வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வியாழன், 18 ஜூன் 2015 (15:39 IST)

நடிகர் சங்க பிரச்சனை - அரசியல் சதி என்று அழுகுணி ஆட்டம்

கையும் களவுமாக மாட்டும் ஊழல் அரசியல்வாதிகளின் கடைசி அஸ்திரம், இது அரசியல் சதி என்று தங்களின் தவறுக்கு அரசியல் முலாம் பூசுவது. மதுரையில் பேட்டியளித்த நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் அதே அஸ்திரத்தைதான் பிரயோகித்திருக்கிறார். நடிகர் சங்க விவகாரத்தில் எங்களை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது என்று சரத்குமார் தெரிவித்தார்.
நடிகர் சங்கத்தின் இப்போதைய நிர்வாகிகளான தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர் காளை மூவரையும் விஷால், நாசர் மற்றும் அவரது ஆதரவு நடிகர்கள் எதிர்க்கின்றனர். அதற்கான காரணத்தை அவர்கள் தெளிவுபட பலமுறை எடுத்துரைத்துள்ளனர். அதற்கு இதுவரை முறையான விளக்கத்தை சரத்குமார் தரப்பு அளிக்கவில்லை. நாங்களும் சங்கத்துக்காகதான் உழைக்கிறோம். நிறைய பிரச்சனைகளை தீர்த்திருக்கிறோம், அரசியல் சதி செய்கிறார்கள் என்று சம்பந்தமில்லாமல் பேசி நழுவிக் கொண்டிருக்கிறார்கள்.
 
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் சங்க கட்டிடம் கட்டாமல் அதனை தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டதில் ஆரம்பித்தது பிரச்சனை. அப்படி ஒரு முடிவை சரத்குமாரும், ராதாரவியும் தன்னிச்சையாக எடுத்து, அவர்கள் இருவர் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 
இது குறித்து குமரிமுத்து விளக்கம் கேட்டதால், அவர் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசினார், சங்கத்துக்கு எதிராக செயல்பட்டார் என குற்றஞ்சாட்டி சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே அவரை நீக்கினர். அதனை எதிர்த்து குமரிமுத்து நீதிமன்றம் சென்றார். அவரை நீக்கியது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
 
குமரிமுத்து தரக்குறைவாக பேசினார் என அவரை சங்கத்திலிருந்து நீக்கினார்கள். அதேநேரம் பொருளாளர் காளை, விஷாலையும் அவரது ஆதரவு நடிகர்களையும் நாய் என்று பொது மேடையில் திட்டினார். காளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கூறியும் சரத்குமாரும், ராதாரவியும் அதனை கண்டு கொள்ளவில்லை.
 
சங்கத்து நிலத்தை தனியாருக்கு தரும் ஒப்பந்தத்தை எதிர்த்து நடிகர் பூச்சி முருகன் கோர்ட்டுக்கு சென்றார். நடிகர் சங்கம் சார்பில் ஒன்பது பேர் கையெழுத்துப் போட வேண்டிய ஒப்பந்தத்தில் சரத்குமாரும், ராதாரவியும் மட்டுமே கையெழுத்துப் போட்டதால் அந்த ஒப்பந்தம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், நடிகர் சங்கத்தில் நடக்கும் எதுவுமே சரியில்லை எனவும் நீதிபதி சந்துரு தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். விஷால், நாசர் எல்லாம் அரசியல் சதி காரணமாக குற்றஞ்சாட்டுகிறார்கள் என்று சொல்லும் சரத்குமார், நீதிபதியின் இந்தத் தீர்ப்புக்கு என்ன பதில் சொல்கிறார்?
 
இந்த தீர்ப்பை எதிர்த்து சரத்குமார் தரப்பு மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றமும் நீதியரசர் சந்துருவின் தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

சங்கத்தில் ஊழல் நடத்திருப்பதாக மன்சூரலிகான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். சென்னையில் நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு 11 லட்சங்கள் செலவாகியதாக கணக்கு காண்பித்திருக்கிறார்கள். ஒருநாள் உண்ணாவிரதத்துக்கு எதற்கு 11 லட்ச ரூபாய்கள்?
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிப்புப் பயிற்சி தந்ததாக 33 லட்சங்கள் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. எந்த நடிகர்களுக்கு யாரை வைத்து எப்போது நடிப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டது? அதற்கு எதற்கு 33 லட்சங்கள்?
 
மன்சூரலிகானின் இந்த கேள்விகளுக்கு பதிலில்லை.
 
இந்தப் பின்னணியில், ஜுலை 15 சங்கத்துக்கு தேர்தல் நடக்கயிருப்பதாக அறிவித்து, தேர்தலை நடத்த அவர்களே இரு வழக்கறிஞர்களை நியமித்துள்ளனர். வழக்கமாக தேர்தல் நடக்கும் விடுமுறை தினத்தை விடுத்து வார நாள்களில் தேர்தல் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.
 
இந்த தேர்தல் முறைப்படியும், நியாயப்படியும் நடைபெறாது, அப்படி நடத்தும் எண்ணம் சரத்குமார் தரப்புக்கு இல்லை என்பது சின்ன குழந்தைக்கே தெரிந்த ரகசியம். இதை உறுதியாகச் சொல்ல காரணம் உள்ளது. நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள உறுப்பினர்களின் பட்டியலை விஷால் தரப்பினர் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் கேட்டும் இதுவரை அந்தப் பட்டியலை ராதாரவி தரவில்லை. இது தேர்தல் நடைமுறைக்கே எதிரானது. யாருக்கு வாக்குரிமை உண்டு என்பது தெரியாமல் எப்படி விஷால் தரப்பினர் வாக்கு சேகரிக்க முடியும்? 
 
மேலும், இந்த சினிமா நடிகர் சங்கத்தில் அதிகமும் உறுப்பினர்களாக இருப்பது நாடக நடிகர்கள். இவர்களில் யாரும் இப்போது நாடகங்களில் நடிப்பதில்லை. மதுரை சேலம் என்று சொந்த ஊர்களில் செட்டிலானவர்கள். தேர்தல் நடைபெறும்போது இவர்களை அழைத்து வந்து ஓட்டு போட வைத்துதான் இதுவரை ராதாரவி ஜெயித்துக் கொண்டிருக்கிறார். வாக்காளர் பட்டியல் இல்லாமல் இவர்களை எப்படி கண்டு பிடிப்பது? ஓட்டு கேட்பது? முக்கியமாக இவர்கள் வாக்களிக்கும் தகுதியுடையவர்கள்தானா என்று கண்டுபிடிப்பது?
 
இவ்வளவு குளறுபடிகளை வைத்துக் கொண்டு, அதற்கு சரியான விளக்கமும் தராமல், அரசியல் சதி என்று புளுகுவது, நீயாயம்தானா? அடுத்த பிரதமராகும் முயற்சியில் இருக்கும் சரத்குமார் அவர்களே, நீங்களே சொல்லுங்கள் இது அறம்தானா?