வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2015 (13:24 IST)

தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியல்

தமிழ் சினிமா சரித்திரத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் எவை? இந்தக் கேள்விக்கு துல்லியமாக விடை தருவது கடினம்.

படங்களின் வசூல் குறித்த தகவல்கள் பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பொருளாதார நலன்களுக்காக வசூலை கூட்டியும், குறைத்தும் சொல்வது இன்னும் தொடர்கிறது. இந்தி திரையுலகில், ஹாலிவுட் திரையுலகில் இருப்பது போன்ற வெளிப்படைத் தன்மை தமிழில் இல்லை.
 
தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்த திரைப்படங்கள் என இயக்குனர்கள் சங்கம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்போதைய நிலையில் அதிக நம்பகத்தன்மையுடன் கூடிய பட்டியல் இதுவே. 
 
11. காஞ்சனா 2
 
இந்த வருடம் வெளியான ராகவா லாரன்சின் காஞ்சனா 2 இந்தப் பட்டியலில் 11 ஆவது இடத்தில் உள்ளது. முனி, காஞ்சனா படங்களின் தொடர்ச்சியாக இப்படம் வெளிவந்தது. பேய் படத்தை காமெடியுடன் கலந்து கொடுக்கும் ட்ரெண்டை உருவாக்கிய படம், காஞ்சனா. அந்த பயம், நடிகச்சுவை காம்பினேஷன் காரணமாக காஞ்சனா 2 படத்தை ரசிகர்கள் குடும்பமாக திரையரங்கில் சென்று கண்டு களித்தனர்.
 

 
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியான இப்படம், இரண்டு மொழிகளிலும் லாபத்தை அள்ளியது. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இப்படம் இரு மொழிகளிலும் சேர்த்து 113 கோடிகளை வசூலித்துள்ளது.
 
10. சிங்கம் 2
 
விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சிங்கம் என்ற பெயரை கேட்டால் முகம் மலர்ந்து போவார்கள். அவர்களுக்கு லாபத்தை கொட்டிய படங்களில் சிங்கத்துக்கு சிறப்பான இடம் உண்டு. ஹரியின் வேகமான திரைக்கதை, சூர்யாவின் வீறாப்பான நடிப்பு, அனுஷ்காவின் அழகு, பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் அனைத்தும் அழகாக ஒன்றிணைந்த சிங்கத்தின் இரண்டாம் பாகம், சிங்கம் 2. 2013 -இல் வெளியான இப்படம் சிங்கம் அளவுக்கு இல்லையெனினும், சிங்கம் படத்தின் பிரபலம் காரணமாகவே வெற்றிகரமாக ஓடியது. 
 
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலுமாக இப்படம் 117 கோடிகளை வசூலித்தது.
 
09. துப்பாக்கி
 
ஒன்பதாவது இடத்தில் துப்பாக்கி. விஜய் நடித்த சமீபத்திய படங்களில் கச்சிதமான கதை, திரைக்கதை, காட்சியமைப்புகள் கொண்ட படம். க்ரைம் கதையுடன் காதலையும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் முருகதாஸ் கலந்திருந்தார். அதிக விளம்பரம் இன்றி நின்று ஓடிய படம் துப்பாக்கி.
 
2012 -இல் வெளியான இப்படம் 121 கோடிகளை வசூலித்தது.
 
 

08. ஆரம்பம்
 
பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தனும் அஜித்தும் இரண்டாவது முறை இணைந்த படம். அஜித்தின் ஸ்டைலிஷான தோற்றமும், நடையும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சுபாவின் கதை, திரைக்கதையில் போதாமை இருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு அது பொருட்டாக இருக்கவில்லை.


 

ஒரு காலத்தில் ஓஹோவென்றிருந்து, கடனில் தத்தளித்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தை இந்தப் படம் கரைசேர்த்தது. ஆர்யா, ராணா, நயன்தாரா, தாப்ஸி என பிரபல நட்சத்திரங்கள் நடித்த இப்படம் 2013 இல் வெளியானது.
 
படத்தின் மொத்த வசூல், 124 கோடிகள்.
 
07. கத்தி
 
துப்பாக்கிக்கு அடுத்து விஜய், முருகதாஸ் இணைந்த படம் என்பதால் கத்திக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. வழவழ முதல் பாதியை சமூக அக்கறையுடன் கூடிய இரண்டாம் பாகம் சரி செய்தது.


 

விவசாயப் பிரச்சனையை படம் தொட்டுச் சென்றதால் மீடியாவுக்கு படத்தை குறை சொல்ல முடியவில்லை. படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் மீதான குற்றச்சாட்டும், எதிர்ப்பும் படத்துக்கு கூடுதல் விளம்பரமானது.
 
