வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வியாழன், 26 பிப்ரவரி 2015 (09:36 IST)

இந்தவாரம் வெளியாகும் திரைப்படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

இந்த வாரம் இரவும் பகலும், சொன்னாப் போச்சு, மணல் நகரம், வஜ்ரம், எட்டுத்திக்கும் மதயானைகள், காக்கி சட்டை ஆகிய படங்கள் வெளியாகின்றன.
 
இரவும் பகலும்
 
இந்தப் படத்தை ஏ.தணிகைவேல் வழங்க ஸ்கை டாட்ஸ் பிக்சர்ஸ் சார்பாக பாலசுப்பிரமணியம் பெரியசாமி தயாரித்துள்ளார். இயக்கம் பால ஸ்ரீராம். அங்காடித்தெரு மகேஷ், அனன்யா, ஏ.வெங்கடேஷ், ஜெகன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
படத்தின் கதை?
 
பொறியியல் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன், எல்லோரும் மதிக்கும் வகையில் நல்ல முறையில் நடந்து கொள்ளும் நல்ல பண்புகளை கொண்டவன். காலையில் கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன், இரவில் மட்டும் திருடனாய் உலாவுகிறான். அவன் ஏன் திருடன் ஆனான்? எதற்காகத் திருடுகிறான் என்பதே ‘இரவும் பகலும் வரும்’ படத்தின் கதை.
 
தினா இசையமைத்துள்ள இப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.
 
வஜ்ரம்
 
பசங்க, கோலிசோடா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர்இ பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் தற்போது நடித்திருக்கும் படம் வஜ்ரம்.
இப்படத்தில் கதாநாயகியாக பவானி ரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
வழக்கமான நாலு பசங்க ஒரு ஹீரோயின் கதை. படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகம் என்று யுஏ சான்றிதழே தரமுடியும் என சென்சார் சொல்ல, காட்சிகளை ரீ ஷுட் செய்து யு சான்றிதழ் வாங்கியுள்ளனர்.
 
ஸ்ரீ சாய்ராம் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார். படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.
 
சொன்னா போச்சு
 
நான்கு ஹீரோக்கள், நான்கு ஹீரோயின்கள். எட்டு பேருமே அறிமுகங்கள். 
 
எந்தவொரு ரகசியமும் மறைத்து வைக்கப்படும்வரைதான் ரகசியம். அது வெளியே கசிந்துவிட்டால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கிராமம் ஒரு ரகசியத்தை நம்பி வாழ்கிறது. அந்த ரகசியத்தை உடைத்து கிராமத்தவர்களுக்கு நான்கு இளைஞர்கள் விழிப்புணர்வு ஊட்டுவதுதான் கதை. 
 
சாய்ராம் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை தயாரித்து பாடல்கள் எழுதி இசையமைத்திகிறார் பிசிஎம் என்பவர். இவர் படத்தில் திருநங்கையாக நடித்துமிருக்கிறார்.

மணல் நகரம்
 
இதுவொரு ஆக்ஷன் த்ரில்லர். மொத்தப் படத்தையும் துபாயில் படமாக்கியிருக்கிறார்கள். ஒரு காட்சியை படமாக்க அனுமதி மறுத்ததால் அதைமட்டும் 3 நாட்கள் இந்தியாவில் படமாக்கியுள்ளனர். 
 
ப்ரஜின் நாயகன். தனிஷ்கா, வருணா ஷெட்டி என இரு ஹீரோயின்கள். ஒருதலைராகம் சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற சோலைவன் செல்லாமல் பாலைவனம் செல்லும் ஒருவனின் கதை இது என்கிறார் இயக்குனர்.
 
எட்டுத்திக்கும் மதயானை
 
ராட்டினம் படத்தை இயக்கிய கே.எஸ்.தங்கசாமி தயாரித்து இயக்கியிருக்கும் படம். ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோ. எட்டுத்திக்குகளிலிருந்தும் வருகிற பிரச்சனைகளை ஹீரோ எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதையாம்.
அறிமுக நடிகை ஸ்ரீமுகி நாயகி. ராட்டினத்தின் நாயகன் லகுபரண், துர்கா, சாம் ஆண்டர்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதேபெயரில் நாஞ்சில் நாடன் ஒரு நாவல் எழுதியுள்ளார். ஆனால் இந்தத் தலைப்பை ஒரு பாடலிலிருந்து பெற்றதாக தங்கசாமி கூறுகிறார். படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
 
காக்கி சட்டை
 
எதிர்நீச்சல் டீம் அப்படியே இணைந்திருக்கும் படம். தனுஷ் தயாரிப்பு, துரை செந்தில்குமார் இயக்கம், அனிருத் இசை, நாயகனாக சிவ கார்த்திகேயன். நாயகி மட்டும் ப்ரியா ஆனந்துக்குப் பதில் ஸ்ரீதிவ்யா. 
 
சிவ கார்த்திகேயன் போலீஸாக முழு ஆக்ஷனில் இறங்கியிருக்கும் படம். படம் நெடுக ரஜினியின் மேனரிசங்களை, வாய்ஸ் மாடுலேஷனை காப்பி செய்திருக்கிறார். சுகுமாரின் ஒளிப்பதிவும், அனிருத்தின் இசையும் படத்தின் பக்க பலமாக இருக்கும்.