வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By bala
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2016 (15:52 IST)

கடந்த வார படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை

கடந்த வாரம் வெளியான கடவுள் இருக்கான் குமாரு கடுமையான எதிர் விமர்சனங்களை பெற்றுள்ளது. கதையில்லாம் வெறும் கலாய்ப்பில் படம் எடுக்கிற ராஜேஷ் தனது ரூட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.


 

தேசமெங்கும் பணத்தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், எல்லா தொழில்களையும் போலவே திரைத்துறையும் முடங்கியுள்ள சூழலில், மோடியின் அதிரடி முடிவால் என்னுடைய படம் பிழைத்தது என்று பேட்டி தந்துள்ளார் கௌதம். பணத் தட்டுபாடு காரணமாக அச்சம் என்பது மடமையடா படத்துக்கு போட்டியாக எந்தப் படமும் வெளியாகவில்லை. ஷோலோவாக கல்லா கட்டி வருகிறது அச்சம் என்பது மடமையடா. அதைத்தான் இப்படி சொல்லியிருக்கிறார் கௌதம். சோகத்திலும் ஒரு சுகந்தம்.

சென்ற வார இறுதியில் மீன் குழம்பும் மண்பானையும் படம் ஏறக்குறைய 'நில்' கட்டத்தை எட்டியது. வார இறுதியில் இந்தப் படத்தால் சென்னையில் 56 ஆயிரங்களை மட்டுமே வசூலிக்க முடிந்துள்ளது. கொடி படத்தின் நிலையும் அப்படியே. சென்ற வார இறுதியில் 1.45 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் 3.57 கோடிகளை தனதாக்கியுள்ளது. தனுஷின் முந்தைய சில படங்களைவிட இது பரவாயில்லை. ஆனால், ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் குறைவுதான்.

கார்த்தியின் காஷ்மோராவை பலர் புகழ்ந்தாலும் படம் சுமாராகவே போனது. பலருக்கும் நஷ்டம். சென்ற வார இறுதியில் இப்படம் 1.63 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது. இதன் மொத்த சென்னை வசூல், 2.94 கோடிகள். தயாரிப்பாளர் தனது அடுத்தப் படத்தின் போது விநியோகஸ்தர்களால் நெருக்குதலுக்குள்ளாக்கப்படலாம்.

ஹாலிவுட் படமான டாக்டர் ஸ்ரேன்ச் சென்ற வார இறுதியில் 7 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல், 69.64 லட்சங்கள். ஹாலிவுட் படத்துக்கு இது தரமான வசூல்.

சென்னை பாக்ஸ் ஆபிஸில் 4 -வது இடத்தை இந்திப் படமான ஃபோர்ஸ் 2 பிடித்துள்ளது. இப்போதெல்லாம் இந்திப் படங்கள் சென்னையில் சொல்லி அடிக்கின்றன. சென்ற வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 17.62 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.

ஹாரிபாட்டர் கதையை எழுதிய ரௌவ்லிங்கின் கதையில் உருவான படம், ஃபென்டர்ஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டூஃபைண்ட் தெம். குட்டீஸ்களின் விருப்பப் படமாக மாறியுள்ள இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று நாளில் இதன் சென்னை வசூல், 38.70 லட்சங்கள்.

சென்ற வாரம் வெளியான கடவுள் இருக்கான் குமாரு முதல் மூன்று தினங்களில் சென்னையில் 72.40 லட்சங்களை வசூலித்துள்ளது. படத்தின் பட்ஜெட்டுக்கு இது மோசமில்லாத நல்ல வசூல். இதனை வரும்நாள்களில் படம் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதே கேள்வி.

அதே முதலிடத்தில் அச்சம் என்பது மடமையடா. முதல் வார இறுதியில் இரண்டு கோடிகளை கடந்த படம் வார நாள்களில் 1.47 கோடியை வசூலித்தது. கடந்த வார இறுதியில் இதன் சென்னை வசூல், 1.01 கோடி. நேற்றுவரை சென்னையில் இதன் வசூல் 4.54 கோடிகள். இப்படியே போனால் சென்னையில் ரெமோவின் வசூலை அச்சம் என்பது மடமையடா தாண்டும்.