1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 18 மே 2015 (18:00 IST)

ரஜினியை சிக்கலில் மாட்டிவிட்ட மம்முட்டியின் பாஸ்கர் தி ராஸ்கல்

ரஜினியின் புதிய படத்தை யார் இயக்குவார்கள்? ஷங்கரா? லாரன்ஸா? இல்லை முருகதாஸா? தமிழ் சினிமா குழப்பத்துடன் இருந்த நேரம் இந்த மூவரையும் தவிர்த்து ரஞ்சித்துக்கு வாய்ப்பளித்தார் ரஜினி. இளம் இயக்குனரின் படத்தில் ரஜினி நடிக்க முன்வந்தது, அமிதாப்பச்சனைப் போன்று வயதுக்கேற்ற வேடத்தை அவர் ஏற்க முன்வந்திருப்பதன் அடையாளம் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 

 
இந்நிலையில் எதிர்பாராத திசையிலிருந்து இந்தப் படத்துக்கு பிரச்சனையும் எழுந்துள்ளது.
 
லிங்காவுக்குப் பிறகு எந்தப் படத்தில் நடிக்கலாம் என்று ரஜினி தீர்மானிப்பதற்கு முன்பு, சித்திக் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்த, பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படத்தை பார்த்தார். படம் ரஜினிக்குப் பிடித்ததால் அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க முடிவு செய்து, படத்தின் தமிழ் ரீமேக் உரிமை யாரிடம் உள்ளது என்று விசாரித்தார். ரீமேக் உரிமை தயாரிப்பாளர் துரைராஜிடம் இருந்ததாக தெரிய வந்தது. ரஜினி நடிக்கிறார் என்றதும் ஆரம்பகட்ட வேலைகளில் இறங்கினார் துரைராஜ்.
 
இந்நிலையில்தான் ரஜினி திடீரென்று ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்தார். தயாரிப்பாளர் தாணு என்றும் முடிவானது. தனது வாய்ப்பு தாணு கைக்குப் போனதால் துரைராஜுக்கும் தாணுவுக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 
சித்திக்கின் பாஸ்கர் தி ராஸ்கலுக்கு முன்பு இயக்கிய பாடிகாட் படத்திலும் நயன்தாராவே நடித்திருந்தார். இந்தப் படத்தை அவர் தமிழில் விஜய்யை வைத்து காவலன் என்ற பெயரில் இயக்கினார். படம் ஹிட். அதே கதையை அதே பெயரில் - பாடிகாட் - இந்தியில் சல்மான் கானை வைத்து இயக்கினார். அங்கேயும் ஹிட்.
 
பாடிகாட் போல பாஸ்கர் தி ராஸ்கல் படத்தையும் தமிழ் முதலான அனைத்து மொழிகளிலும் இயக்குவேன் என்று சித்திக் கூறியிருந்தார். பாடிகாட் போலில்லாமல், பாஸ்கர் தி ராஸ்கல் ரீமேக் அனைத்திலும் நயன்தாராவே ஹீரோயினாக நடிப்பார் என்றும் கூறியிருந்தார். ரஜினியின் முதல் விருப்பம் நடைமுறைக்கு வந்திருந்தால், இந்நேரம் சித்திக்கின் இயக்கத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் தமிழ் ரீமேக்கில் நயன்தாராவுடன் நடித்துக் கொண்டிருந்திருப்பார். ரஞ்சித் முந்திக் கொண்டதால் துரைராஜை சமாதானப்படுத்த வேண்டிய இக்கட்டு ஏற்பட்டிருக்கிறது.
 
அனேகமாக ரஞ்சித் படம் முடிந்ததும், பாஸ்கர் தி ராஸ்கல் ரீமேக்கில் ரஜினி நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.