வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 31 மார்ச் 2015 (09:41 IST)

கொம்பனுக்கு ஆதரவு - சீமானுக்கு சில கேள்விகள்

கொம்பன் திரைப்படம் தேவர் சாதியை தூக்கிப் பிடிப்பதாகவும், பிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சைப்படுத்துவதாகவும் கூறி, டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட பல அரசியல் கட்சிகளும், சாதி அமைப்புகளும் படத்துக்கு தடை கோரி போராடி வருகின்றன. வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. 
 

 
இந்த விவகாரத்தில் கொம்பனுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சீமான்.
 
தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை வெளியிடக் கூடாது என்று சொல்ல எந்த தனி மனிதனுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் உரிமை இல்லை. ஒரு படைப்பை, அது எவ்விதமான கருத்தை கொண்டிருந்தாலும் தடை செய்யக் கூடாபது என்பதே நமது நிலைப்பாடு. அதில் எப்போதும் மாற்றமில்லை. அதேநேரம் சீமானின் அறிக்கையில் உள்ள சில முரண்களை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமானது.
 
"திரைப்படங்களுக்கு எதிராகப் போராடுவது எல்லாம் ஒரு மதிப்புமிக்க தலைவருக்கு சிறுமையாகப் படவில்லையா?" என்று சீமான், டாக்டர் கிருஷ்ணசாமியை நோக்கி கேள்வி எழுப்புகிறார். திரைப்படங்களுக்கு ஆதரவாக சீமான் அறிக்கை வெளியிடுவது சிறுமையாக இல்லாத போது, எதிராக மட்டும் போராடுவது எப்படி சிறுமையாகும்?
 
"கொம்பன் படத்தால் தென் மாவட்டங்களில் சாதியச் சண்டைகள் உருவாகும் அபாயம் இருப்பதாகச் சொல்லும் மருத்துவர் கிருஷ்ணசாமி இதுகாலம் வரை திரைப்படங்களால் அப்படி வன்முறைகள் உருவான வரலாற்றைச் சொல்ல முடியுமா?" என்று ஒரு கேள்வி.
 
தேவர் மகன் படம் வெளியான நேரம், அதில் இடம்பெற்ற போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே பாடல் குறிப்பிட்ட சாதியினரின் பெருமையை சொல்லும் பாடலாகவே பல மாவட்டங்களில் ஒலிபரப்பப்பட்டது. பிற சாதியினர் மீதான துவேஷத்தை கிளறிவிட அப்பாடல் பயன்படுத்தப்பட்டது. பல இடங்களில் அதனால் மோதல்களும் ஏற்பட்டன. இது நடந்த உண்மை. 
 
திரைப்படங்களால் வன்முறை நடந்துள்ளதா என்று கேட்கும் சீமான், மெட்ராஸ் கஃபே படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராடியதும், அவரது கட்சியினர் வன்முறையில் இறங்கியதும் எதன் அடிப்படையில்? மெட்ராஸ் கஃபே போன்ற படங்களால் இதற்கு முன் வன்முறை நடந்த சரித்திரம் இருக்கிறதா என்ன?
 
"இப்போது கொம்பன் படத்துக்கு எதிராகப் போராடுவதுபோல் முன்பு கமலஹாசன் நடித்த சண்டியர் படத்துக்கு எதிராகவும் மருத்துவர் கிருஷ்ணசாமி போராடினார். கமலஹாசன் என்கிற அந்த மாபெரும் கலைஞன் மருத்துவர் மீது கொண்ட மரியாதையால் சண்டியர் என்கிற தலைப்பை மாற்றினார். ஆனால், சில மாதங்களுக்கு முன் சண்டியர் என்கிற தலைப்பில் ஒரு படம் வெளியானபோது மருத்துவர் கிருஷ்ணசாமி எங்கே போனார்? கமல் நடித்தால் சண்டியர்... புதுமுகம் நடித்தால் மண்டியரா?" என்று சீமான் கேள்வி எழுப்புகிறார். நியாயமான கேள்வி. 
 
தேவர் மகன் படம் பல இடங்களில் சாதிய உணர்வை வளர்ப்பதற்கு உதவியது என்பது கமலே எதிர்பார்க்காதது. அவர் சண்டியர் என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்கையில் தேவர் மகன் போன்ற விளைவை ஏற்படுத்தி விடுமோ என்ற கருத்தில் அந்தப் பெயருக்கு எதிராக கிருஷ்ணசாமி போராடியது ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதே. கமல் போன்ற ஒருவர் இதுபோன்ற படங்களில் நடிக்கும் போதுதான் சம்பந்தப்பட்ட சாதியினர் அதனை கவனிக்கின்றனர். சுப்பனோ குப்பனோ அதே கதையை அதே காட்சியை எடுத்தால் அவர்கள் கண்டு கொள்வதில்லை. அதனால் கமல் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதும், சுப்பன் குப்பன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பாததும் இயல்பானதே.

