வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2015 (11:47 IST)

கில்லிங் வீரப்பன் - வீரப்பனை வெறும் வில்லனாக்கும் ராம் கோபால் வர்மா

சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையை ராம் கோபால் வர்மா படமாக எடுக்கிறார். இதையொட்டி சில கேள்விகள்.
 
சந்தனக் கடத்தல் வீரப்பன் சட்டத்தை மீறியவன். கொலை, கொள்ளைகள் செய்தவன். சட்டத்தின் முன்பு தண்டிக்கப்பட வேண்டியவன். ஆகவே, அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், வீரப்பன் கதை வீரப்பனின் கொள்ளை, கொலைகளில் தொடங்கி அவனை கொலை செய்த கதையில் முடிவடையும் ஒன்றல்ல. வீரப்பனை வெறும் வில்லனாக சித்தரிக்கையில் பல துணை கதைகளை பலரும் மறந்துவிடுகின்றனர். அவை இல்லாமல் வீரப்பன் கதை முழுமையடைவதில்லை.
 
வீரப்பனை வேட்டையாவதாகக் கூறி தமிழக, கர்நாடக எல்லையோரம் உள்ள தமிழக மக்களை போலீஸாரும், அதிரடிப்படையினரும் கொடுமைகள் செய்தனர். ஆண், பெண், குழந்தைகள் பேதமில்லாமல் அனைவரையும் கைது செய்தனர். அவர்கள் கைது செய்த போது கன்னியாக இருந்த பல இளம் பெண்கள் விடுதலை செய்யப்பட்ட போது தங்களை கைது செய்தவர்களால் கர்ப்பமாக்கப்பட்டு குழந்தைகளை பெற்றிருந்தனர். ஆண், பெண் இருபாலரின் பிறப்புறுப்புகளிலும் மின்சாரத்தை செலுத்தி சித்திரவதை செய்தனர். பலரது பிறப்புறுப்புகள் காயத்தில் அழுகின. கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அரசுக்கும் மக்களுக்கும் சரிவர தெரியாது.
 
இந்த கொடூரங்களை குமுதம் இதழ் ஆதாரத்துடன் வெளியிட்டது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விசாரணை நடத்தப்படவில்லை. மாறாக அனைவருக்கும் வீரப்பனை கொன்றதற்கு பாராட்டும், பட்டமும், பணமுடிப்பும், பதவி உயர்வும் தரப்பட்டது.
 
வீரப்பனை வில்லனாக்குவதன் வழியாக அரசுகளின் வன்முறைகள் மறைக்கப்படுகின்றன. வீரப்பனால் கொல்லப்பட்ட போலீஸ்காரர்களுக்கு, வீரப்பனை கொன்றதன் மூலம் நியாயம் கிடைத்தது. வீரப்பனை பிடிப்பதாகக் கூறி போலீஸாலும், அதிரடிப்படையாலும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்கள் இன்றும் தங்களுக்கான நீதி வேண்டி சவக்குழியில் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு யார் நீதி தருவார்கள்? நீதிக்கான அருகதையற்றவர்களா அந்த அப்பாவி ஜனங்கள்?
 
இந்த அநீதியை வீரப்பனை வில்லனாக்குவதன் மூலம் மறைத்துவிடுகின்றனர். அதைத்தான் வர்மாவும் செய்கிறார். சந்தனக் கடத்தல் வீரப்பனை வெறும் வில்லனாக சித்தரிப்பது எளிது. ஆனால், அதில் உண்மையின் சதவீதம் குறைவாகவே இருக்கும்.
 
நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியதால் கன்னடர்களுக்கும், ராஜ்குமாரின் தீவிர விசிறிகளுக்கும் வீரப்பன் ஒரு அரக்கனாக தெரிந்ததில் வியப்பில்லை. அந்த வெறுப்பை அறுவடை செய்ய துடிக்கிறார் ராம் கோபால் வர்மா.
 
வீரப்பனை என்கவுண்டரில் கொன்றதாக கூறப்படும் நிகழ்வை, கில்லிங் வீரப்பன் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார் வர்மா. இதில் வீரப்பனாக நடிகர் சந்தீப் பரத்வாஜும், வீரப்பனை கொலை செய்யும் என்கவுண்டர் டீமின் தலைவராக ராஜ்குமாரின் மகன் ஷிவ் ராஜ்குமாரும் நடித்து வருகின்றனர். வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமாரின் மகனை வீரப்பனை கொலை செய்யும் அதிரடிப்படை தலைவராக வர்மா காட்டுவதிலிருந்தே அவரது நோக்கமும், குறிக்கோளும் வெளிப்படை.
 
நிறைய ஆய்வுகள் செய்தேன் என்று வர்மா கூறுகிறார். அப்பாவி மக்களின் மீது ஏவப்பட்ட வன்முறையை காட்சிப்படுத்தாத எந்த வீரப்பன் கதையும் ஒருதலைபட்சமானதாகவே பார்க்கப்படும், பார்க்கப்பட வேண்டும்.