வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2015 (13:12 IST)

நிவின் பாலிக்கு விருதா? - போராட்டத்தில் குதித்த மம்முட்டி ரசிகர்கள்

கேரள அரசு வருடா வருடம் திரைப்பட விருதுகளை அளித்து வருகிறது. ஒன்பது பேர் கொண்ட நடுவர்குழு படங்களைப் பார்த்து சிறந்த படம், கலைஞர்களை தேர்வு செய்யும். இந்த வருடம் பழம்பெரும் கதாசிரியர் ஜான் பால் தலைமையில் நடுவர் குழு அமைக்கப்பட்டு, விருதுக்கு தேர்வானவர்களின் விவரம் இரண்டு தினம் முன்பு அறிவிக்கப்பட்டது.
 

 
சென்ற வருடத்தின் சிறந்த நடிகராக, 1983 படத்துக்காக நிவின் பாலி தேர்வு செய்யப்பட்டார். விருது அறிவிக்கப்பட்ட உடனேயே மம்முட்டி ரசிகர்கள் கலவரமானார்கள். மம்முட்டிக்கு தராமல் நிவின் பாலிக்கு விருதா என்று விருது அறிவிக்கப்பட்ட அன்றே கலகத்தில் குதித்தனர்.
 
கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படும் போதெல்லாம் மலையாள திரையுலகு சர்ச்சையில் அமளிதுமளிபடும். சென்ற வருடம் பாரதிராஜா நடுவர் குழு தலைவராக நியமிக்கப்பட்ட போதே முணுமுணுப்பு எழுந்தது. ஒரு தமிழரை ஏன் நடுவர்குழு தலைவராக்க வேண்டும் என்று. விருது அறிவிப்பு வெளியானதும் பல்வேறு சர்ச்சைகள். பாரதிராஜா படங்களை பார்க்காமலே விருதுக்கு படங்களை தேர்வு செய்தார் என நீதிமன்றம்வரை சென்றனர். சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய சுராஜுக்கு கேரள அரசு சிறந்த காமெடியன் விருதை தந்து கேவலப்படுத்தியதாக இயக்குனர் பைஜு இன்னொரு அஸ்திரத்தை எறிந்தார். 
 
இந்த வருடம் களத்தில் குதித்திருப்பவர்கள் மம்முட்டி ரசிகர்கள். முன்னறியுப்பு படத்தில் சிறந்த நடிப்பை தந்த மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது தராமல் நிவின் பாலிக்கு தருவதா என்பது அவர்களின் கேள்வி. இதனை வலியுறுத்தி திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்தப் போவதாக இன்று சின்ன சலசலப்பை ஏற்படுத்தினர்.
 
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ரஞ்சித்தின் ஞான் படத்தில் நடித்திருந்தார். நிகழ்காலம், கடந்தகாலம் என இரு காலங்களில் நடைபெறும் கதை. இந்தப் படமும் விருதுப் போட்டியில் இருந்தது. அந்தப் படத்துக்காக துல்கர் சல்மானுக்கு சிறந்த நடிகருக்கான விருது தராமல் நிவின் பாலிக்கு தந்ததாலேயே மம்முட்டி ரசிகர்கள் கலகத்தில் குதித்தனர் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.
 
விருது கிடைக்கவில்லை என்று நடிகரின் ரசிகர்கள் திரையரங்குகளை மூடி பந்த் நடத்துவதாக அறிவிப்பது எல்லாம் கேரளாவில் மட்டும்தான் நடக்கும்.