வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Modified: திங்கள், 25 ஜனவரி 2016 (14:13 IST)

கல்பனா என்ற சகலகலாவல்லி

கல்பனா என்ற சகலகலாவல்லி

கல்பனாவின் குடும்பம் கலையை ஆதாரமாகக் கொண்டது. தாயும், தந்தையும் நாடக நடிகர்கள். தமக்கையும், தங்கையும் சினிமா நடிகைகள்.


 


எப்போதும் மேடையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் தனது குடும்ப நிலையை கல்பனா விரும்பவில்லை. அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்பாமலே சினிமாவுக்குள் வந்தவர். பிறகு எல்லோரையும்விட அதிகமாக சினிமாவை நேசித்தவர். 
 
51 வயதில் கல்பனாவின் மரணம் நடந்திருக்கிறது. காலன் செய்த மாபெரும் பிழை. தமிழில் சின்ன வீடு படம் கல்பனாவை அடையாளம் காட்டியது. சதி லீலவதி கல்பனாவின் நடிப்பாற்றலுக்கு ஒருசோறு பதம். பெரும்பாலும் அழகில்லாத பெண் அழகான கதாநாயகனை கனவு காணும் அபத்த கதாபாத்திரமே கல்பனாவுக்கு தரப்பட்டது. தனது பூசினார்ப்போன்ற முகமும், உடம்பும் கிண்டலடிக்கப்படுகிறது என்று தெரிந்து கொண்டே அந்த வேடங்களில் அவர் நடித்தார். கல்பனா வெறும் நகைச்சுவை நடிகை மட்டுமில்லை என்பதை விரைவிலேயே மலையாள சினிமா கண்டு கொண்டது. 
 
குணச்சித்திர வேடங்களில் கல்பனா ஜெnலிக்க ஆரம்பித்தார். சுருக்கமாக, எந்த வேடம் தந்தாலும் அதனை உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் திறமை அவரிடம் இருந்தது. அவருடன் நடிக்க நடிகர்கள் பலமுறை பயந்தனர் என்பதே அவரது திறமைக்கு சான்று.
 
1998 -இல் மலையாள இயக்குனர் அனில் குமாரை கல்பனா திருமணம் செய்து கொண்டார். அது அதிக வருடங்கள் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாட்டால் 2012 -இல் விவகாரத்து பெற்றுக் கொண்டார். ஒரே மகள் கல்பனாவுடன் வளர்ந்து வந்தார். பதினொன்று படிக்கும் வயது.
 
கல்பனாவின் மரணம், மலையாள சினிமாவின் சிரிப்பின் மந்தகாசத்தை பெருமளவு குறைக்கும். அவரைப் போன்ற ஆல்ரவுண்டர் எந்தமொழி சினிமாவில் உருவாகி வருவதும் அபூர்வம். அவரது மரணம் நிச்சயம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
 
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் கல்பனா நடித்துள்ளார். எல்லா கதாபாத்திரங்களிலும் தனது முத்திரையை பதிக்க அவர் தவறியதில்லை.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.