், அடுத்து என்ன செய்யலாம் என்ற பெரும் குழப்பம் நடிகருக்கு. இதில் பூ கணவரின் படத்தில் நடிப்பதாக இஷ்டத்துக்கு எழுதி நடிகரின் பிபியை ஏற்றுகிறார்கள். மகா ஜனங்களே... நடிகர் அந்தப் படத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்றால் நம்பாதீர்கள். அவர் நடிப்பது சிங்கத்தின் மூன்றாவது கர்ஜனையில் மட்டும்தான்.
 
அந்த ஏழையே நீங்கதான்
 
உச்ச நடிகர் கொடுக்கிற உழைப்பை வைத்து சம்பளம் வாங்குவதில்லை. படத்துக்கு கிடைக்கும் லாபத்தை வைத்துதான் சம்பளமே. அவரை பிரச்சனையுடன் லிங்க் பண்ண வைத்த படத்தில் அவர்தான் சைலண்ட் தயாரிப்பாளர் என்கிறார்கள். இதை வைத்து பார்த்தால் ஐம்பது கோடிகளை எல்லாம் அனாயாசமாக தாண்டும் உச்சத்தின் சம்பளம். நிலைமை இப்படியிருக்க, 350 கோடியில் தயாராகும் படத்தில் உச்சத்தைவிட அவருக்கு வில்லனாக நடிக்கும் இந்தி நடிகருக்கே அதிக சம்பளம் என்று செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
 
இரண்டு படங்களில் தொடர்ந்து நடிக்கிறார், ஐடி பிரச்சனை வந்துவிடக் கூடாது என்று உச்சத்தின் நலம்விரும்பிகள் செய்த வேலையாகத்தான் இந்த செய்தியை பார்க்க வேண்டியிருக்கிறது. உச்சத்தின் படத்தில் அவரைவிட இன்னொருவர் அதிக சம்பளம் வாங்குவதாவது. விட்டால் அந்த பரம ஏழையே இவர்தான் என்பார்களோ.