வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (14:37 IST)

கடந்தவார படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை

கடந்தவார படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை

கடந்த வாரம் தொடரி, ஆண்டவன் கட்டளை என்று முக்கியமான இரு படங்கள் வெளியாயின. தமிழ் சினிமாவின் நல்ல நேரம்...


 
 
இந்த வருட படங்களின் வெற்றி சதவீதத்தை அதிகரிக்கும்வகையில் இவ்விரு படங்களுமே நல்ல வசூலை பெற்றுள்ளன.
 
இந்த மாதத்தின் அட்டர் ப்ளாப்களில் ஒன்று, த்ரிஷாவின் முதல் நாயகி மையப்படமான, நாயகி. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரான இப்படம் முதலில் தெலுங்கில் வெளியாகி படுதோல்வியடைந்தது. இரண்டு வாரங்களில் முன்பு தமிழில் வெளியானது. முதல் பத்து தினங்களில் 38.50 லட்சங்களை மட்டுமே சென்னை மாநகரில் இப்படம் வசூலித்துள்ளது. 
 
அமெச்சூர்தனமான காட்சிகள், வசனங்கள் என்று உட்கார்ந்து பார்ப்பதற்கான பொறுமையை சோதிக்கும் படமாக இது அமைந்தது துரதிர்ஷ்டம். 
 
சென்ற வாரம் வெளியான ஆங்கிலப்படம், தி மெக்னிபிஷன்ட் செவன் திரைப்படம் முதல் மூன்று நாளில் 9.22 லட்சங்களை வசூலித்துள்ளது. 
 
தெலுங்குப் படங்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பெறுவது சாதாரணமாகிவிட்டது. ஜுனியர் என்டிஆரின் ஜனதா கேரேஜைத் தொடர்ந்து நானியின் ரொமான்டிக் காமெடி மஜ்னு சென்னையில் முதல் மூன்று தினங்களில் 10.34 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 
இந்திப் படமான பிங்க் சென்சேஷனல் ஹிட்டாகியுள்ளது. அதன் தாக்கத்தை சென்னையிலும் பார்க்க முடிகிறது. அமிதாப், தாப்ஸி நடித்த இப்படம் சென்ற வார இறுதியில் சென்னையில் 11.07 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல் 58 லட்சங்கள்.
 
விக்ரமின் அதிர்ஷ்டம் என்று இருமுகனை சொல்லலாம். விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்த இந்தப் படம், இந்த ஆண்டின் ஹிட் படங்களுள் ஒன்றாகியிருக்கிறது. சென்ற வார இறுதியில் 19.25 லட்சங்களை வசூலித்த இப்படம் நேற்றுவரை சென்னையில் 5.70 கோடிகளை வசப்படுத்தியுள்ளது.
 
மணிகண்டனின் குற்றமே தண்டனை நல்ல விமர்சனத்தை பெற்றும் சரியாகப் போகவில்லை. ஆனால் ஆண்டவன் கட்டளை வெளியான முதல்நாளே ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. சென்ற வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 66.52 லட்சங்களை வசூலித்துள்ளது. நகைச்சுவை படம் என்பதால் வார நாள்களில் வசூல் எகிற வாய்ப்புள்ளது.
 
இந்த வாரம் முதலிடத்தில் தனுஷின் தொடரி உள்ளது. படம் சுமார் என்றாலும் பொறுமையை சோதிக்கவில்லை என்பது தொடரியின் ப்ளஸ். சென்ற வியாழக்கிழமை வெளியான இந்தப் படம் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று தினங்களில் 1.23 கோடியை வசூலித்துள்ளது. வியாழக்கிழமை வசூலையும் சேர்த்தால் 1.73 கோடி. நல்ல வசூல் என்றாலும், இருமுகனின் முதல்நான்கு நாள் வசூலுடன் (2.24 கோடிகள்) தொடரியின் வசூல் குறைவுதான்.