வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : புதன், 11 மார்ச் 2015 (11:24 IST)

தமிழ்ப் படங்களால் மலையாளப் படங்கள் தோல்வி - மலையாள திரையுலகம் குற்றச்சாட்டு

தமிழ்ப் படங்களின் ஆதிக்கம் காரணமாக மலையாளப் படங்கள் தோல்வி அடைகின்றன என மலையாள திரையுலகம் பல வருடங்களாக குற்றஞ்சாட்டி வருகிறது. சமீபத்தில் இந்த புகார் வெளிப்படையாக சில பிரபலங்களால் முன் வைக்கப்பட்டது.
தமிழ்ப் படங்கள் கேரளாவில் டப் செய்யப்படாமல் நேரடியாகவே வெளியாகின்றன. பல நேரங்களில் மலையாள நேரடிப் படங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்ப் படங்கள் வசூலில் முதலிடத்தைப் பிடிப்பதும் நடக்கிறது. சமீபமாக எந்த மலையாளப் படமும் கேரளாவில் நல்ல வசூலை பெறவில்லை.
 
மலையாளப் படவுலகின் முன்னணி நடிகர் பிருத்விராஜ் நடித்த பிக்கெட் 43 திரைப்படம் நல்ல வசூலை பெற்றதாக மீடியாக்கள் எழுதின. 4 கோடியே எழுபது லட்சத்தில் தயாரான இந்தப் படத்தை ஓ.ஜி.சுனில் தயாரிக்க மேஜர் ரவி இயக்கியிருந்தார்.
 
ஜனவரி மாதம் வெளியான இப்படம் 50 நாள்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெற்றி என வெற்றிக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், கேரளா ஃபிலிம் எக்ஸிபிட்டர்ஸ் அசோஸியேஷனின் தலைவர் லிபர்ட்டி பஷீர் ஒரு பகீர் செய்தியை வெளியிட்டார். அனைவரும் சொல்வது போல் பிக்கெட் 43 ஒன்றும் வெற்றிப் படமில்லை என்பதுதான் அந்த செய்தி. 
 
பிக்கெட் 43 சுமாராகவே வசூலித்தது என லிபர்ட்டி பஷீர் சொன்னதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் ஓ.ஜி.சுனில் இயக்குனர் மேஜர் ரவி மீது புதிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். 4 கோடி பட்ஜெட்டில் படத்தை எடுப்பதாக கூறிவிட்டு 70 லட்சங்கள் அதிகமாக செலவு செய்துவிட்டார் என வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளார். அதனால், படம் ஹிட் என்றவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

அதேபோல் மம்முட்டியின் நடிப்பில் வெளியான ஃபயர்மேன் திரைப்படமும் ஹிட் என்று மலையாள திரையுலகம் கொண்டாடியது. அப்படமும் சுமாராகவே வசூலித்தது என உண்மையை போட்டுடைத்துள்ளார் லிபர்ட்டி பஷீர்.
நடிப்புக்காக தேசிய விருது பெற்ற நடிகர் சலீம்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய படம், கம்பார்ட்மெண்ட். மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்து அவர் இயக்கிய இப்படம் சில தினங்கள்கூட ஓடவில்லை. ஒரே வாரத்தில் திரையரங்குகளிலிருந்து படத்தை திரும்பப் பெற வேண்டிய சூழல் சலீம்குமாருக்கு ஏற்பட்டது. மலையாளிகள் சராசரி மனிதனின் வாழ்க்கையை பார்க்க விரும்பவில்லை. தமிழ்ப் படங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் மலையாளப் படங்களுக்கு இல்லை என தனது படம் ஓடாததற்கு தமிழ்ப் படங்களை குற்றம்சாட்டியிருக்கிறார்.
 
அவர் அப்படி சொல்வதில் காரணம் உள்ளது. மார்ச் முதல்வாரம்வரை கேரளாவில் 31 மலையாளப் படங்களும், 10 பிறமொழிப் படங்களும் வெளியாகின. அதில் நல்ல லாபம் சம்பாதித்த ஒரே படம் என்றால், ஷங்கரின் ஐ படம் மட்டுமே. மற்ற அனைத்தும் தோல்வி மற்றும் சுமார் படங்கள். லிபர்ட்டி பஷீர் இந்த வசூல் உண்மையை வெ பிறகு, தமிழ்ப் படங்களை கேரளாவில் திரையிடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முணுமுணுப்பு கேட்கத் தொடங்கியிருக்கிறது. இது பெருங்கூச்சலாக உருவெடுத்தால் தமிழ்ப் படங்கள் சிக்கலுக்குள்ளாக நேரிடும்.