வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2016 (14:28 IST)

புலி பட நஷ்டமும் பஞ்சாயத்தும்

புலி பட நஷ்டமும் பஞ்சாயத்தும்

விஜய் நடித்த புலி வெளியான போது மூன்றே நாளில் எண்பது கோடி, ஒரே வாரத்தில் 100 கோடி என்றெல்லாம் தயாரிப்பு தரப்பிலிருந்தே செய்திகள் வெளியாயின.


 


ஆனால், அவையெல்லாம் சுத்தமான பொய்யில் செய்த பிசுபிசுத்த பரோட்டாக்கள் என்பதை ஸ்ரீதேவி நிரூபித்தார். புலி படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட்டதால் அதற்கும் லம்பாக ஒரு சம்பளம் வேண்டும் என்று மயில் அடம்பிடிக்க, மருத்துவமனையில் இருந்த புலி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ், புலி ஏற்படுத்திய உள்காயங்களை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பிய கடிதத்தில் புட்டு வைத்தார். 
 
அவர் கூற்றுப்படி, புலி பலரையும் நஷ்டப்படுத்தியது அம்பலமானது.
 
ஷிபு தமீன்ஸ் தற்போது விக்ரம் நடிக்கும் இரு முகன் படத்தையும், புலியின் இன்னொரு தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார் போக்கிரி ராஜா படத்தையும் தயாரித்து வருகின்றனர். இதில் போக்கிரி ராஜா முடிந்து அடுத்த வாரம் - மார்ச் 4 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், புலி படத்திற்கான நஷ்டஈடை தந்தால் மட்டுமே போக்கிரி ராஜாவை வெளியிட அனுமதிப்போம் என தடை போட்டனர். அப்படியெந்த பிரச்சனையும் இல்லை என்று முதலில் மறுத்தார் பி.டி.செல்வகுமார். ஆனால், உண்மையை எப்போதும் மறைக்க முடியாது.
 
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீன்ஸ் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. தாணு தலைமை. இந்த பஞ்சாயத்தின் முடிவில், தயாரிப்பாளர்கள் இருவரும் ஆளுக்கு தலா 75 லட்சங்கள் தருவது என முடிவானது.

புலி படம் வெளியான அன்று காலைக் காட்சியும், சிறப்புக் காட்சியும் ரத்து செய்யப்பட்டன. அதற்கான நஷ்டஈடு இது என பி.டி.செல்வகுமாரும், ஷிபு தமீன்ஸும் கூறியுள்ளனர். அதாவது புலி யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பதே அவர்களின் வாதம். ஒன்றரை கோடி நஷ்டஈடுக்கு நீங்கள் சம்மதித்த பிறகும் நீங்க சொல்றதை நாங்க நம்புறோம் பாஸ்.