தங்கல் சாதனையை முறியடிக்குமா சல்மான் படம்? - ஓர் அலசல்


Last Modified திங்கள், 6 பிப்ரவரி 2017 (13:10 IST)
100 கோடி கிளப் என்பது மலிந்துவிட்டது. வருடத்துக்கு எட்டோ பத்தோ இந்திப் படங்கள் 100 கோடியை தாண்டி வசூலிக்கின்றன. அக்ஷய், அஜய் தேவ்கான் படங்கள் 100 கோடிகளை தாண்டினால் வெற்றிப் படம். அதுவே சல்மான் கான் படம் 100 கோடியை தொட்டால் தோல்விப் படம். அவரது படங்கள் குறைந்தது 200 கோடியையாவது வசூலிக்க வேண்டும். இதுதான் ஸ்டார் நடிகர்களுக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கும் உள்ள வித்தியாசம். சும்மா அடித்துவிடவில்லை. 100 கோடி வசூலித்த சல்மான் கானின் ஜெய்ஹேn ஒரு தோல்விப் படம். நாம் சொல்லவில்லை, சொன்னது சல்மான்.

 

ரைட். இந்திப் படங்களை பொறுத்தவரை சல்மான் கான், அமீர் கான், ஷாருக்கான் என்று மூன்று கான்கள்தான் டான், கடவுள் எல்லாமே. இதில் ஷாருக்கானின் நிலைமை கொஞ்சம் கஷ்டத்தில். டப்பா படங்களாக நடிப்பதால் 100 கோடியை தொடவே முக்கி முனக வேண்டியிருக்கிறது. கடைசியா ஷாருக்கின் கௌரவ வெற்றி என்று பார்த்தால் சென்னை எக்ஸ்பிரஸ். 227 கோடிகளை இந்தியாவில் வசூலித்தது. அதுதான் அவரது டாப் கலெக்ஷன்.

அமீர் கான் மூன்று வருடத்துக்கு ஒரு படம் நடிக்கிறார். பென்ச் மார்க்கெல்லாம் இவர் படங்கள்தான். முதலில் 1,00 2,00 300 கோடிகளை வசூலித்த பெருமை இவரது படங்களுக்கே. அதேபோல் இந்தி சினிமாவின் அதிகபட்ச இந்திய வசூல், 340.8 கோடிகள். சாதித்தது அமீர் கானின் பிகே.

பிகே சாதனையை முறியடிக்க சல்மான் கானும் ரொம்பவே முயன்றார். பஜ்ரங்கி பைஜான் தொட்டுவிடும் தூரத்தில் வந்தது. 321 கோடிகள். 20 கோடிகள் பின்தங்கியதால் முந்த முடியவில்லை. சுல்தானும் முயன்றது. ஆனால், 301.5 கோடிகளுடன் சுல்தான் களைத்துவிட்டார். பிகே சாதனையை எட்டிப் பிடிக்க சல்மான் திணறியபோது, அமீர் கானின் தங்கல் பிகே சாதனையை முறியடித்து 385 கோடிகளை வசூலித்தது. தனது சாதனையை தானே முறியடித்தார் அமீர் கான்.

தங்கல் சாதனையை முறியடித்து 400 கோடி கிளப்பில் முதல் ஆளாக நுழைய துடிக்கிறார் சல்மான். அவரால் அது முடியுமா?

சல்மான் கானின் அடுத்த படம், டியூப்லைட். ஜுன் 23 ரம்ஜானை முன்னிட்டு வெளியாகிறது. ஏக் தா டைகர், பஜ்ரங்கி பைஜான் போன்ற பம்பர் ஹிட்களை சல்மானுக்கு தந்த கபீர் கான்தான் டியூப்லைட்டின் இயக்குனர். ஆனாலும் படம் குறித்து ரசிகர்களிடையே போதுமான எழுச்சியில்லை. அதனால் 300 கோடிகளை டியூப்லைட் தொட்டாலே ஆச்சரியம் என்ற நிலைமை.

இதையடுத்து டிசம்பர் 22 சல்மானின் டைகர் ஸிந்தா ஹே படம் வெளியாகிறது. ஏக் தா டைகரின் இரண்டாம் பாகம் என்பதால் ரசிகர்களிடையே பெயரைச் சொன்னாலே ஒரு அதிர்வு தெரிகிறது. சல்மானின் முன்னாள் காதலி கத்ரினா கைப் வேறு நீண்ட நாள்களுக்குப் பிறகு இதில் சல்மானுடன் ஒன்று சேர்கிறார். சுல்தான் என்ற பம்பர் ஹிட்டை தந்த அலி அப்பாஸ் ஜாபர்தான் இந்தப் படத்தின் இயக்குனர்.

இந்த வருட இறுதிக்குள் தங்கலை சல்மான் முந்துவாரா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :