வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : திங்கள், 7 மார்ச் 2016 (12:05 IST)

மலையாள கலைஞர்களின் உயிரை குடிக்கும் மது

மலையாள கலைஞர்களின் உயிரை குடிக்கும் மது

கலாபவன் மணியின் மரணம் பல விஷயங்களை பரிசீலனை செய்ய நிர்ப்பந்திக்கிறது.


 
 
கலாபவன் மணியின் மரணம் இயற்கையானதல்ல என்ற மணியின் சகோதரரின் புகாரைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மரணத்துக்கான காரணம் எதுவாக இருப்பினும், மணியின் குடியும் இந்த மரணத்துக்கு ஒரு காரணம் என்பதை மறுக்க இயலாது.
 
கடந்த சில வருடங்களில் பல மகத்தான கலைஞர்களை மலையாள சினிமா இழந்தது. அந்த மரணங்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் மரணத்துடன் தொடர்பு உடையது. கொச்சின் ஹனீபா, ராஜன் பி.தேவ், முரளி போன்ற பல கலைஞர்களின் அகால மரணத்துக்குப் பின்னால், அவர்களின் குடி முக்கிய காரணமாக இருந்துள்ளது.
 
மலையாளிகளின் குடி பிரசித்தமானது. மது விற்பனை செய்யும் அரசின் பிவரேஜ் கடைகள், தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளுடன் ஒப்பிடுகையில் மிகமிக குறைவு. பத்துக்கு ஒன்று என்ற விகிதம்கூட இல்லை. பார்களின் எண்ணிக்கையும் அப்படியே. இருந்தும் தமிழர்களைவிட குடியில் முன் நிற்கிறார்கள் மலையாளிகள். 
 
கேரள சாகித்யகாரர்கள் (இலக்கியவாதிகள்) பாருக்கு சென்றால், பைண்ட் (ஆஃப் பாட்டில்) ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், தமிழ் இலக்கியவாதிகள் குவார்டருக்கே தள்ளாடுகிறார்கள் என்ற ரீதியில், மலையாள இலக்கியவாதிகளின் குடியை சிலாகித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா ஒருமுறை எழுதினார். இலக்கியவாதிகளின் குடிக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை மலையாள திரையுலகினரின் குடி. மலையாளத்தின் ஆகச்சிறந்த இசையமைப்பாளர் ஜான்சனின் மரணத்துக்கும் அவரது அபிரிதமான குடியே காரணமாக இருந்தது. 
 
மேலும் அடுத்த பக்கம் பார்கக........

 


மலையாள சினிமாக்கள் குடியை கொண்டாடுகின்றன. குடியை மட்டுமே கதையாகக் கொண்டு சேட்டாயிஸ், ஹனி பீ போன்ற பல திரைப்படங்கள் வந்துள்ளன. குடி ஒரு சாதாரண நிகழ்வு, வீட்டில் குடிப்பதும், கொண்டாடுவதும் இயல்பானது என்ற மனப்பதிவை தருபவையாகவே உள்ளன மலையாள திரைப்படங்கள். இன்று மலையாளத்தின் சிறந்த நகைச்சுவை நடிகராக திகழும், தேசிய விருது பெற்ற சலீம் குமாரின் இன்றைய சுகவீனத்துக்கும் குடியே காரணம் என்று கூறப்படுகிறது. 
 
மணியின் குடி சமீபமாக அதிகரித்திருந்தது. அளவுக்கு மீறிய குடியில் அவரது கட்டுமஸ்தான உடல் உருக்குலைய ஆரம்பித்தது. பாபநாசத்தில் பலவீனமான அவரது உடலை பார்த்திருக்கலாம். சோர்வு, கவலை என்று பலவித சங்கடங்களை குடி அவரிடம் சேர்த்திருந்தது.
 
உம்மண் சாண்டியின் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் இன்று கேரளாவில் பார்கள் அடைக்கப்பட்டுள்ளன. பிவரேஜ் கடைகளும், மிலிட்டரி மது பானங்களும், கள்ளுக் கடைகளும் மட்டுமே நிலவில் உள்ளன. குடி குறைந்திருக்கிறது. ஆனால், இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்பதை மணியின் மரணம் அறிவுறுத்தியிருக்கிறது. 
 
தமிழகமும் மணியின் மரணத்தை ஒரு அபாய அறிவிப்பாக பார்த்து, குடியை குறைக்க வேண்டிய தவிர்க்க வேண்டிய நிலையில் உள்ளது.