வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஜே.
Last Updated : வெள்ளி, 20 மே 2016 (18:38 IST)

ஷாம்லியின் வள்ளியும் தெற்றி புள்ளியும் தெற்றி

ஷாம்லியின் வள்ளியும் தெற்றி புள்ளியும் தெற்றி

குழந்தை நட்சத்திரமாக இருந்த ஷாம்லி இப்போது 28 வயது நிரம்பிய குமரி. தெலுங்கில்  ஒரேயொரு படத்தில் நாயகியாக நடித்தவர், கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும்  நாயகியாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.


தனுஷின் கொடி படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக  ஷாம்லி நடிப்பதாக இருந்தது. ஆனால், மலையாளப் படத்தில் நடிப்பதால் கொடி படத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலை என்று அப்படத்திலிருந்து விலகினார்.
 
ஷாம்லி முக்கியத்துவம் தந்து நடித்த அந்த மலையாளப் படம், வள்ளியும் தெற்றி புள்ளியும்  தெற்றி. இதன் நாயகன் குஞ்சாகா போபன். குழந்தை நட்சத்திரமாக இருந்த ஷாம்லியின் அக்கா  ஷாலினி நாயகியாக முதலில் நடித்தது மலையாளத்தில். அனியத்தி புறாவு (தமிழில்  காதலுக்கு மரியாதை) அதில் நாயகனாக நடித்தவர் குஞ்சாகா போபன். அக்காவிற்கு கிடைத்த அதிர்ஷ்டம் தனக்கு கிடைக்கட்டும் என்று அவர் குஞ்சாகா போபனின் படத்தை தேர்வு  செய்திருக்கலாம். காரணம், வள்ளியும் தெற்றி புள்ளியும் தெற்றி படத்தில் துணை  நடிகைக்குரிய முக்கியத்துவம் மட்டுமே ஷாம்லிக்கு தரப்பட்டிருக்கிறது.
 
படத்தின் கதை தொண்ணூறுகளில் நடக்கிறது. கேரளாவிலுள்ள இயற்கை எழில் சூழ்ந்த சின்ன  கிராமத்தில் அமைந்திருக்கும் திரையரங்கு ஸ்ரீதேவி டாக்கீஸ். அதன் உரிமையாளர் மாதவன்  நாயர். தனது தந்தை உருவாக்கிய திரையரங்கை எப்படியும் நடத்தி செல்ல வேண்டும்  என்பதை மட்டுமே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டவர். அதற்காக ஊரிலுள்ள பெரிய மனிதர்  பகவானிடம் நிறைய கடன்கள் வாங்கி வட்டி கட்ட முடியாத நிலையில் இருப்பவர். ஸ்ரீதேவி டாக்கீஸின் ஆபரேட்டர், வினயன் (குஞ்சாகாபோபன்). வினயனுக்கு முன்பு அவனது தந்தை  ஸ்ரீதேவி டாக்கீஸின் ஆபரேட்டராக இருந்தார். இந்த பந்தம் மாதவன் நாயரையும்,  வினயனையும் இறுக்கமாக பிணைத்திருந்தது. 
 
பகவானின் மூத்த மகள் ஓடிப்போனதால் இளைய மகளை (ஷாம்லி) கண்ணும் கருத்துமாக  பார்த்து வருகிறார். இளைய மகளும், வினயனும் காதலிப்பது பகவானுக்கு தெரியாது.  இவர்களுடன் படத்தில் பிரதானமாக வரும் இன்னொரு கதாபாத்திரம், பாக்கு மரம் ஏறும் நீர்  என்ற பட்டப்பெயர் கொண்ட மனோஜ் கே.ஜெயன். காதலித்து திருமணம் செய்து காதலும்,  போதையுமான கிராமத்து வாழ்க்கை வாழ்கிறவர்.
 
நகர்மயமாக்கலின் விளையவுகள் அந்த சின்ன கிராமத்தையும் பாதிக்கிறது. ஜனங்கள் ஸ்ரீதேவி  டாக்கீஸைவிட்டு நகரத்திலுள்ள திரையரங்குகளுக்கு படம் பார்க்க செல்கிறார்கள். நீர்,  பனையேறும்போது விழுந்து சாகிறார். திருவிழா கலெக்ஷன் ஸ்ரீதேவி டாக்கீஸிலிருந்து களவு  போகிறது. பாகவான் தனது இளைய மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். மாதவன்  நாயரின் கடன்களுக்கு ஈடாக ஸ்ரீதேவி டாக்கீஸ் பகவானின் கைக்கு வருகிறது. அவர் அதனை  இடிக்க முடிவெடுக்கிறார். மாதவன் நாயர் அந்த கிராமத்திலிருந்தே வெளியேறுகிறார்.
 
நேர்கோடாக சொல்ல வேண்டிய கதையை வளைத்தும் வெட்டியும் நான் லீனியராக்கி  படுத்தியிருக்கிறார்கள். காமெடியில் கலக்க வேண்டிய படம் திரைக்கதை மற்றும் காட்சிகளின்  கட்டமைப்பு குலைவால் பரிதாபமாக தடுமாறுகிறது. ஷாம்லிக்கு குஞ்சாகா போபனைப் பார்த்து  புருவத்தை நெரிப்பதும், சைகை செய்வதும்தான் பிரதான வேலை. குறைவான காட்சிகளிலேயே வருகிறார். ஒரு பக்கத்திற்குள் அடங்கும் வசனம். ஏன் இந்தப் படத்தை தனது  இரண்டாம் வருகைக்கு அவர் தேர்வு செய்தார் என்பது ஆச்சரியம். இந்த விஷயத்தில்  வள்ளியும் புள்ளியும் மட்டுமில்லை ஷாம்லியின் அனைத்து முடிவுகளுமே தெற்றிவிட்டன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்