வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By Mahalakshmi
Last Updated : புதன், 26 நவம்பர் 2014 (11:17 IST)

இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

காவியத்தலைவன்
 
வசந்தபாலன் இயக்கியிருக்கும் காவியத்தலைவன் வரும் 28 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. சுதந்திரத்துக்கு முன்பு முப்பதுகளின் காலகட்டத்தில் மதுரையில் செயல்பட்டு வந்த நாடகக் கம்பெனிகளையும், நாடக நடிகர்களையும் சுற்றி பின்னப்பட்ட கதை. 
அடிதடி, காதல், ஆவி என்று தறிகெட்டுப் பறக்கும் திரையுலகில் நாடக உலகை மையப்படுத்திய கதையை எடுப்பதற்கு துணிச்சல் வேண்டும். சித்தார்த், பிருத்விராஜ், நாசர், வேதிகா போன்ற நட்சத்திரங்களை வைத்து நல்லதொரு அனுபவத்தை வசந்தபாலன் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தக் கதையை படமாக்க காரணமாக இருந்தவர் ஜெயமோகன். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் அவரது பங்களிப்பு உள்ளது. 
 
காவியத்தலைவனின் மைய எதிர்பார்ப்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். முப்பதுகளின் கதை என்பதால் சில மாதங்கள் அந்த காலகட்ட இசையை ஆராய்ச்சி செய்து இசையமைத்துள்ளார். நீரவ் ஷாவின் கேமரா, ரஹ்மானின் பாடல்கள், சித்தார்த், பிருத்விராஜின் நடிப்பு ஆகியவை ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தந்தால் காவியத்தலைவன் பெயருக்கேற்ப தமிழ் திரையுலகில் இடம்பிடிக்கும்.
 
ஒய்நாட் ஸ்டுடியோ தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு தமிழக அரசு முழுமையான வரிச்சலுகை அளித்துள்ளது.
 
வேல்முருகன் போர்வெல்ஸ்
 
வேல்முருகன் போர்வெல்ஸ் படப்போஸ்டர்களில் நாயகன் அங்காடித்தெரு மகேஷை நெருக்கித் தள்ளி முன்னால் இடம்பிடித்திருக்கிறார் கஞ்சா கருப்பு. அவரும் இயக்குனர் கோபியும்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள்.
 
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கஞ்சா கருப்பு. இந்தப் படத்தின் கதையும் அந்த மாவட்டத்தை சுற்றியே வருகிறது. பாரதப் பிரதமராலேயே தீர்க்க முடியாத தண்ணீர் பஞ்சத்தை வேல்முருகன் போர்வெல்ஸ் லாரியை வைத்து நான் தீர்க்கிறேன் என்று படத்தின் கதையை படம் ஆரம்பிக்கும் போது சொன்னார் கஞ்சா கருப்பு. அவர் சொன்ன கதையில், சொன்ன தொனியில் வெளிப்பட்ட அதிகாரமும், பெருமையும் படத்தில் மட்டுமின்றி படப்பிடிப்பு தளத்திலும் வெளிப்பட்டதாக படயூனிட் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.
 
நாயகன் அங்காடித்தெரு மகேஷ் என்றாலும் படத்தில் அவரது முதலாளியாக வரும் கஞ்சா கருப்புதான் கதையில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறாராம். நாயகி, ஆரிசி. இவர்கள் தவிர பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் ஆகியோரும் நடித்துள்ளனர். மலையன் படத்தை இயக்கிய கோபி படத்தை இயக்கியுள்ளார்.
 
முடிந்து பல மாதங்களாக பெட்டிக்குள் இருந்த வேல்முருகன் போர்வெல்ஸ் திரைக்கு வருவதே பெரிய வெற்றிதான். நாலு காசு வசூலித்தால் ப்ளாக் பஸ்டர்.

மொசக்குட்டி
 
மைனா படத்தைப் போன்று மொசக்குட்டியும் வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட படம் என்று தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் கூறும்போதே, எதையும் ஒப்பிடாமல் பெருமைப்பட்டுக் கொள்ள மொசக்குட்டியில் பிரபலங்கள் யாருமில்லை என்பது புரிகிறது.
 
வீரா என்ற புதுமுகம் ஹீரோ. இவர் கூத்துப்பட்டறை தயாரிப்பு. இப்போதெல்லாம் அங்கிருந்து வருகிறவர்கள்தான் அதிகம் படுத்துகிறார்கள். ஹீரோயின் மகிமா. தெரிந்த முகம் என்றால் பசுபதி. சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர் காம்பினேஷனில் காமெடியும் இருக்கிறது. ஆனால் இது காமெடி படம் கிடையாது.
 
நிஜ வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்களை வைத்தே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன் என்றார் படத்தை இயக்கியிருக்கும் ஜீவன். ஆம், ஒளிப்பதிவாளர் ஜீவனேதான். 
 
மைனா படத்தில் வரும் பேருந்து விபத்து காட்சியைப் போல் ஜீப் எரியும் ஒருகாட்சியை படத்தில் வைத்திருக்கிறார்களாம். மைனா படம் போலவே இந்தக் காட்சியும் பேசப்படுமாம்.
 
சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். படம் குறித்து வாயை திறந்தாலே மைனா மாதிரி, சாட்டை மாதிரி என்று படம் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்பிட்டு பேசுவதுதான் மொசக்குட்டியின் பலவீனம். 
 
