1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2015 (10:39 IST)

எம்.எஸ்.விஸ்வநாதன் - காற்றில் கலந்த மெல்லிசை

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்துவிட்டார். மண்ணில் பிறந்தவருக்கு காலம் அருளும் கட்டாய பரிசு மரணம். சிலருடைய மரணங்கள்தான் ரத்த பந்தத்தை தாண்டி சகலரையும் பாதிக்கும். சோகத்தின் ஆழத்தில் விழ வைக்கும். மெல்லிசை மன்னரின் மரணம் அத்தகையது.
தமிழரின் நாடி நரம்பில் ஒன்று கலந்த இந்த மெல்லிசை, 1928 -ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள எலப்பள்ளியில் பிறந்தார். தந்தை மனயங்கத் சுப்ரமணியன். தாய் நாராயணிக்குட்டி. மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற பெயர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று சுருங்கியது.
 
மெல்லிசை மன்னரின் பால்யம் வறுமையால் சூழ்ந்திருந்தது. நான்கு வயதில் தந்தையின் மரணம். தாயக்கு கண்முன் தெளிந்த ஒரேவழி, தன்னையும், மகனையும் மாயத்து கொள்வதுதான். நல்லவேளையாக தனது தாத்தாவினால் காப்பாற்றப்பட்டு அவரால் வளர்க்கப்பட்டார்.
 
இசை அவரது உயிரில் கலந்திருந்தது. திரையரங்குகளில் தின்பண்டங்கள் விற்று வயிற்றை கழுவி வந்தநிலையில் நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். அவர் திருவனந்தபுரத்தில் முதல் முறையாக மேடை கச்சேரி நிகழ்த்திய போது அவரது வயது 13.
 
நடிப்பும், பாட்டும் அவரது மனதை நிறைத்திருந்தன. ஆனால், நடிகராவதற்கும், பாடகராவதற்கும் அவருக்கு வாய்ப்பு அமையவில்லை. நாற்பதுகளில் ஒன்றிரண்டு நாடகங்களில் சின்ன வேடங்கள் கிடைத்தன. சினிமா கம்பெனி அவருக்கு முதலில் தந்தது சர்வர் வேலை. எஸ்.வி.வெங்கட்ராமனின் இசைக்குழுவில் பணியாற்றிய போது தனது எதிர்காலம் எதுவாக இருக்கும் என்பதையும், தனது உள்ளார்ந்த திறமையையும் எம்எஸ்வி கண்டு கொண்டார்.
 
விரைவிலேயே சி.ஆர்.சுப்புராமனின் குழுவில் ஆர்மோனியம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வயலின் வாசிப்பவராக அறிமுகமானவர், டி.கே.ராமமூர்த்தி.

சுப்புராமன் திடீரென காலமானபோது அவர் முடிக்காமல்விட்ட படங்களின் இசைப்பணியை பூர்த்தி செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அடுத்து சில படங்களில் இணை இசையமைப்பாளர். பிறகு திரையுலகில் அரை நூற்றாண்டுக்குமேல் தனியாவர்த்தனம் செய்தார் எம்எஸ்வி.
எம்எஸ்.வியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான குணம், அவரது பணிவு. உயர்வு வரும்போது தானாக பணிவும் வந்தது அவரிடம். ஆசான்களிடமும், சாதாரணர்களிடமும் ஒரேவிதமான பணிவை அவர் காட்டினார். கண்ணதாசனுடனான அவரது நட்பும் பிரபலம். கண்ணதாசன் இல்லையேல் நானில்லை என்று கடைசிகாலம்வரை கூறியவர்.
 
எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும் இசையமைப்பாளர்களாக அறிமுகமான படம், பணம். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இந்தப் படத்தை தயாரித்தார். அதன் பிறகு இருவரும் இணைந்து பல நூறு படங்களுக்கு இசையமைத்தனர். இந்த எண்ணிக்கை 700 -ஐ தொடும். எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தோடு இந்த இணை பிரிந்தது. அதன் பிறகு தனியாக 500 -க்கும் மேற்பட்ட படங்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். 
 
1995 -இல் காலம் இந்த இரு மேதைகளையும் ஒன்றிணைத்தது. எம்எஸ்வியும், டிகே ராமமூர்த்தியும் இணைந்து எங்கிருந்தோ வந்தான் படத்துக்கு இசையமைத்தனர். ஆனால், அவர்களின் முந்தைய இசை சாகஸங்களை அப்படம் கொண்டிருக்கவில்லை.
 
எம்எஸ்வியின் ஆரம்பகால ஆசையான நடிப்புக்கு சில படங்கள் தீனி போட்டன. காதல் மன்னன், காதலா காதலா படங்களில் தனது குழந்தமையான நடிப்பால் கவனம் ஈர்த்தார். ரஹ்மான் இசையில் பாடினார். 
 
நாகேஷைப் போலவே தேசிய அளவில் இவருக்கு பெரிய அங்கீகாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனை பெறக்கூடிய லாகவமும் தொழில்நுட்பமும் அறியாத கலைஞர் அவர். தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் 74 படங்கள், தெலுங்கில் 31 படங்கள் என அவரது சாதனை பரந்து கிடக்கிறது.
 
தமிழனின் கலாச்சார அடையாளம் எம்.எஸ்.வி. தூய இனவாதம் பேசும் தேசியவாதிகளைவிட தமிழுக்கும், தமிழனுக்கும், தமிழ் திரையிசைக்கும் பங்களிப்பு செய்த மகா கலைஞன். உருவி வெளியே வைக்க இவர் உடைவாளில்லை. தமிழனின் உதிரத்தோடு கலந்த மெல்லிசை.