கத்தியின் காரணகர்த்தாக்கள் எதிர்பார்த்ததைவிட படம் வசூலித்தது. மொத்த வசூல், 128 கோடிகள்.
 
06. சிவாஜி
 
ஏவிஎம் தயாரிப்பில் 2007 -இல் வெளியானது சிவாஜி. ஷங்காpன் பிரமாண்ட பாடல், ஆக்ஷன் காட்சிகள், ரஜினியின் மொட்டை அவதாரம், ஸ்ரேயாவின் கவர்ச்சி, கே.வி.ஆனந்தின் அற்புதமான ஒளிப்பதிவு, ரஹ்மானின் அட்டகாசமான பாடல்கள். படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.
 
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான படம் மொத்தமாக 148 கோடிகளை வசூலித்தது.
 

05. லிங்கா
 
பலரும் சொல்வது போல் லிங்கா குறைவாக வசூலிக்கவில்லை. பட்ஜெட்டைவிட அதிகமாகவே வசூலித்தது. தயாரித்தவர்களும், வாங்கி வெளியிட்டவர்களும் பெரும் தொகையை லாபமாக வைத்ததால் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பலத்த நஷ்டம் ஏற்பட்டது.
 

 
தமிழ், தெலுங்கு, உள்ளூர், வெளியூர் எல்லாம் சேர்த்து லிங்காவின் வசூல், 154 கோடிகள்.
 
04. தசாவதாரம்
 
கமல் பத்து வேடங்களில் நடித்து 2008 -இல் வெளியான படம். தசாவதாரம் மீது எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், அதன் திரைக்கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் சிறப்பானவை. சர்ச்சைகள் இல்லாமல் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான கமல் படம் இதுவாகவே இருக்கும்.
 
அனைத்து மொழிகளிலுமாக இப்படம் 200 கோடிகளை வசூலித்தது.
 
03. விஸ்வரூபம்
 
கடும் சர்ச்சைக்கு உள்ளான விஸ்வரூபம் தமிழக அரசின் தடை காரணமாக, தமிழகத்தில் வெளியாகாமல் பக்கத்து மாநிலங்களில் வெளியானது. ஒரு திரைப்படத்தைப் பார்க்க தமிழகர்கள் அருகிலுள்ள மாநிலங்களுக்கு படையெடுத்தது இந்தப் படத்துக்குதான். தாமதமாக வெளியானாலும், சர்ச்சைகள் விஸ்வரூபத்தை காப்பாற்றின.
 
அனைத்து மொழிகளிலுமாக 220 கோடிகளை படம் வசூலித்தது.
 

02. ஐ
 
இந்த வருடம் வெளியான ஐ தமிழ், தெலுங்கில் பிரமாதமான வசூலை பெற்றது. எளிமையான கதையாக இருந்தாலும், விக்ரமின் அர்ப்பணிப்பான நடிப்பும், பிரமாண்டமும், ஷங்கர் படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்ற ரசிகர்களின் நம்பிக்கையும் ஐ படத்தை இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உட்கார வைத்துள்ளது.
 

 
ஆஸ்கர் ஃபிலிம்ஸின் இந்தப் படம் தமிழ், தெலுங்கில் 239 கோடிகளை வசூலித்தது.
 
01. எந்திரன்
 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2010 -இல் வெளியான எந்திரன் முதலிடத்தில். ரோபோவாக நடித்த ரஜினி, nஜhடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஷங்கர், ரஹ்மான் என்ற பிரமாண்ட கூட்டணி. முக்கியமாக படத்தை எட்டு திசையிலும் பிரமோட் செய்த சன் குழுமம்.
 

 
தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமை கடந்த வருடம்வரை எந்திரனுக்கே இருந்தது (இப்போது பாகுபலி). எந்திரன் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 283 கோடிகளை வசூலித்தது. இந்த வசூல் இன்னும் முறியடிக்கப்படாமலே உள்ளது.
 
இந்தப் பட்டியலில் ரஜினி நடித்த படங்கள் படங்கள் உள்ளன. அடுத்த இடத்தில் கமல், விஜய். தலா இரு படங்கள். அஜPத், சூர்யா, லாரன்ஸ் தலா ஒரு படங்கள்.
 
இயக்குனர்கள் என்று பார்த்தால் ஷங்காpன் 3 படங்கள் உள்ளன. அடுத்து முருகதாஸின் இரு படங்கள். 
 
200 கோடிக்கு மேல் நான்கு படங்கள் வசூலித்துள்ளன. அதில் இரண்டு ரஜினி படங்கள். இரண்டு கமல் படங்கள். இன்றும் இவர்களே சூப்பர் ஸ்டார்கள் என்பதை இந்தப் பட்டியல் உறுதி செய்கிறது.