மைனாவின் ஜெராக்ஸ் மாதிரி இருக்கு என்றால் மொசக்குட்டிக்கு அது அவமானம்தானே.
 
விஞ்ஞானி
 
இதுவொரு சயின்டிபிக் த்ரில்லர். படத்தை இயக்கி நடித்திருக்கும் பார்த்தி உண்மையில் ஒரு விஞ்ஞானி. இந்த செய்திகளை கூட்டி வாசிக்கும் போது யாராக இருந்தாலும் நிமிர்ந்து உட்கார்ந்துவிடுவார்கள்.
 
படத்தின் கதையும் மோசமில்லை.
 
விஞ்ஞான உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு தீர்வாக ஒரு கண்டுபிடிப்பை ஹீரோ நிகழ்த்துகிறார். அந்த நேரத்தில் அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த திடீர் திருமணம் அவரது கண்டுபிடிப்புக்கு உதவியதா உபத்திரமாக அமைந்ததா? முக்கியமான விஷயம், அவரது திருமணமே ஒரு பொறிதான். திட்டமிட்டு அவரை சிக்க வைத்திருக்கிறார்கள்.
 
சுவாரஸியமான கதை. ஆனால் சினிமா வெறும் கதை கிடையாது. அதனை எப்படி படமாக்கியிருக்கிறார் பார்த்தி என்பதில் இருக்கிறது அவரது வெற்றி. படத்தின் நாயகி, திருமணமாகி வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட மீரா ஜாஸ்மின். 
 
28 -ஆம் தேதி விஞ்ஞானி விஞ்சுவானா துஞ்சுவானா என்பது தெரியும்.

 
தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக ஹாரருக்கு மாறி வருகிறது. யாமிருக்க பயமே வெற்றிக்குப் பிறகு கோடம்பாக்க கதை விவாதங்களில் ஒரு ஊர்ல என்று ஆரம்பிக்காமல் ஒரு பேய்ல என்றுதான் விவாதிக்கிறார்கள். இந்த வரிசையில் இன்னொரு ஹாரர் படம் ஆ.
 
ஆனால் இந்த ஆ வை இன்னொரு ஹாரர் படம் என்று சுலபத்தில் ஒதுக்க முடியாதபடி இதன் இயக்குனர்களின் முந்தையப் படங்கள் மிரட்டுகின்றன. 
 
ஓர் இரவு, அம்புலி 3டி படங்களை இயக்கிய ஹரி சங்கர், ஹரீஷ் நாராயண் இருவரும்தான் இந்த ஆ வை இயக்கியுள்ளனர். இதன் கதை ஐந்து இடங்களில் நடக்கிறது. டோக்கியோ, துபாய், ஆந்திராவிலுள்ள நெடுஞ்சாலை மற்றும் ஒரு ஏடிஎம் சென்டர். 
 
கதை நடக்கும் இடங்களே இது மற்ற ஹாரர் படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்பதை உணர்த்திவிடுகின்றன. கோகுல்நாத், சிம்ஹா, பாலா, மேக்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
ஆ... அய்யோவாக இருக்காது என்று நம்பலாம்.
 
புளிப்பு... இனிப்பு...
 
இந்தப் படத்துக்கு முதலில் வைத்த பெயர், மடிசார் மாமி மதன மாமா. படத்தின் உத்தேசம், கதை, காட்சிகள் எப்படியிருக்கும் என்பதை பெயரிலேயே ஓரளவு ஊகித்துவிடலாம்.
 
இந்தப் பெயரில் ஊருக்கு ஒதுக்குப்புறமான திரையரங்கில் காலைக்காட்சிக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும் என்பதால் பெயரை மடிசார் மாமி என்று பிப்டி பிப்டி தள்ளுபடி செய்தனர். அதற்கும் எதிர்ப்பு. பிராமண சமூகத்தை இழுவுப்படுத்துகிறது என்று வழக்கு தொடுத்தனர். தீர்ப்பு வழங்கிய நீதிபதி எம்.ஜி.ஆர். காலந்தொட்டு உள்ள சினிமாவின் கதை, கதாபாத்திரங்கள், படப்பெயர்கள் என சகலத்தையும் விளக்கி விசாலானமான தீர்ப்பு ஒன்றை வழங்கினார். அதன் விவரம் மூன்று வெப்துனியா ஸ்பெஷல் அளவுக்கு வரும் என்பதால், கடைசி வரி மட்டும். மடிசார் மாமி என்ற பெயரில் படத்தை வெளியிடக் கூடாது. பெயரை மாற்றினால் வெளியிடலாம்.
 
பெயர் பிரச்சனை ஏற்படுத்திய அனுபவத்தை வைத்து புளிப்பு... இனிப்பு... என்று பெயரை மாற்றினர். மிதுன், மான்ஸி நடித்துள்ள படத்தை ரஞ்சித் போஸ் இயக்கியுள்ளார். பேஷ் என்று சொல்லும்வகையில் படம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
இவை தவிர மணம் கொண்ட காதல் என்ற படமும், ஸ்ரேயா நடித்த என்பெயர் பவித்ரா என்ற தெலுங்கு டப்பிங் படமும் வரும் 28 -ஆம் தேதி வெளியாகின்றன.