வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: சனி, 22 அக்டோபர் 2016 (15:29 IST)

அவமானம்... கலைஞர்களை காலில் விழவைக்கும் அரசியல்வாதிகள்

யுரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து போலி தேசியவாதிகளும், பிரிவினைவாத அரசியல் தலைவர்களும் தங்களுடைய தாக்குதலை இந்திய சினிமா மீது காட்டத் தொடங்கினர்.
 
 
பாகிஸ்தானிலிருந்து பருப்பு, சர்க்கரை, நிலக்கரி என்று எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம், அந்த வர்த்தகம் செய்ய யாருக்கும் தடையில்லை. ஆனால், சினிமாவில் மட்டும் பாகிஸ்தான் நடிகர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அது தேசத்தை அவமதிக்கும் செயல். மாட்டுக்கறி விற்பனை செய்தால், சாப்பிட்டால் குற்றம். கோ மாதாவை அவமதிக்கும் செயல். அதேநேரம், மாடுகளை கொன்று அதன் இறைச்சியை ஏற்றுமதி செய்வார்கள். அது குறித்து வாய் திறக்க மாட்டார்கள். மாட்டுக்கறி அரசியலில் நாம் கண்ட இந்த இரட்டை வேடத்தைப் போன்றதுதான் போலி தேசியவாதிகள் இந்திய சினிமாவில் பாகிஸ்தான் கலைஞர்களை பயன்படுத்தக் கூடாது என்ற தடையும்.
 
ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சி, பாகிஸ்தான் கலைஞர்கள் இடம்பெற்ற திரைப்படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, கரண் ஜோஹரின், ஏ தில் ஹே முஷ்கில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதில் பாகிஸ்தான் நடிகர் நடித்திருந்தார்.
 
ராஜ் தாக்கரே உலக அளவில் இந்தியாவை ஆதரிப்பவர். இந்திய அளவில் மகாராஷ்டிராவை ஆதரிப்பவர். மகாராஷ்டிராவில் தமிழர்களை அடித்துத் துரத்திய பால் தாக்கரேயின் இன்றைய விஷக்கனி. 
 
பாகிஸ்தானுடன் வியாபாரம் செய்பவர்களை எதுவும் கேட்க திராணியில்லாத இந்த போலி தேசியவாதியும், அவரது அடிபொடிகளும் சினிமாக்காரர்களின் முதுகில் சவாரி செய்ய தயங்குவதில்லை.
 
பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இன்று காலை கரண் ஜோஹர், மகாராஷ்டிராவின் முதல்வர், போலி தேசியவாதி ராஜ் தாக்கரே, வேறு சில சினிமா பெருந்தலைகள் ஒன்றுகூடி பேசி, கரண் ஜோஹரின் படத்தை வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்பாக கரண் ஜோஹர் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். கலையைவிடவும் இந்தியாதான் முக்கியம், அதன் தேசபக்திக்கு இழுக்கு சேர விடமாட்டேன் என்று சத்தியம் செய்ய வைக்கப்பட்டிருக்கிறார். கரண் ஜோஹர் இந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருந்த டிசம்பர் 25 -ஆம் தேதிதான் பிரதமர் மோடி லாகூர் சென்று விருந்து சாப்பிட்டு வந்தார். அதை விமர்சிக்க இந்த போலி தேசியவாதிகளுக்கு திராணியில்லை, சினிமாக்காரர்களின் முதுகிறல் வண்டியோட்டுகிறார்கள்.
 
கரண் ஜோஹரின் பாவமன்னிப்பு வார்த்தைகள் இந்தியாவில் கலைஞர்களுக்கு ஏற்பட்ட தீராக்களங்கம்.