வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : செவ்வாய், 31 மார்ச் 2015 (18:34 IST)

31 நாளில் 31 படங்கள் - ஊளைச் சதையால் உருக்குலையும் தமிழ் சினிமா

தேவைக்கு அதிகமாக பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகையில் தொழில் வளர்ச்சி படிப்படியாக குறையும். அதுதான் தமிழ் சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது.
 
டிக்கெட் கட்டணத்துக்கு மேல் ஐந்தும் பத்தும் மடங்கு பணம் கேட்கும் கொள்ளைக்கூடமாக திரையரங்குகள் மாறிய பிறகு சினிமாவை நேசிக்கும் சாதாரண பொதுமக்கள் திரையங்குக்கு செல்ல முடியாத நிலை உருவாகியிருக்கிறது.
 

 
பக்கத்து மாநிலம் கேரளாவில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் திருட்டு டிவிடி புளங்குவதற்கு திரையரங்குகள் கொள்ளைக் கூடாரமாக மாறியதே காரணம். இதுபற்றி மாதத்துக்கு இரண்டு கட்டுரைகளாவது நாம் எழுதிக் கொண்டுதான் இருக்கிறோம்.
 
சென்ற வருடம் டி.ஆர். இதே கருத்தை வலியுறுத்தி சினிமா விழா ஒன்றில் பேசினார். இன்றைக்கு எந்தப் படம் திரையிட்டாலும் சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரியில் அரங்கு நிறையும். அதற்கு காரணம், அங்கு அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் கிடைக்கிறது என்று ஆதாரத்துடன் அவர் பேசினார். ஆனால், பேராசையும், குறுக்கு வழியும் நிரம்பிய தமிழ் சினிமாவின் காதுகளில் அது ஏறவில்லை.
 
என் வழி தனி வழி படத்தின் 25 -வது நாள் விழாவில் பேசிய ஆர்கேயும் இதே கருத்தை வெளியிட்டார். பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிற ஒருவன், 100 ரூபாய் டிக்கெட்டை 300 ரூபாய்க்கு விற்றால் எப்படி தியேட்டருக்கு வருவான் என்ற நியாயமான கேள்வியை அவர் எழுப்பினார். திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை ஏற்றி சாதாரண சினிமா ரசிகனை திருட்டு டிவிடி பக்கம் நகர்த்தியதே சினிமாக்காரர்கள்தான் என அவர் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

ஆனால், இந்த தலையாய பிரச்சனைக்கு யாரும் தீர்வு காணப் போவதில்லை என்பதுதான், தமிழ் சினிமாவின் சுயநலம் நிரம்பிய பேராசை முகம்.
 
மார்ச் 1 -ஆம் தேதி முதல் இன்று 31 -ஆம் தேதிவரை மொத்தம் 31 திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது ஒருநாள் ஒரு திரைப்படம் என்ற விகிதத்தில். இதில், இவனுக்கு தண்ணில கண்டம் படம் மட்டுமே அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்ததாக கூறப்படுகிறது. ராஜதந்திரம் போன்ற படங்கள் இவ்வளவு பெரிய நெருக்கடி இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் நல்ல லாபத்தைப் பெற்றிருக்கும். ஆனால் ராஜதந்திரம் போன்ற படங்களுக்கு சாதகமாக இல்லை.
 

 
இந்த 31 திரைப்படங்களில் 25 படங்களாவது சினிமாவின் அடிப்படை குணாம்சங்கள் ஏதுமின்றி எடுக்கப்பட்டவை. சினிமா என்பது தனித்த கலை ஊடகம், அதற்கு கலாபூர்வமான பிரக்ஞை வேண்டும் என்ற புரிதலின்றி தயாரிக்கப்பட்டவை. ரசிகர்களை என்டர்டெய்ன் செய்யும் குறைந்தபட்ச அம்சங்களைக்கூட கொண்டிராதவை. 
 
இந்த ஊளைச் சதைகளால் ராஜதந்திரம் போன்ற ஓரளவு நல்ல படங்களும் நசுக்குண்டு போகின்றன. இந்த இக்கட்டிலிருந்து தமிழ் சினிமாவை யார் காப்பாற்றப் போகிறார்கள்? திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்தி திரையரங்குகள் கொள்ளை அடிப்பதை தடுத்தாலே, பெரிய படங்களின் ஆதிக்கம் குறைந்து சின்னப் படங்களுக்கு வழி பிறக்கும். இந்த குறைந்தபட்ச தேவையைக்கூட கவனிக்காமல் ஊழலின் பெரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது, அரசு என்கிற எந்திரம்.