வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி ஆர்.
Last Updated : திங்கள், 27 ஜூன் 2016 (14:58 IST)

மோடி முதல் விஷால்வரை - பகிரி விழாவின் ஹைலைட்கள்

மோடி முதல் விஷால்வரை - பகிரி விழாவின் ஹைலைட்கள்

பகிரி படத்தில் நடித்திருப்பவர்கள், தயாரித்தவர், இயக்குனர் யாரையும் தமிழ் சமூகத்துக்கு முகப்பரிட்சயம் இல்லை. ஆனால், அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை பகிராத ஊடகங்கள் இல்லை.


 


இரண்டு மூன்று பேர்களின் உணர்ச்சிகரமான பேச்சு பிரபல்யத்தை தாண்டி பகிரி விழாவை முக்கியப்படுத்தியது.
 
மேடையில் பேசுவதற்கு என்றே சர்ச்சைக்குரிய விஷயங்களை நோட்ஸ் எடுத்து வருகிறவர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இறைவி படத்தைப் பார்க்கிற ரசிகன் நான் தயாரிப்பாளர் என்று தெரிய வரும்போது என்னைப் பற்றி என்ன நினைப்பான் என்று இவர் கொளுத்திப்போட்ட பிட்டுதான் கார்த்திக் சுப்பாராஜுக்கு தடை போடும் அளவுக்கு கொண்டுவிட்டது. பகிரியிலும் அப்படி சில முஸ்தீபுகளை மேற்கொண்டார் சுரேஷ் காமாட்சி.
 
"இன்று தமிழ் சினிமா குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறது. சிறு படங்களுக்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள்தான். ஆனால் படம் பார்த்து விமர்சனங்கள் பத்திரிகைகளில் வருவதற்குள் திரையரங்கில் படம் இருப்பதில்லை. தூக்கி விடுகிறார்கள்.
 
இன்று சினிமாவை யாரும் பார்க்காமலில்லை. திருட்டு விசிடியில் கூட காசு கொடுத்துதான் சினிமா பார்க்கிறார்கள். இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யக்கூட காசு கொடுத்துதான் பார்க்கிறார்கள். திரையரங்கில் போய்ப் பார்க்க ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் செலவாகிறது.
 
ஏன் எல்லாரையும் திரையரங்கு போய் படம் பார்க்கக் கட்டாயப்படுத்த வேண்டும் டூ கள்ளச் சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் வந்தது போல் திருட்டு விசிடியை ஒழிக்க அதையும் சட்டப்பூர்வமாக்கிவிடுங்கள்.
 
அதனால் வரும் வருமானத்தை ஏன் இழக்க வேண்டும் டூ திரையரங்கிற்கு மக்கள் வரவில்லை என்கிறார்கள். சினிமா டிக்கெட்டை விட பார்க்கிங் கட்டணம் அதிகம்.  பார்க்கிங்கிற்கே 250 ரூபாய் செலவாகிறது. பின் திரையரங்கிற்கு எப்படி வருவார்கள்?
 
காலை, மதியம் காட்சிக்கு கேண்டீனில் வியாபாரம் இல்லையென்றால் படத்தைத் தூக்கி விடுகிறார்கள்.கேண்டீனில் வியாபாரம்  செய்வதற்கா தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் எடுக்கிறார்கள்?
 
தயாரிப்பாளர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுக்கிறோம். ஆனால் காலைக் காட்சிக்குக் கூட முழுதாக கூட்டம் வரவில்லை. ஆனால் அதில் நடித்த நடிகர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்கிறார்.
 
இவை எல்லாமே மாறவேண்டும்.  திரையரங்கிற்கு படம் கொடுக்கும் போது ஏன் சதவிகித அடிப்படையில் வியாபரம் செய்ய மறுக்கிறார்கள்" என்று, விட்டு விளாசினார்.
 
ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்று அவர் விஷாலைதான் குறிப்பிட்டார் என ஒருசிலர் குறுக்குசால் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
 
இயக்குனர் வசந்தபாலன் பகிரி படத்தின் பாடல்களை வெளியிட்டார். படம் எடுப்பதுடன் பார்ட் டைமாக அரசியலையும் கவனித்து வருகிறார் போல. அவரது அனல் பேச்சில் ஆனானப்பட்ட மோடியே பொசுங்கினார்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க......

"இன்று தமிழை அதன் வளத்தை அறியாமல் தட்டையானதாக பயன்படுத்தி வருகிறோம். இரண்டே பக்கம் உள்ள நாணயத்தைப் போல தட்டையானதாக பயன்படுத்தி வருகிறோம். ஆங்கில வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் மாற்றுச் சொல் தேடாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறோம். சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள் இன்று மறைந்து கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் மீட்டெடுக்க வேண்டும் என்று நினைத்துதான் கம்ப்யூட்டர் கணிப்பொறி ஆனது. கணினி என்று அழகாக மாறியது.
 
