வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 22 மே 2015 (09:37 IST)

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி - திரும்புகிறதா சரித்திரம்?

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க முன்வந்திருப்பதையொட்டி பல்வேறு நம்பிக்கைகள் துளிர்விட்டுள்ளன. அமிதாப்பச்சனைப் போன்று ரஜினியும் அவரது வயதுக்கேற்ற வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை அதன் தொடக்கமாக பார்க்கின்றனர். இந்நிலையில், 2009 -ஆம் ஆண்டு ரஜினியின் 58 -வது பிறந்தநாளை முன்னிட்டு நமது இணையத்தில் வெளியான, ரஜினி 58 - முள்ளும் மலர்களும் கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு நினைவுப்படுத்திக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
...ரஜினி என்பது இன்று ஒரு பெயர் மட்டுமல்ல. ரஜினி என்பது ஒரு நபருமல்ல. அதையெல்லாம் தாண்டி அது ஒரு மிகை யதார்த்த பிம்பம். அந்த பிம்பத்திற்கு எதிராக ரஜினியாலும் ஒன்றும் செய்ய இயலாது. ராகவேந்திரர், பாபா படங்கள் தோல்வி அடைந்ததற்கு இதுவே காரணம். ரஜினி இல்லாமலே அவரது பெயரில் கட்சி தொடங்குவதற்கும் காரணம் இதுவே. 
 
இந்த பிம்பத்திற்கு மேலும் மேலும் வலு சேர்க்கும் சிவாஜி, எந்திரன் போன்ற படங்களையே மீண்டும் மீண்டும் தேர்வு செய்கிறார் ரஜினி. சமூகத்தின் பிரக்ஞையில் பதிந்திருக்கும் அந்த பிம்பத்திற்கு இசைவாகவே குறைந்தபட்சம் தனது திரைவாழ்க்கையையாவது அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ரஜினிக்கு இருக்கிறது. ஒரு ப்ரியா, ஒரு முள்ளும் மலரும், ஒரு ஆறிலிருந்து அறுபதுவரை அவரது வாழ்வில் இனி சாத்தியமா என்பது கேள்விக்குறி. குசேலனில் தன்னை சுற்றியிருந்த தங்க வேலியை நெகிழ்த்தும் சந்தர்ப்பம் ரஜினிக்கு கிடைத்தது. அவர் விரும்பியும் அவரை சுற்றியிருந்த வியாபார நிர்ப்பந்தத்தால் அது முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.
 
ரஜினிக்கு இன்று எதிரிகள் யாருமில்லை. அவர் வெற்றி கொள்ள வேண்டியவர்கள் ஒருவருமில்லை. அவர் எட்ட வேண்டிய உயரங்களும் இல்லை. இன்று அவருக்கிருக்கும் ஒரே சவால், சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ரஜினி என்ற பிம்பத்தை கடந்து வருவது. இதன் பொருள் தனது அடையாளத்தை அழிப்பதல்ல. ஒரே அடையாளத்தில் தங்கிப் போகாமல் இருப்பது. இது சாத்தியமா என்றால், நிச்சயம் சாத்தியமே. ரஜினியின் ஆதர்ஷ நடிகர் அமிதாப்பச்சனே இதற்கு சிறந்த உதாரணம். எத்தனையோ சவால்களை வெற்றி கொண்ட ரஜினியால் இந்த சவாலையும் வெற்றி கொள்ள முடியும்.
 
மேலும், அடையாளங்களிலிருந்து மீள்வதுதானே உண்மையான ஆன்மீக விடுதலையும்கூட.
 
- இந்தக் கட்டுரையை எழுதிய ஆறு ஆண்டுகளில் ரஜினி நாம் விரும்பிய புள்ளியில் வந்து நிற்கிறார். ஆனால், இது ஒரு நம்பிக்கை மட்டுமே. 

அமிதாப்பச்சன் தனது நாயக பிம்பத்தை கழற்றி வைத்து, வயதுக்கேற்ற வித்தியாசமான வேடங்களுக்கு மாறிய சூழல் முக்கியமானது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அமிதாப்பச்சன் ஆக்ரோஷ நாயகனாக நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவின. அதிலிருந்து மீள பெரும் பொருட்செலவில் குதா கவா படம் தயாரானது. அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு இரண்டு வருடங்கள் அவர் படம் நடிக்கவில்லை. 1994 -இல் தனது சொந்த பட நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்த படமும் தோல்வியடைந்தது. 
எண்பதுகளில் ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்ற, அநியாயத்தை தட்டிகேட்கும் அமிதாப்பச்சன் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு அலுப்புத் தருகிறவராக மாறிப் போனார். இனியும் ஆக்ஷன் நாயகனாக தொடர முடியாது என்ற நிலையில் அமிதாப்பச்சன் கண்டடைந்ததுதான் இன்று அவர் சென்று கொண்டிருக்கும் பாதை.
 
அமிதாப்பச்சனின் நிலை ரஜினிக்கு இன்னும் ஏற்படவில்லை. கோச்சடையான், லிங்கா படங்களின் தோல்வி ரஜினியின் கீர்த்தியில் ஏற்பட்ட பழுதால் உண்டானதில்லை. சரியாக வியாபாரம் செய்யாததால் ஏற்பட்டது. கோச்சடையான் படம் ரசிகர்களை கவராது என்று ரஜினிக்கு முன்பே தெரியும். மகளுக்காகவே அந்த பாரத்தை அவர் ஏற்றுக் கொண்டார். அவரைத் தவிர வேறு ஒரு நடிகராக இருந்தால், அப்படம் இப்போதைய வசூலில் ஐந்து சதவீதத்தைக்கூட பெற்றிருக்காது.
 
கோச்சடையானில் பொம்மை ரஜினியைப் பார்த்து ஏமாந்த ரசிகர்களை திருப்தி செய்ய ரஜினி அவசரமாக மேற்கொண்ட நடவடிக்கையே லிங்கா. அந்த அவசரமும், பல கைகள் மாறியதால் ஏற்பட்ட லிங்காவின் விலை உயர்வும் பலரை நஷ்டத்துக்குள்ளாக்கியது. லிங்காவின் தயாரிப்பு செலவுடன் ஒப்பிட்டால் அது வெற்றிப் படமே. 
 
ரஜினி ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிப்பது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், அது அவர் ஒரேயடியாக தனது திசையை மாற்றிக் கொள்வதற்கான ஆரம்பம் என்பது, கேட்க நன்றாக இருப்பினும் நடைமுறைக்கு வருமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
 
தமிழ் நடிகர்கள் அத்தனை பேரின் ஆசையும் நல்ல படம் தரும் தரமான நடிகனாக வேண்டும் என்பதில்லை. அதிக பணம் வசூல் செய்யும் வசூல் மகராஜாவாக ஆக வேண்டும் என்பதே. இதற்கு ரஜினியும் விதிவிலக்கல்ல.