வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 4 ஜூன் 2016 (16:53 IST)

கோடை விடுமுறையை கோட்டைவிட்ட தமிழ் சினிமா

கோடை விடுமுறையை கோட்டைவிட்ட தமிழ் சினிமா

கடந்த சில வருடங்களாக தமிழில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை வருடத்துக்கு 200- ஐ தாண்டி விடுகின்றன. படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெற்றிப் படங்களின் எண்ணிக்கை உயர்வதில்லை.


 


நூற்றுக்கு பத்துசதவீத வெற்றியைகூட பெற முடிவதில்லை என்பதே உண்மை.
 
கோடை விடுமுறையான மே மாதத்தில் இரண்டு மூன்று படங்களாவது மிகப்பெரிய வெற்றியை ஈட்டும். இந்த வருட மே யில் 17 படங்கள் வெளியாயின. இதில் எத்தனை வெற்றி...?
 
மே 6 - 24, எடால், நான் யார், உன்னை முதல் பார்த்தேன்
 
மே 6 -ஆம் தேதி நான்கு படங்கள் வெளியாயின. நான்கில் சூர்யாவின் 24 படத்துக்குதான் எதிர்பார்ப்பு. கால எந்திரத்தை மையப்படுத்திய இந்தப் படம் அமர்க்களமான ஓபனிங்கை பெற்றது. படத்தின் கதையும், திரைக்கதையும் பிரமாண்ட ஓபனிங்கை தக்க வைக்க போதுமானதாக இல்லை. படம் பல இடங்களில் நஷ்டத்தை சந்தித்தது. அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி என தொடர் தோல்விகளில் இருந்த சூர்யாவும், அவரது சுற்றமும் நட்பும் 24 ஹிட் என்று சொன்னாலும் பல இடங்களில் படம் நஷ்டம் என்பதே உண்மை. 
 
மற்ற மூன்று படங்கள் ரசிகர்களின் கவனத்தையே கவராமல் பெட்டிக்குள் முடங்கின.
 
மே 13 - ஜம்புலிங்கம் 3டி, இணைய தலைமுறை, பென்சில், உன்னோடு கா, கோ 2
 
மே 13 ஐந்து படங்கள். ஜீ.வி.பிரகாஷ் முதல்முறையாக நடித்த பென்சில் பல மாத காலதாமதத்துக்குப் பின் வெளியானது. ஏன் வெளியானது என்று அனைத்துத்தரப்பினரும் நினைக்கும் அளவுக்கு இருந்தது படம். 
 
பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான கோ 2 படமும் சுமாராகவே போனது. அரசியல் படமான இது ரசிகர்களை கவரவில்லை.
 
மற்ற மூன்று படங்கள் இந்த வருடத்தின் படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே உதவின.
 
மே 20 - மருது, ஸ்லம்டாக் கோடீஸ்வரன், கத சொல்லப் போறோம்
 
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான மருது அதன் சாதி அடையாள வசனங்கள் மற்றும் காட்சிகளால் ஒவ்வாமையை உண்டாக்கியது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பன்ச் வசனம் பேசினால் காது பஞ்சராகாமல் என்ன செய்யும். ரத்தக்களரியான சண்டைக் காட்சிகளும் ஒருவகையில் பலவீனம்தான். முத்தையா தனது ட்ரேட்மார்க் சாதி பிராண்டை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு மருது எச்சரிக்கை மணி அடித்துள்ளது. படம் கமர்ஷியலாக சுமாராகவே போயுள்ளது. சென்னையில் முதல் 10 தினங்களில் 1.76 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.
 
மற்ற இரு படங்கள் எண்ணிக்கையாக மட்டுமே எஞ்சின.
 

 
 
மே 27 - சுட்ட பழம் சுடாத பழம், ஜெனிஃபர் கருப்பையா, மீராஜாக்கிரதை, உறியடி, இது நம்ம ஆளு
 
சுட்ட பழம் சுடாத பழம், ஜெனிஃபர் கருப்பையா இரு படங்களும் வந்த வேகத்தில் பெட்டிக்குள் எகிறின. மீரா ஜாக்கிரதை படம் கனத்த பஞ்சாயத்துடன் வெளியாகி ஒரே நாளில் பஞ்சரானது.
 
உறியடி திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால், அறிமுகமில்லாத நடிகர்கள், இயக்குனர் காரணமாக இந்தப் படம் ரசிகர்களின் கவனத்தில் பதியவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
 
சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்பு காரணமாக முதல் மூன்று தினங்களில் சென்னையில் மட்டும் 1.18 கோடியை வசூலித்தது. ஆனால், வார நாட்களில் இது நம்ம ஆளு திரையரங்குகள் சோபையிழந்து காணப்படுகின்றன. படம் போட்ட காசை திருப்பினால் லாபம்.
 
மொத்தத்தில் இந்த வருட கோடையை தமிழ் சினிமா கோட்டைவிட்டுள்ளது என்பதே சரியாகும்.