வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2016 (11:39 IST)

சென்றவார படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை

எப்படியாவது ரெமோ படத்தின் வசூலை கொடி முந்த வேண்டும் என்பது தனுஷின் நோக்கம். காஷ்மோராவின் வெற்றி எட்டுதிக்கும் ஒலிக்க வேண்டும் என்பது கார்த்தியின் விருப்பம். அவர்கள் நோக்கத்துக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப தீபாவளி அன்று இரண்டு படங்களும் வெளியாயின. போட்டிக்கு வேறு படங்கள் இல்லை. இரு நடிகர்களின் நோக்கமும், விருப்பமும் நிறைவேறியதா...?

 
கொடி, காஷ்மோரா இரண்டும் வெளியாகி கடந்த ஞாயிறுடன் பத்து தினங்கள் முடிகிறது. இந்த பத்து தினங்களில் அவற்றின் சென்னை வசூல் எப்படி உள்ளது? அதனை பார்க்கும் முன். வரிசையாக கீழிருந்து மேல்நோக்கி வருவோம். முதலில் கடலை.
 
தீபாவளிக்கு கொடி, காஷ்மோராவுடன் வெளியான மற்றொரு படம், கடலை. கடந்தவார இறுதியில் இந்தப் படத்தால் ஒரு லட்சத்தைகூட சென்னை சிட்டியில் வசூலிக்க முடியவில்லை. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல், வெறும் 4.5 லட்சங்கள்.
 
தமிழ்ப் படங்களுக்கு இந்திப் படங்கள் பரவாயில்லை. அஷய்தேவ் கான் இயக்கி நடித்திருக்கும் ஷிவாய் தீபாவளிக்கு வெளியானது. சென்னையில் நல்ல கலெக்ஷன். இதன் சென்ற வார இறுதி வசூல், 6.80 லட்சங்கள். கடந்த ஞாயிறுவரை சென்னையில் இப்படம் 42.90 லட்சங்களை வசூலித்துள்ளது.

 
அதே தீபாவளி அன்று வெளியான மற்றொரு இந்திப் படம், சர்ச்சைக்குள்ளான ஏ தில் ஹே முஷ்கில். இந்தப் படம் சென்ற வார இறுதியில் சென்னையில் 24.40 லட்சங்களை வசூலித்தது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 1.01 கோடி. இதுவொரு சாதனை. அமீர் கான், சல்மான் கான், ஷாருக்கான் போன்ற எந்த முன்னணி நடிகரின் படமும் சென்னையில் இதுவரை 1 கோடியை தாண்டியதில்லை (டோனி படம் விதிவிலக்கு. அது கிரிக்கெட் கேப்டன் டோனியை பற்றிய படம் என்பதால் சென்னையில் கிட்டத்தட்ட 2.5 கோடிகளை வசூலித்தது).
 
சென்ற வாரம் வெளியான ஆங்கில சூப்பர் ஹீரோ படமான டாக்டர் ஸ்ட்ரேன்ச் முதல் மூன்று தினங்களில் 31.41 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.
 
சென்னை பாக்ஸ் ஆபிசில் இரண்டாவது இடத்தில் காஷ்மோரா உள்ளது. சென்ற வார இறுதியில் 69 லட்சங்களை வசூலித்த படம், முதல் பத்து தினங்களில் சென்னையில் 2.61 கோடிகளை தனதாக்கியுள்ளது. இது சுமாரான வசூல்தான்.
 
சென்னை பாக்ஸ் ஆபிஸில் அதே முதலிடத்தில், கொடி. சென்ற வார இறுதியில் 82 லட்சங்களை வசூலித்த படம், முதல் பத்து தினங்களில் சென்னையில், 3.13 கோடிகளை தனதாக்கியுள்ளது. ரெமோவின் சென்னை வசூலில் பாதியை எட்டவே கொடி இன்னும் பல லட்சங்களை வசூலிக்க வேண்டும்.
 
ஆக, இந்த வசூல் நிலவரங்களை வைத்து தனுஷ், கார்த்திக் இருவரின் நோக்கமும், விருப்பமும் நிறைவேறியதா என்பதை கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.