1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: சனி, 14 மே 2016 (10:34 IST)

சம்மர் சினிமா - தமிழ் சினிமாவுக்கு லாபமா? நஷ்டமா?

சம்மர் சினிமா - தமிழ் சினிமாவுக்கு லாபமா? நஷ்டமா?

இந்த கோடை தமிழ் சினிமாவுக்கு சிறப்பாக இருக்குமா என்ற கேள்வி இன்னும் ஊசலாடிக்கொண்டுதான் உள்ளது.


 


இதுவரை வெளியான படங்களில் தெறி மட்டுமே ப்ளாக் பஸ்டர் ஹிட்டுடன் தமிழ்ப்பட வியாபாரத்துக்கு மூச்சளித்திருக்கிறது.
 
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் 24, முதல் மூன்று தினங்களில் அட்டகாசமான வசூலை பெற்றாலும் வார நாள்களில் படத்தின் வசூல் கணிசமாக குறைந்துள்ளது. அனைத்துத் தரப்பினருக்கும் படம் லாபத்தை தருமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
 
இந்நிலையில் இன்று போபி சிம்ஹாவின் கோ 2, ஜீ.வி.பிரகாஷின் பென்சில் உள்பட 4 படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மேஜிக்கை நிகழ்த்தும் எந்த வஸ்துவும் இல்லாதவை. 
 
அதேநேரம், அடுத்தவாரம் வெளியாகவிருக்கும் இரு படங்களும் எதிர்பார்ப்புக்குரியவை.
 
ஒன்று சிம்பு நடித்துள்ள, இது நம்ம ஆளு. என்னதான் பிரச்சனைகளை சந்தித்தாலும் முன்னாள் காதலர்களான சிம்பும், நயன்தாராவும் இணைந்து நடித்திருப்பதால் படத்தை காண ரசிகர்கள் ஆவல் பொங்க உள்ளனர். விநியோகஸ்தர்களும் கல்லாவை திறந்து காத்திருக்கிறார்கள். இது நம்ம ஆளின் பாடல்கள் சோபிக்காதது ஒரு குறை. என்றாலும் போட்ட காசை படம் திருப்தியாக வசூலிக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.
 
இன்னொரு படம், விஷாலின் மருது. முத்தையா இயக்கியிருக்கும் இன்னொரு கிராமத்து அடிதடி படம். 
 
இதில் விஷால் மூட்டை தூக்குகிறவராக வருகிறார். வன்முறை மற்றும் சாதி அபிமான காட்சிகள், வசனங்கள் காரணமாக மருதுக்கு தணிக்கைக்கழு யுஏ சான்றிதழே அளித்துள்ளது. அதனால் 100 ரூபாய் வசூலானால் முப்பது ரூபாயை அரசுக்கு தரவேண்டிய நெருக்கடியை மருது எதிர்கொள்கிறது. படத்தின் மிகப்பெரிய மைனாசாக இது உள்ளது. 
 
இந்தத் தடையை தாண்டியும் மருது வசூலிக்கும் என்ற நம்பிக்கை விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களிடம் உள்ளது ஆச்சரியம். 


 
 
கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆரம்ப நாள்களும் திரைத்துறைக்கு முக்கியமானது. மாணவர்கள்  தியேட்டருக்கு படையெடுப்பார்கள். ஜுன் 3 கார்த்திக் சுப்பாராஜின் இறைவி வெளியாகிறது. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தில் வன்முறை அதிகம் என்று ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. அதையும் மீறி கார்த்திக் சுப்பாராஜுக்காக கூட்டம் வமும் என்பதில் சந்தேகமில்லை. 
 
இறைவி வெளியாகும் அன்று விஷ்ணு நடித்துள்ள வேலைன்னு வந்தா வெள்ளக்காரன் படமும் வெளியாகிறது.
 
இந்த கோடை தமிழ் சினிமாவுக்கு லாபமா நஷ்டமா என்பதை இது நம்ம ஆளு மற்றும் மருதுவின் வெற்றி தோல்விகளே நிர்ணயிக்கும். 
 
தெறி தொடங்கி வைத்ததை இந்தப் படங்கள் தொடருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.