வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 14 நவம்பர் 2014 (13:21 IST)

ரஜினிக்கு மத்திய அரசின் விருது சரியா?

2014 -ஆம் ஆண்டுக்கான சிறந்த திரையுலக பிரமுகருக்கான விருதை ரஜினிக்கு வழங்கவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இதனை வழங்குகிறார்கள்.
 
2014 -ஆம் ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருதை ரஜினிக்கு தரும் அளவுக்கு அவர் என்ன சாதனையை 2014 -இல் நிகழ்த்தினார்? திரையுலகை நிமிர்ந்து பார்க்க செய்யும் சாதனை எதுவும் அவரது திரைப்படங்கள் செய்தனவா? எந்த அடிப்படையில் இந்த விருதை மத்திய அரசு வழங்குகிறது?
 
இந்தக் கேள்விகளைவிட முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாக்கள், விருதுகள் என்பது நல்ல சினிமாவை போஷிக்கும் அமைப்புகள் மற்றும் நிகழ்வுகள். ரசிகர்களின் மேலோட்டமான உணர்வுகளை கிளறி காசு பார்க்கும் கமர்ஷியல் சினிமாவிலிருந்து விலகி வாழ்க்கையை அதன் யதார்த்தத்தோடும் அழகியலோடும் அணுகும் நல்ல படங்களை அடையாளம் காட்டுமிடங்கள் சர்வதேச திரைப்பட விழாக்கள். 
 
ஆனால் அங்கும் இந்த கமர்ஷியல் பட பிரபலங்கள்தான் கௌரவிக்கப்படுகிறார்கள். கான் சர்வதேச திரைப்பட விழா முதல் கோவா திரைப்பட விழாவரை இதுதான் நடக்கிறது. இங்கு திரையிடப்படும், கௌரவிக்கப்படும் படங்களுக்கு சம்பந்தமில்லாத, இந்த நல்ல படங்களுக்கு எதிர்திசையில் வினையாற்றக்கூடிய கமர்ஷியல் பட நடிகர், நடிகை மற்றும் இயக்குனர்கள்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். இது எவ்வளவு பெரிய ஐரனி.
 
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் சிறந்த இந்திய மொழி திரைப்படங்கள் திரையிடப்படும். போட்டிக்கு குவியும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களிலிருந்து நடுவர் குழு நல்ல படங்களை தேர்வு செய்யும். ஒவ்வொரு வருடமும் இந்தி, வங்காளம், மலையாளம், கன்னடப் படங்கள் குறைந்தது மூன்றாவது தேறும். ஆனால் தமிழில் அதிகபட்சம் ஒரு படம். சென்ற வருடம் ராமின் தங்கமீன்கள் படம் மட்டுமே தமிழில் இருந்து இந்தியன் பனோரமாவுக்கு தேர்வானது. இந்த வருடம் இதுவரை திரைக்கு வராத, குற்றம் கடிதல் என்ற படம்.

கோவா திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவின் மானத்தை காப்பாற்றியது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யப்படும் மாஸ் ஹீரோக்களின் படங்கள் இல்லை. ஆனால் கமர்ஷியல் வட்டாரத்திலும், இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாக்களிலும் அவர்களை மட்டுமே முன்னிறுத்துவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
 

 
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகை முன்னிறுத்திய தங்கமீன்கள், குற்றம் கடிதல் போல் சர்வதேச அளவில் இந்திய திரையுலகின் பெயரை நிலைநிறுத்துபவை அனுராக் காஷ்யப், மிருளாசென், அடூர் கோபாலாகிருஷ்ணன், கிரிஷ் காசரவள்ளி போன்ற படைப்பாளிகள், அவர்களின் படங்கள். இயற்கை விவசாயத்தை பேணி காப்பவர்களுக்கான பாராட்டுவிழாவுக்கு கெமிக்கல் உரங்கள் விற்கும் வியாபாரியை தலைமை தாங்க வைத்தால் எப்படியிருக்கும்? அதைதான் இங்கு அரசுகளும் தனியார் அமைப்புகளும் செய்து கொண்டிருக்கின்றன. 
 
ரஜினிக்கு தரப்படுவது சிறந்த பிரபலத்துக்கான விருது. அவரைவிட சிறந்த பிரபலம் திரைத்துறையில் யார் இருக்கிறார்கள்? அதனால் இது வீண் பேச்சு எனலாம். சரிதான். ஆனால் அதைத் தரவேண்டிய இடம் சர்வதேச திரைப்பட விழா அல்ல. அங்கு கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் அங்கு திரையிடப்படும் படங்களுக்கு பங்காற்றியவர்கள் மட்டுமே. மற்றவர்களுக்கு மத்திய அரசே பெரிய விழா ஏற்பாடு செய்து விருதோ விருந்தோ அவர்களுக்கு தோன்றியதை தரட்டும்.