வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2016 (09:41 IST)

சண்டக்கோழி 2 ட்ராப் - குற்றம் நடந்தது என்ன?

சண்டக்கோழி 2 ட்ராப் - குற்றம் நடந்தது என்ன?

சண்டக்கோழி இரண்டாம் பாகத்தை ட்ராப் செய்வதாக ட்விட்டரில் விஷால் நேற்று அறிவித்தார். அவரது இந்த திடீர் செயலுக்கான காரணம் என்ன?
 

 


அஞ்சான் படம் தோல்வியடையும்வரை, சண்டக்கோழி 2 குறித்து லிங்குசாமி கவலைப்படவில்லை. அஞ்சானைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து, எண்ணி ஏழே நாள் என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். அஞ்சானின் படுதோல்வி காரணமாக கார்த்தி லிங்குசாமியின் படத்திலிருந்து விலகினார். 
 
லிங்குசாமியின் இயக்கத்தில் ஒரு ஹிட் படம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கார்த்திக்கு இல்லை. ஆனால், படத்தின் திரைக்கதையை செம்மைப்படுத்த கொஞ்சநாள் அவகாசம் கார்த்தியிடம் கேட்டிருப்பதாக லிங்குசாமி மழுப்பினார்.
 
அஞ்சான் தோல்வியுடன் உத்தம வில்லன் கடன் சுமையும் சேர, லிங்குசாமியின் படம் என்றாலே தெறித்து ஓடினார்கள் நடிகர்கள். இந்தநேரத்தில் லிங்குசாமிக்கு தோன்றிய ஐடியாதான், சண்டக்கோழி இரண்டாம் பாகம்.
 
விஷாலிடம் இரண்டாம் பாகம் குறித்து கூற, அவரும் நடிக்க ஒப்புக் கொண்டார். அவரே தயாரிப்பதாகவும் முடிவானது. லிங்குசாமிக்கு அட்வான்ஸும் தரப்பட்டது. ஆனால், பல வாரங்களாகியும் முழுமையான ஸ்கிரிப்டை லிங்குசாமி தரவில்லை. அதன் காரணமாக கதகளி, மருது படங்களை கமிட் செய்தார் விஷால். அதில் கதகளி வெளியாகிவிட்டது. மருது முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இவ்விரு படங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட சண்டக்கோழி இரண்டாம் பாகத்தின் கதையையே இன்னும் முடிக்கவில்லை லிங்குசாமி.
 
இந்நிலையில் அவர், தமிழ், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குவதாக அறிவித்தார். அதற்கான வேலைகளில் லிங்குசாமி பிஸியாக உள்ளார். தன்னிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு, படத்தை தொடங்காமல் இன்னொருவரை இயக்குகிறார் என்பது விஷாலுக்கு கடும் அதிருப்தியை தர, சண்டக்கோழி இரண்டாம் பாகத்தை ஒரேயடியாக கைவிடுவது என முடிவு செய்து அறிவித்தும்விட்டார்.
 
விஷாலிடம் முன்பணம் வாங்கிய லிங்குசாமி குறைந்தபட்சம் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்குவதையாவது அறிவித்திருக்க வேண்டும். அந்த குறைந்தபட்ச நியாயத்தையும் செய்யவில்லை லிங்குசாமி. இந்த விஷயத்தில் அவர் மீதே அனைத்து தவறுகளும் உள்ளதாக விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
 
ஆபத்து காலத்தில் கைகொடுக்க முன்வந்தவரை நட்டாற்றில் விடுவது யாருக்குமே அழகில்லை.