வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 8 ஆகஸ்ட் 2014 (11:15 IST)

விஜய்யின் கத்தி படத்தை எதிர்ப்பது சரியா?

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் கத்தி படத்தை எதிர்ப்பது என்பதில் சில அமைப்புகள் உறுதியாக இருக்கின்றன. படம் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்ப்பாளர்களைச் சந்தித்து விளக்கிய பின்பும் நிலைமை சீரடையவில்லை. 
 
கத்தி படத்தை ஐங்கரன், லைகா புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கின்றன. இதில் லைகா புரொடக்ஷனின் நிறுவனர் சுபாஸ்கரண் அல்லிராஜா, இலங்கை அதிபர் ராஜபக்சேயின் நெருங்கிய உறவினர்களுடன் தொழில்முறை கூட்டு வைத்துள்ளார் என்பதுதான் குற்றச்சாட்டு. அது குறித்து ஈழத் தமிழர்கள் நடத்தும் இணையத்தளங்கள் ஆதாரத்துடன் கட்டுரை வெளியிட, தமிழகத்தில் கத்திக்கு எதிர்ப்பு உருவாகியது. கத்தி விஜய் படம் என்பதால் எதிர்ப்பு தீவிரமடைந்தது. அதற்குக் காரணம் உண்டு.


 
நடிகை அசின், திரையுலகின் எதிர்ப்பை மீறி இலங்கை சென்றதுடன், இலங்கை அரசின் தூதுவர் போலவே செயல்பட்டார். அது தமிழர்களின் மனத்தில் கசப்பை உருவாக்கியது. அவரைத் தமிழ்ப் படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. அசினுக்கு யாரும் வாய்ப்பு தர தயங்கிய நிலையில் விஜய்யின் காவல்காரன் படத்தில் அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டார். விஜய் நினைத்திருந்தால் அசினை தவிர்த்து சர்ச்சையிலிருந்து விலகியிருக்க முடியும். ஆனால் எதிர்ப்பை மீறி அசின் விஜய்யின் நாயகியானார். இப்போது சர்ச்சைக்குள்ளான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். அதனால் இது திட்டமிட்ட செயல்தானோ என இயல்பாகவே சந்தேகம் வர வாய்ப்பு உள்ளது.
 
ஆனால் இவையெல்லாம் ஒரு படத்தைத் தடை செய்யவும், அதனை எதிர்க்கவும் காரணமாகிவிடுமா? இலங்கையுடன் தொழில்முறை உறவு வைத்திருக்கும் எத்தனையோ வர்த்தக நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. எத்தனையோ பேர் இலங்கையுடன் வர்த்தகம் செய்து வருகின்றனர். அவர்களையெல்லாம் விடுத்து கத்தியை மட்டும், அதனைத் தயாரித்தவர் இலங்கை அதிபரின் உறவினர்களுக்கு நெருக்கமானவர் எனக் கட்டம் கட்டுவது சரியான நடவடிக்கைதானா?

கத்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பதா, கூடாதா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை, அதனைத் தயாரித்தவருக்கு இலங்கை அரசுடன் தொடர்பு இருந்தால் கண்டிப்பாக படத்தை எதிர்ப்போம் என்று சொல்லியிருக்கும் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் ஈழப் படுகொலைக்குப் பிறகு இலங்கை சென்று ராஜபக்சேயுடன் கைகுலுக்கியவர்தான், விருந்துண்டவர்தான். 
 
இலங்கைக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் தீமானம் நிறைவேற்றக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்த சுஷ்மா சுவராஜுக்கும், பிஜேபிக்கும் ஆதரவாகக் கூட்டணி அமைத்துப் பிரச்சாரம் செய்தவர்தான் வைகோ. இதற்காகவெல்லாம் அவர்களை யாரும் ஒதுக்கவோ, அவர்களின் ஈழ உணர்வை கொச்சைப்படுத்தவோ செய்யவில்லை. அப்படியிருக்க கத்திக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது, தடை செய்ய கோருவது முறையற்றது. 


 
எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் ஒரு படைப்பைத் தடை செய்யக் கூடாது எனும் போது, தயாரித்தவருக்கு இலங்கை அதிபரின் உறவினர்களுடன் தொழில்ரீதியான நட்பு இருக்கலாம் என்ற காரணத்தை முன்னிறுத்தி, கத்தியை எதிர்ப்பதும் தடை செய்ய வலியுறுத்துவதும் நேர்மையான நடவடிக்கை கிடையாது.
 
கமல்ஹாசன் சண்டியர் என்ற பெயரில் படம் எடுத்த போது, அது குறிப்பிட்ட சாதியினரின் திமிரைக் காட்டுகிறது என்று போராட்டம் நடத்தி, பெயரை மாற்ற வைத்தார் கிருஷ்ணசாமி. ஆனால் இன்று அதே சண்டியர் பெயரில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது. கிருஷ்ணசாமி எங்கு போனார்? போராட்டம் என்னானது? பாபா படத்தின் பெட்டியைக் கடத்தியதால் எதைச் சாதித்தனர் பாமகவினர்? மும்பை எக்ஸ்பிரஸின் போஸ்டரைக் கிழித்ததால் தமிழை வளர்த்துவிட்டார்களா விடுதலை சிறுத்தைகள்?
 
திரைப்படங்களுக்கு எதிராக அரசியல் கட்சிகளும், சாதி சங்கங்களும், இந்திய, தமிழ் தேசியவாதிகளும் இதுவரை மேற்கொண்ட போராட்டங்களில் பெரும்பாலானவை அர்த்தமற்றவை. படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியதற்கு மேலாக இவர்களின் போராட்டத்தால் ஒரு பயனும் விளைந்ததில்லை. கத்திக்கு எதிரான இவர்களின் கர்ஜனையும் அப்படியானதே. இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வேறு விஷயங்கள் உள்ளன. அதில் தங்களின் நேரத்தையும், உழைப்பையும் செலுத்தாமல் ஒரு திரைப்படத்தை எதிர்ப்பதில் தங்களின் ஆற்றலை வீணடிப்பது வெற்று விளம்பரத்துக்காக என்றே எதிர்காலம் பதிவு செய்யும்.