1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 11 அக்டோபர் 2014 (09:07 IST)

இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்கள்

கத்தி
--------
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கியிருக்கும் கத்தி இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் முக்கியமானது. விஜய் - முருகதாஸின் துப்பாக்கி சூப்பர்ஹிட் ஆனநிலையில் கத்திக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கம். அதுவும் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். சமந்தா ஹீரோயின்.
கொல்கத்தாவில் படப்பிடிப்பை தொடங்கிய முருகதாஸ் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினார். இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். லைகாவும், ஐங்கரனும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 
லைகா நிறுவனம் ராஜபக்சேக்கு நெருக்கமானது என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் கத்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜெயா தொலைக்காட்சி வாங்கியதோடு எதிர்ப்புச் சத்தம் பெருமளவு குறைந்தது. எனினும் படத்தின் வெளியீட்டின் போது சிறு சலசலப்பு ஏற்படலாம்.
 
இந்த சர்ச்சைகளால் படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை. விஜய் நடித்தப் படங்களில் கத்தியே அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வரும் தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.

பூஜை
---------
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள பூஜையை ரசிகர்களைவிட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அதிகம் எதிர்பார்க்கின்றனர். எந்திரனைவிட ஹரியின் சிங்கம்தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் அதிக லாபத்தை பெற்றுத் தந்தது (காரணம் எந்திரனுக்கு தந்த பணத்தில் மூன்றில் ஒரு பகுதிதான் அவர்கள் சிங்கத்துக்கு தர வேண்டியிருந்தது). ஹரியின் படங்கள் எப்போதும் முதலுக்கு மோசம் செய்வதில்லை. அத்துடன் ஹரி - விஷாலின் முந்தையப் படமான தாமிரபரணி அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தை சம்பாதித்து தந்தது.
அப்பத்தா சித்தப்பா முதல் பேரன் பேத்திகள் வரையிலான கூட்டுக் குடும்பம், நீதிமானாகிய ஹீரோ, அன்பும், கருணையும் மிக்க அவனது குடும்பம், ஹீரோவுக்கு அடங்கிய அழகான ஹீரோயின், இரண்டு மூன்று சேஸிங், மூச்சு முட்டும் வீர, சென்டிமெண்ட் வசனங்கள் என்ற ஹரியின் வழக்கமான கச்சா பொருள்களால்தான் பூஜையும் தயாராகியிருக்கிறது. ஸ்ருதி ஹீரோயின். கோயம்புத்தூரில் தொடங்குகிற கதை பீகாரில் முடிவது போல் திரைக்கதை அமைத்துள்ளனர். டாடா சுமோ பறப்பதை கிண்டல் பண்ணாதீங்க, அதெல்லாம் இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது என்று ஹரியே சொன்ன பிறகு அவற்றை விமர்சிப்பது வீண் வேலை.
 
கமர்ஷியல் பட ரசிகர்களை திருப்தி செய்யும் அனைத்து அம்சங்களும் பூஜையில் இருக்கும் என்பதால் தீபாவளிக்கு கத்தியுடன் வந்தாலும் பூஜைக்கு தனி மார்க்கெட் இருக்கவே செய்கிறது.

---
இந்த வருடத்தின் அதிகபட்ச எதிர்பார்ப்பு ஷங்கரின் ஐ படத்துக்குதான். இரண்டரை வருட உழைப்பில் தயாராகியிருக்கும் இப்படம் தீபாவளிக்கு வருவதாகதான் இருந்தது. ஸீஜி வேலைகள் முடிவடையாததால் நவம்பரில் படம் திரைக்கு வருகிறது.
ஐ -க்காக இரண்டரை வருட கடும் உழைப்பை கொட்டியிருக்கிறார் விக்ரம். படத்துக்காக கட்டுமஸ்தாக உடலை மாற்றியதும், இளைத்து துரும்பானதும் படம் பார்க்கும் ரசிகர்களை நிச்சயம் பரவசப்படுத்தும். எமி ஜாக்சன் ஹீரோயின். ஒவ்வொரு பிரேமிலும் பிரமாண்டத்தை கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர்.
 
ரஹ்மானின் இசை, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, வீட்டா நிறுவனத்தின் மேக்கப், ஹாலிவுட் சண்டைக் கலைஞர்களின் ஆக்ஷன் என்று ஆகச்சிறந்தவைகளால் நெய்யப்பட்டதுதான் இந்த ஐ. யூ டியூபில் படத்தின் டீஸருக்கு கிடைத்த ஹிட்ஸ் தமிழ் சினிமா சரித்திரத்தில் மிகப்பெரிய சாதனை.
 
சர்வ நிச்சயமாக ஐ -தான் இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் டாப் எனலாம்.
 
லிங்கா
-----------
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம். சுதந்திரத்துக்கு முந்தைய முப்பதுகளும், நிகழ்காலமும் படத்தில் வருகிறது. சரித்திரகால ரஜினிக்கு சோனாக்ஷியும், நிகழ்கால ரஜினிக்கு அனுஷ்காவும் ஜோ‌டிகள். ரஜினியின் இரு வேடங்களில் ஒன்று கலெக்டர் என்கின்றன செய்திகள்.
ரஹ்மான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். கர்நாடகாவில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி உள்ளனர். கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளை இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக எடுத்திருப்பதாக படயூனிட் தெரிவிக்கிறது. ராக் லைன் வெங்கடேஷ் படத்தை தயாரித்துள்ளார்.
 
கோச்சடையான் படத்தில் அனிமேஷன் ரஜினியைப் பார்த்து ஆயாசமான ரசிகர்களின் கண்களுக்கு நிஜ ரஜினி அதுவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் லிங்கா மறக்க முடியாத ட்ரீட்டாக இருக்கும். டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாளில் படம் திரைக்கு வருகிறது.
 
உத்தம வில்லன்
---------------------------
கமலின் கதை திரைக்கதை வசனத்தில் தயாராகியுள்ள படம். கமல் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாடக நடிகர், நிகழ்கால சினிமா சூப்பர் ஸ்டார் என இரு வேடங்கள். பூஜா குமார், ஆண்ட்ரியா, ஜெயராம், பார்வதி நாயர், மரியான் பார்வதி, ஊர்வசி ஆகியோருடன் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் போன்ற ஜாம்பவான்களும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் படத்தை இயக்கியுள்ளார்.
உத்தம வில்லன் கமலின் வழக்கமான காமெடிப் படமும் இல்லாமல், சீரியஸ் படமும் இல்லாமல் கலவையாக உருவாகியுள்ளது. தெய்யம் போன்ற புராதன கலை வடிவங்களையும் கதை தனக்குள்ளே கொண்டிருக்கிறது. கமல் படம் வித்தியாசமாக எதையாவது கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பே உத்தம வில்லனின் பலம்.
 
நவம்பர் 7 திரைக்கு வரும் என்று சொல்லப்பட்ட இப்படம் டிசம்பர் இறுதியிலாவது திரைக்கு வந்துவிடும் என்று நம்பப்படுகிறது. திருப்பதி பிரதர்ஸும், ராஜ் கமல் இன்டர்நேஷனல்ஸும் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.
 
மற்றவை
----------------
இவை இந்த வருட எதிர்பார்ப்புக்குரிய படங்களில் முக்கியமானவை. இவை தவிர சிம்பு நடித்துள்ள வாலு, இது நம்ம ஆளு, கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அனேகன், ஆர்யாவின் மீகாமன் என மேலும் பல எதிர்பார்ப்புக்குரிய படங்கள் உள்ளன.
 
எதிர்பார்ப்புக்குரிய படங்கள் அதிகம். அதில் எத்தனை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.