நான் அங்காடித் தெரு என்று தலைப்பு வைத்த போது பலருக்கும் புரியவில்லை. சிலர் அங்கன் வாடியா என்று கேட்டார்கள். ஆனால் அது சட்ட சபையிலேயே பேசப்பட்டது. பாண்டிபஜார் என்பது சௌந்தர பாண்டியன் அங்காடி எனப் பெயர் மாற்றும் அளவுக்குப் போனது.


 
 
அப்படித்தான் நான் வெயில் என்று தலைப்பு வைத்தபோதும்  புரியவில்லை. தயாரிப்பாளர் ஷங்கர் சாரே வெயில்  எல்லாரையும் போய்ச் சேருமா என்றார்.
 
ஒரு கலைஞன் சமூகத்துக்கு புதிய புதிய சொற்களைத் தர விரும்புகிறான். அதை ஏற்றுக் கொண்டால் தினச் சொல்லாக புழங்கும் சொல்லாடலாக மாறும். அந்த வகையில் இந்தப் பகிரி மாறும்.
 
படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். படம் விவசாயம் பற்றிப் பேசுகிறது. ஓர் இயக்குநருக்கு எந்த அளவுக்கு கேளிக்கையூட்டும் பொறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு இந்த சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும் செய்ய  வேண்டும் என்கிற சமூகப் பொறுப்பும் இருக்க வேண்டியது முக்கியம்.
 
விவசாயம் என்பது ஒரு சாதி. அது இன்று அழிந்து வருகிறது.
 
நேரு சுதந்திர இந்தியாவை என்று விவசாய நாடாக ஆக்குவதற்குப் பதிலாக தொழிற்சாலையாக மாற்ற நினைத்தாரோ அன்றே விவசாயம் இறந்துவிட்டது.
 
கோகோ கோலா ஒரு லிட்டர் தயாரிக்க 12 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. என்ன கண்டுபிடித்தாலும் தண்ணீரை யாரும் கண்டுபிடிக்க முடியாது.  ஹெச் 2ஓ வை யாரும் உருவாக்க முடியாது.
 
விவசாய நிலங்கள் அடுக்குமாடிக் கட்டிடங்களாகின்றன. விவசாய நிலம் விற்று வெளிநாட்டு வேலைக்குப் போய்க் கொண்டு இருக்கிற சூழல். சீமான் தேர்தல் அறிக்கையில் விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. விவசாயத்தை மீட்டெடுக்கத்தான் வேண்டும்.
 
பிரதமர் மோடி நாடு நாடாகப் போகிறார். இங்கே வாருங்கள் என்கிறார். இங்குள்ள வளமெல்லாம் பறிபோகிறது. 
 
இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா உணவுக்காகக் கையேந்துகிற நிலை வரும். இது பற்றி எல்லாம் சினிமாவில்  சொல்வது தாக்கம் ஏற்படுத்தும். 
 
இப்போது மராத்தி, கன்னடத்தில் எல்லாம் நல்ல படங்கள் வருகின்றன. வசூலை அள்ளுகின்றன. எளிமையான கதை, எளிமையான மனிதர்களிள் வாழ்க்கை என்றும் வெற்றி பெறும். கன்னடத்தில் திதி என்று 24 வயது இளைஞன் எடுத்த படம் வியப்பூட்டுகிறது.
 
இங்கே சமூக நோக்கோடு வரும் படங்கள் எப்போதாவது தான் வருகின்றன. காக்கா முட்டை க்குப் பிறகு எதுவும் வரவில்லை. எல்லாமே கூமுட்டைகளாகவே இருக்கின்றன.
 
விவசாயத்தைப் போலவே தமிழ்ச் சினிமாவும் நொறுங்கிக் கொண்டு இருக்கிறது. பத்து கதாநாயகர்கள் படங்கள் தவிர எதுவும் ஓடுவதில்லை.
 
இந்த நல்ல படம் ஓட வேண்டுமே என்று கவலையாக இருக்கிறது.
 
நல்ல கலைஞர்கள் நாட்டின் சொத்து. அவர்களைக் கொண்டாட வேண்டும். ஆனால் இந்த சமூகம் கொண்டாட மறுக்கிறது. அசோகமித்ரனைக் கொண்டாட மறுக்கிறது, ருத்ரய்யாவைக் கொண்டாட மறுக்கிறது. ருத்ரய்யா இறந்தது யாருக்குமே தெரியவில்லை.
 
சேரன் போன்ற கலைஞர்களை கண்ணீர் விட்டுக் கெஞ்சிக் கதற வைக்கிறது. கமர்ஷியல் படமெடுத்து காசு பண்ண நினைக்காமல் நல்ல படம் எடுக்கும் கனவுடன் கிளம்பி வந்தோம்.  இன்று அந்தக் கனவு நொறுங்கிக் கொண்டிருக்கிறது" என்று கொட்டித் தீர்த்தார். 
 
இந்த சிறப்பு பேச்சாளர்களைத் தவிர மைக் பிடித்த சில்லறை பேச்சாளர்களும், சாதி முதல் நல்ல சினிமாவரை குதறி தள்ளினார்கள். திரையுலகுக்குள் இப்படியெல்லாம் கலகக்குரல்கள் கேட்பது அதிசயமாகத்தான் இருக்கிறது.