செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: செவ்வாய், 17 மே 2016 (11:38 IST)

மீரா ஜாக்கிரதை - குற்றம் நடந்தது என்ன?

மீரா ஜாக்கிரதை - குற்றம் நடந்தது என்ன?

நடிகர் சங்கத்தில் பாபி சிம்ஹா அளித்துள்ள புகார் புயலை கிளப்பியுள்ளது. மீரா ஜாக்கிரதை என்ற படத்தில் நான் நடிக்கவில்லை.


 


அந்தப் படத்தின் நாயகி மோனிகாவை நான் பார்த்ததும் இல்லை. என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்பதே அந்த குற்றச்சாட்டு.
 
மீரா ஜாக்கிரதை என்ற படத்தின் பின்புலத்தை அறிய ஆறு வருடங்கள் பின்னோக்கி போக வேண்டும். அப்போது பாபி சிம்ஹா பிரபலமாகாத ஒரு சாதாரண நடிகர். அவரை வில்லனாக வைத்து ஒரு படத்தை தயாரிப்பாளர் கேசவன் தயாரித்தார். முக்கிய வேடத்தில் அவரது மகன் மகேஷ்வரன் நடித்ததோடு உதவி இயக்குனராகவும் அதில் பணியாற்றினார். படப்பிடிப்பு நடந்தது திருச்செங்கோட்டில். இயக்கம் நாளைய இயக்குனர் போட்டியில் பங்கேற்ற சதீஷ். 
 
ஒருவாரம் நடந்த படப்பிடிப்பில் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் முட்டிக் கொண்டது. பாபி சிம்ஹா இயக்குனரின் பக்கம். பிரச்சனை பெரிதாகவே, இதுவரை ஷுட் செய்ததை தரமாட்டேன் என்றிருக்கிறார் சதீஷ். உடனே கேசவனும், அவரது மகனும் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் புகார் செய்து, அதுவரை ஷுட் செய்தவற்றை வாங்கியுள்ளனர். அதோடு படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.
 
இந்த நிகழ்வுக்குப் பிறகு பலமுறை தயாரிப்பாளரை சந்திக்க முயன்றதாகவும், அப்போதெல்லாம் சந்திக்க மறுத்தவர் இப்போது என்னுடைய பெயரை வைத்து படத்தை வெளியிட பார்க்கிறார் என பாபி சிம்ஹா குற்றஞ்சாட்டுகிறார். அதேபோல் பாபி சிம்ஹாவுக்கு பதில் வேறு ஒருவரை வைத்து டப்பிங்கை முடித்திருக்கிறார்கள். 
 
தயாரிப்பாளரின் மகன் மகேஷ்வரன் சொல்வது வேறு மாதிரியாக உள்ளது. டப்பிங் பேச அழைத்தபோது பாபி சிம்ஹா வரவில்லை. அதனால்தான் வேறு ஆளை பயன்படுத்தினோம் என்கிறார். அதேபோல், படப்பிடிப்பில் குடித்துவிட்டு வருவது சதீஷின் வழக்கம். அதன் காரணமாகவே பிரச்சனை தொடங்கியது என்கிறார்.
 
இதில் யார் சொல்வது சரி என்பதை நடிகர் சங்கம்தான் விசாரித்து வெளிப்படுத்த வேண்டும்.
 
சதீஷின் இயக்குனர் வேலையில் மகேஷ்வரன் மூக்கை நுழைக்க முயன்றதோடு, சதீஷுக்கான கிரெடிட்டை மகேஷ்வரன் எடுத்துக் கொள்ளப் பார்க்கிறார் என்பதும் முக்கியமான குற்றச்சாட்டாக முன் வைக்கப்படுகிறது. 
 
கடந்த ஞாயிறு காலை இது குறித்து பாபி சிம்ஹா நாசர் மற்றும் விஷாலுடன் பேசியிருக்கிறார். அவர்கள் அதனை ஒரு புகாராக எழுதித்தர கேட்க, அன்றே எழுதி தந்துள்ளார் பாபி சிம்ஹா. நேற்று தேர்தல் என்பதால் இந்த புகாரின் மீது எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை. இன்று முதல் பஞ்சாயத்து விறுவிறுப்படைய உள்ளது.