வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : புதன், 18 நவம்பர் 2015 (11:59 IST)

சல்மான் கானின் பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் வசூல் சாதனை ஒரு பார்வை

முன்னணி நடிகர்களுக்கு மட்டுமான அதிர்ஷ்டம் இது. படம் சுமார் என்றாலும் பாக்ஸ் ஆபிஸ் திணறிவிடும். சல்மான் கானின் பிரேம் ரத்தன் தான் பயோ ஒரு சுமாரான படம். தமிழில் இதைவிட நல்ல ஃபீல்குட் படங்கள் வந்துள்ளன.


 


ஆனால், நடித்தது சல்மான் கான் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் அம்முகிறது. இந்தியா, வெளிநாடு, ஏ பி சி என்று எந்த பாகுபாடும் இல்லை.
 
பிரேம் ரத்தன் தான் பயோ கடந்த வியாழக்கிழமை வெளியானது. வார இறுதியில் சென்னையில் இந்தப் படம் 33.40 லட்சங்களை வசூலித்து ஆச்சரியப்பட வைத்துள்ளது. அடாது மழையிலும் சல்மான் படத்தை விடாது பார்த்திருக்கிறார்கள் ரசிகர்கள். முதல் நான்கு தினங்களில் சென்னையில் மட்டும் வசூல், 43 லட்சங்கள்.
 
இந்திய அளவில் முதல் நாளில் இப்படம் 40.35 கோடிகளை வசூலித்து, இந்திப் படங்களில் முதல் நாள் வசூலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. முதலிடம், ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர். இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை 31.05 கோடிகளை படம் வசூலித்தது. மூன்றாவது நாள் சனிக்கிழமை இந்திய வசூல் 30.07 கோடிகள். மூன்று தினங்களில் 100 கோடிகளை இந்தியாவில் அனாயாசமாக கடந்தது.
 
ஞாயிறு 28.30 கோடிகளும், திங்கள்கிழமை 13.62 கோடிகளும் வசூலித்து இன்னும் உறுதியான நிலையில் உள்ளது படம். திங்கள் வரை முதல் ஐந்து தினங்களில் படத்தின் இந்திய வசூல், 143.39 கோடிகள். வெளிநாடுகளையும் சேர்த்தால், 202.13 கோடிகள்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....

வெளிநாடுகளில் ஷாருக்கானுக்கே அதிக ரசிகர்கள். இரண்டாவது அமீர் கானுக்கு. மூன்றாவது இடம்தான் சல்மானுக்கு. சமீபமாக இந்த பட்டியலில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் சல்மான். வெளிநாடுகளில், வார இறுதியில் அதிகம் வசூலித்த இந்திப்பட வரிசையில், பிரேம் ரத்தன் தான் பயோ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் நான்கு தினங்களில் 8.9 மில்லியன் யுஎஸ் டாலர்களை இப்படம் வெளிநாடுகளில் வசூலித்துள்ளது.


 
 
வார இறுதி வசூலில் இந்திய அளவில் இப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வியாழன் வெளியான இப்படம், ஞாயிறுவரை நான்கு தினங்களில் 129.77 கோடிகளை வசூலித்து, ஹேப்பி நியூ இயரின் 108.86 கோடிகள் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளது.
 
கடந்த சில வருடங்களாக ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த சல்மான் கான் காதல், காமெடி, சென்டிமெண்ட், குடும்பம், உறவுகள் என்று உயர்தர சைவமாக பிரேம் ரத்தன் தான் பயோ படத்தை தந்தார். மசிலை காட்டி நடித்த சல்மான் பாசத்தை காட்டி இந்தமுறை ஜெயித்திருக்கிறார்.
 
பிரேம் ரத்தன் தான் பயோவின் சாதனையை ஷாருக்கானின் ஃபேன் திரைப்படம் முறியடிக்குமா என்பதே பாலிவுட்டின் இப்போதைய எதிர்பார்ப்பு.