வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 14 ஏப்ரல் 2015 (12:51 IST)

வெறும் வாய்க்கு அவல் தந்த சுஹாசினி

ஓ காதல் கண்மணி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மணிரத்னத்தின் மனைவியும் நடிகையும் இயக்குனருமான சுஹாசினியும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய சில கருத்துகள் வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி இணையத்தில் உலவி வருகிறது.


 

 
ஓ காதல் கண்மணிக்கு ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். எழுதி இயக்கியிருப்பவர் மணிரத்னம். இந்தப் படத்தில் சுஹாசினியின் பங்கு என்ன என்பது தெரியவில்லை. ராவணன் படத்தைப் போல் இதற்கு வசனம் எழுதியிருப்பதாகவும் தெரியவில்லை. மணிரத்னத்தின் மனைவி என்ற முறையில் அவர் அந்த சந்திப்பில் கலந்து கொண்டார். அந்த ஒரே தகுதியில் அவர் ஓ காதல் கண்மணி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தால், சுஹாசினி தேவையில்லாமல் வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார் என தைரியமாக கூறலாம்.
 
மணிரத்னம் இதற்கு முந்தையப் படம் கடலின் போது அதிகம் பேசவோ, பத்திரிகையாளர்களை சந்திக்கவோ இல்லை. அபூர்வமாக இந்தமுறை பத்திரிகையாளர்களை சந்தித்ததுடன் சேர்ந்தார்போல் நாலுவார்த்தை பேசவும் செய்தார்.
 
உங்களை பிடிக்கவே முடியவில்லையே என்று மூத்த பத்திரிகையாளர் கே.என்.சிவராமன் கேள்வி எழுப்பிய போது, மணிரத்னத்தை பேசவிடாமல் அவரிடமிருந்து மைக்கை வாங்கி, எனக்கே அப்பாயின்மெண்ட் கிடைக்கிறதில்லை என்று, தனது மனைவி ஸ்தானத்தை பொது மேடையில் நிலைநிறுத்தப் பார்த்தார் சுஹாசினி. மணிரத்னம், ரஹ்மான் போன்ற ஆளுமைகளுடன் மேடையை பகிர்ந்து கொள்வதன் வழியாக தன்னையும் அவர்களில் ஒருவராக காட்ட சுஹாசினி முயன்றதை வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது.
 
அவர் பேசும் போது, குவாலிட்டி பீப்பிள்தான் படத்துல நடிக்க முடியும். ரஹ்மான் போன்ற குவாலிட்டி பீப்பிள்தான் இசையமைக்க முடியும். அதேபோல் எழுதத் தெரிஞ்சவங்கதான் விமர்சனம் எழுதணும். பத்திரிகையாளர்களாகிய நீங்கள் இருக்கும் போது, மவுசை மூவ் பண்ண தெரிஞ்சவங்க எல்லாம் எழுத்தாளர் ஆகிட்டாங்க. உங்களை மாதிரி குவாலிட்டியான ஆள்கள் இருக்கும் போது மத்தவங்களை ஏன் எழுத விடறீங்க என்றார்.
 
இன்று படம் எடுப்பவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது, இணையத்தில் தனிநபர்கள் எழுதும் விமர்சனங்கள். பத்திரிகைகள் சினிமா நபர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் பட்டும் படாமல் விமர்சனம் செய்கையில், இணையத்தில் எழுதும் தனி நபர்கள், சரியில்லாத படத்தை கிழித்து தொங்கப்போட தயங்குவதில்லை. பத்தில் இரண்டு விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலுடன், சினிமா குறித்த புரிதலின்றி மோசமாக எழுதப்படத்தான் செய்கின்றன. ஆனால்,...
மேலும் அடுத்தப்பக்கம்...
ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், இணையத்தில் எழுதப்படும் தனி நபர் விமர்சனங்களை தரமற்றவை என்று ஒதுக்க முடியாது. மேலும், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட ஒரு பண்டத்தை விமர்சனம் செய்கிற உரிமை அனைவருக்கும் உண்டு. அந்த விமர்சனம் மோசமாக இருந்தால் அதனை கண்டுணரும் தெளிவு ஜனங்களுக்கு இருக்கிறது. 
 
இணையத்தில் எழுதப்படும் தனி நபர் விமர்சனங்களால் கோபமுற்ற நடிகர் விவேக், இப்படியெல்லாம் எழுதுவது சரியா என்று கமல்ஹாசனிடம் கேள்வி கேட்டபோது, அதனை தடுக்க முடியாது. அவர்கள் எழுதத்தான் செய்வார்கள். அதைத்தாண்டி நம்மை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பதிலளித்தார்.
 
ஏறக்குறைய இதே கருத்தைத்தான் மணிரத்னமும் கூறினார். முன்பு டீக்கடையில் படம் பற்றி விமர்சிப்பார்கள். அப்போது அவர்களுக்கு தங்களின் கருத்தை சொல்ல ஒரு மீடியா இல்லை. இப்போது இணையம் கிடைத்திருக்கிறது. அதில் எழுதுகிறார்கள். நானும் பி.சி.ஸ்ரீராமும்கூட குட்டிச் சுவரில் உட்கார்ந்து கொண்டு, யாருக்கும் படமெடுக்க தெரியலை, நாம எடுக்கிறதுதான் படம்னு பேசியிருக்கிறோம் என்றார்.
 
சுஹாசினியின் விமர்சனத்தைத் தொடர்ந்து, இயக்கம் தெரிந்துதான் சுஹாசினி இந்திரா படத்தை எடுத்தாரா? வசனம் எழுதத் தெரிந்துதான் வசனம் எழுத ஆரம்பித்தாரா என்று கடுமையான விமர்சனங்கள் இணையத்தில் முன் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு சுஹாசினியால் பதில் சொல்ல முடியாது என்பதே உண்மை. 
 
டிஜிட்டல் கேமராவின் வரவிற்குப் பிறகு, சகட்டுமேனிக்கு படங்கள் எடுத்துத் தள்ளப்படுகின்றன. அவற்றில் தரமானவற்றை பிரித்தறிய இணையத்தில் வரும் தனி நபர் விமர்சனங்கள் உதவுகின்றன. அவற்றை தடுக்க முடியாது என்பதுடன், எழுதுவது அவரவர் உரிமை. 
 
சினிமா பத்திரிகையாளர்களை சுஹாசினி, விமர்சனம் எழுதத் தகுதியுள்ள குவாலிட்டி பீப்பிள் என்றார். ஓ காதல் கண்மணி படத்துக்கு எதிர்மறை விமர்சனம் வராமல் இருக்கவும், தனது கருத்துக்கு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்த்தும் அவர் சொன்ன பாராட்டு மொழி இது. 
 
சினிமாவை தெரிந்து வைத்திருப்பவர்களைவிட, சினிமாக்காரர்களை தெரிந்து வைத்திருப்பவர்கள்தான் இங்கு அதிகம்.