1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 17 அக்டோபர் 2014 (13:38 IST)

தயாரிப்பாளர்களாகும் நடிகர்கள், இயக்குனர்கள் - பாகம் 2

படங்கள் தயாரிக்கும் நடிகர்களை மேலோட்டமாக கவனித்தாலே சில ஒற்றுமைகள் தெரியவரும்.
 
1. அறிமுகமில்லாத ஆரம்ப காலங்களில் வாரிசு நடிகர்களுக்காக அவர்களின் தந்தையரே தொடர்ந்து படங்கள் தயாரிப்பாளர்கள். மகனை திரையுலகில் நிலைநிறுத்துவதுவரை இது தொடரும். 
 
2. பரிசோதனை முயற்சிகளை தங்களின் சொந்த தயாரிப்பில் மேற்கொள்கிற நடிகர்கள். கமலின் ஹேராம் போன்ற சில முயற்சிகள், பார்த்திபனின் சில படங்களை இதில் சேர்க்கலாம். 
 
3. படம் கிடைக்காமல் அல்லது ஒரு பிரேக் கிடைப்பதற்காக சொந்தத் தயாரிப்பில் இறங்குகிறவர்கள். 
 
4. தங்களுக்கென்று ஒரு மார்க்கெட் உருவான பிறகு, எங்களின் பிரபல்யத்தில் வருகிற வருமானம் துளி சிந்தாமல் முழுவதும் எங்களுக்கே என்று சொந்தத் தயாரிப்பில் இறங்குகிற நடிகர்கள்.
இந்தப் பகுதியில் ஞானவேல்ராஜாவின் பெயரில் இயங்குகிற ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தைப் பற்றி பார்க்கலாம். இதற்கு சூர்யாவிடமிருந்து தொடங்க வேண்டும். 
 
1997 -இல் நேருக்குநேர் படத்தின் மூலம் சூர்யா திரையுலகில் அறிமுகமாகிறார். ஆரம்பப் படங்கள் பெரிதாக கவனம் பெறவில்லை. முதல் ஹிட் என்றால் விஜய்யுடன் நடித்த ப்ரெண்ட்ஸ். அதிலும் விஜய்க்குதான் பெயர், புகழ். அதையடுத்து வெளிவந்த நந்தா சூர்யாவின் பர்சனாலிட்டியை மாற்றி அமைத்தது. அடுத்த ஸ்ரீ, உன்னை நினைத்து என்று இரு படங்கள். இரண்டும் தோல்வி.

நந்தா சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்தாலும் அடுத்த இரு மெகா தோல்விகளிலிருந்து அவரை கரை சேர்த்தது அமீரின் மௌனம் பேசியதே. 

காக்க காக்க, பிதாமகன், பேரழகன் என்று தொடர் வெற்றிகளை பெற்றவருக்கு ஆய்தஎழுத்தும், மாயாவியும் சின்ன சறுக்கலாக அமைந்தது. ஆனால் அதற்குள் சூர்யாவுக்கு என்று ஒரு மார்க்கெட் உருவாகியிருந்தது. 2005 -இல் வெளியான கஜினியும், ஆறு படமும் அந்த மார்க்கெட்டை நிலைநிறுத்தின.
 
சூர்யா நடித்தால் கண்டிப்பாக ஒரு வியாபாரம் உண்டு என்ற நிலையில் 2006 -இல் தொடங்கப்பட்டதுதான் ஸ்டுடியோ கிரீன். அன்றுவரை சினிமாத்துறையில் அறியப்படாத ஞானவேல்ராஜா ஸ்டுடியோ கிரீன் மூலம் சிவகுமாரால் அழைத்து வரப்படுகிறார்.

முதல் தயாரிப்பு சூர்யா நடித்த சில்லுன்னு ஒரு காதல். சூர்யா - ஜோதிகா காதல் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ரஹ்மானின் இசையுடன் சில்லுன்னு ஒரு காதல் வெளியானது. படத்தை ஸ்டுடியோ கிரீனே விநியோகித்தது.
 
அடுத்த வருடம் இரண்டாவது தயாரிப்பு. பருத்திவீரன். சூர்யாவின் தம்பி கார்த்தி ஹீரோவாக அறிமுகமாகிறார். அந்தப் படத்தின் பைனான்ஸ் சம்பந்தமாக அமீருக்கும் ஞானவேல்ராஜாவுக்கும் முட்டிக் கொண்டது. அன்று அந்தப் பிரச்சனையை எதிர்கொண்டவர்கள் சூர்யாவும், சிவகுமாரும்தான். அவர்கள்தான் அதுபற்றி பேசினார்கள், அமீருடன் கருத்து வேறுபட்டு பிரிந்து நின்றார்கள். ஸ்டுடியோ கிரீன் சிவகுமார் குடும்பத்தின் அங்கம் என்பது இரண்டாவது படத்திலேயே வெட்ட வெளிச்சமானது.
 
2006 -இல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்டுடியோ கிரீன் தற்போது தயாராகி வரும் கொம்பன் மற்றும் மாஸ்வரை பதினோரு படங்களை தயாரித்துள்ளது. இதில் 4 படங்கள் சூர்யா நடித்தவை. 7 படங்கள் கார்த்தி நடித்தவை (சூது கவ்வும், பீட்சா 2 வில்லா படங்களை சி.வி.குமாருடன் சேர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரித்ததாக சொல்லப்பட்டாலும் விநியோகம் மட்டுமே ஸ்டுடியோ கிரீன் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்).
 
2007 -இல் பருத்திவீரன் மூலம் நடிக்க வந்த கார்த்தி கொம்பன்வரை நடித்தப் படங்கள் 11. இதில் ஸ்டுடியோ கிரீன் தயாரித்தவை 7. அதிலும் கடைசியாக கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன் அனைத்துமே ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு. கார்த்தியை வைத்து வேறொரு தயாரிப்பாளர் படம் எடுப்பதற்கான சாத்தியமே இல்லை. 

தமிழ் திரையுலகம் விசித்திரமானது. மார்க்கெட் உள்ள நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பதில்லை. மார்க்கெட் இல்லாதவர்களுக்கோ படங்களில்லை. வியாபாரத்துக்கு உத்தரவாதம் உள்ள கார்த்தி, சூர்யா போன்றவர்களை அவர்களின் குடும்ப நிறுவனமே குத்தகைக்கு எடுத்துக் கொண்டால் மற்றவர்கள் என்னாவது? 
ஆரம்ப காலத்தில் அடுத்தவர்களின் தயாரிப்பில் நடித்து, ஓரளவு மார்க்கெட் வந்ததும் சொந்தத் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் நடிகர்கள் பெருகினால் தயாரிப்பாளர் என்ற வர்க்கம் தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டியதுதான். 
 
ஸ்டுடியோ கிரீன் பிறர் தயாரித்த படங்களை விநியோகம் செய்கிறதே என்று கேட்கலாம். 2007 முதல் 2013 வரை ஸ்டுடியோ கிரீன் 17 படங்களை விநியோகித்துள்ளது. அட்டகத்தி, சூது கவ்வும், கும்கி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பீட்சா 2 வில்லா தவிர்த்து அனைத்தும் சூர்யா, கார்த்தி நடித்தப் படங்கள். இவர்கள் நடித்த படங்களின் தெலுங்குப் பதிப்பும் இதில் அடக்கம்.
 
ஸ்டுடியோ கிரீன் போன்ற முன்னணி நிறுவனங்கள் பிறர் தயாரித்த படங்களை விநியோகிப்பதிலும் அரசியல் உள்ளது. அது அடுத்த பாகத்தில்.