எந்த ஒரு படைப்புக்கும் தடை விதிக்கலாகாது என்பதே நமது நிலைப்பாடு. ஈழம், தமிழ் என்று கூறி பல படங்களை எதிர்த்த சீமான், தமிழகத்தில் பல படங்கள் வெளியாகாமல் இருக்க காரணமாக இருந்த செந்தமிழன், கொம்பன் விஷயத்தில் மட்டும், கதையைப் பாரு, படத்தைப் பாரு என்று காந்திய முகமூடி அணிவது ஏன் என்பதுதான் கேள்வி.
 

 
ஈழ ஆதரவு விஷயத்திலும்கூட இவர் ஒழுக்கமாக இல்லை என்பதுதான் உண்மை. இலங்கையில் திரைப்பட விழா நடத்தினார்கள் என சல்மான் கான் படத்தை தமிழகத்தில் திரையிட எதிர்ப்பு தெரிவித்த சீமான், சல்மானுடன் தோளோடு தோள் நின்ற விவேக் ஓபராயின் ரத்த சரித்திரம் படத்தை மட்டும் எதிர்க்கவில்லை. காரணம் கேட்ட போது, தம்பி சூர்யா நடித்திருப்பதால் அந்தப் படத்தை யாரும் எதிர்க்கக் கூடாது என்றார். 
 
சீமான் இப்போது அறிக்கைப் போருக்கு இறங்கியது திரைத்துறையினரின் சுதந்திரத்துக்காகவா இல்லை தம்பி கார்த்திக்காகவா? 
 
முத்தையாவின் முதல் படம் குட்டிப்புலியே குறிப்பிட்ட சாதியினரை உயர்த்திக் காட்டும், அவர்களின் பெண்ணடிமைத்தனத்தை பெண் புனிதமாக திரித்துக் காட்டும் ஒரு படம்தான். வன்முறையை வீரமாக கொண்டாடும் தவறான படமும்கூட.
 
இதனை படத்தின் விமர்சனத்திலேயே குறிப்பிட்டிருந்தோம். அதன் சில பகுதிகள் இங்கே.
 
"கிண்டல் செய்ததுக்காக கொலை செய்யும் பைத்தியக்காரத்தனத்துக்கு பெயர் வீரம். படம் நெடுக இந்த வீர மயம்தான்.
 
தென்தமிழகத்து ஆதிக்கசாதி மனோபாவத்தை படம் நெடுக பார்க்க முடிகிறது. பெண்ணை ஒன்று சாமியாக மதிப்பார்கள், இல்லை சாணியாக மிதிப்பார்கள். ஆனால் இந்த இரண்டிலும் வெளிப்படுவது, பெண் எனக்கு சொந்தமான பொருள், அவளை நான் பாதுகாக்க வேண்டும், அவள் எனக்கு அடிமையானவள் என்ற ஆதிக்க மனோபாவம்தான். ஆம்பளைங்களோட கோபமும், குடியும்தான் பெண்ணுங்களை சீரழிக்குது... ஒரு பெண்ணு நினைச்சாதான் நீயும் நானும் ஆம்பளை... போன்ற வசனங்கள்கூட இந்த சாமி மனோபாவத்தின் வெளிப்பாடுதான். அது கடைசியில் பெண்களின் கையில் கத்தியை தந்து சங்கறுப்பதில்தான் முடியும். அப்படிதான் முடிந்திருக்கிறது. சாமியும் வேண்டாம், சாணியும் வேண்டாம் சக மனுஷியாக எப்போது பார்க்கப் போகிறார்கள்...?
 
வன்முறையை எதிர்க்கும் பாவனையில் வன்முறையை பிரதானப்படுத்தியிருப்பது போலவே பெண்ணை மதிக்கும் பாவனையில் அவள் ஆணால் பாதுகாக்கப்பட வேண்டிய அவனுக்கு சொந்தமான பொருள் என்ற ஆணாதிக்க பார்வையை படம் முன் வைக்கிறது. இது ஆபத்தானது."
 
குட்டிப்புலி, கொம்பன் போன்ற படங்களை, அப்படங்கள் முன் வைக்கும் அபத்தமான கருத்துகளை முன்வைத்தே எதிர்க்க, விமர்சிக்க வேண்டும். விமர்சனங்களின் மூலமாகவே இப்படியான அபத்த படங்களை எதிர்கொள்ள வேண்டும். அதனை டாக்டர் கிருஷ்ணசாமியோ, சீமானோ ஒருபோதும் செய்யப் போவதில்லை. அதனால் அவர்களின் பேச்சுக்கு செவி கொடுக்காமல் இருப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாகும்.