1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2015 (13:10 IST)

இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு பார்வை

இந்த வாரம் தமிழ் சினிமாவுக்கு முக்கியமானது. மூன்று முக்கிய திரைப்படங்கள் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகின்ற. வழக்கம் போல் சில உதிரி படங்கள், மொழிமாற்றுப் படங்கள்.
 
இது என்ன மாயம்
 
சைவம் படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் படம், இது என்ன மாயம். விக்ரம் பிரபு நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் தனது பிற படங்களைப் போலவே இந்தப் படத்தின் கதையையும் வேற்றுமொழிப் படத்திலிருந்தே தழுவியிருக்கிறார். எந்தப் படம் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். படம் வெளியான முதல்நாளே அந்த ரகசியத்தை ரசிகர்கள் உடைத்துவிடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 
விக்ரம் பிரபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவர் தமிழில் முதலில் ஒப்பந்தமான படம் இது. வழக்கம் போல் விஜய்யின் டீம்தான் இதிலும். இசை ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு நீரவ் ஷா, எடிட்டிங் ஆண்டனி. 
 
மேஜிக் ப்ரேம் சார்பில் சரத்குமார், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் படத்தை தயாரித்துள்ளனர்.

சகலாகலா வல்லவன்
 
அலெக்ஸ் பாண்டின் படத்துக்குப் பிறகு சுராஜ் இயக்கியிருக்கும் படம். படத்தை தயாரித்திருப்பது, ஒரு காலத்தில் தொடர்ந்து படங்கள் தயாரித்து வந்த, லட்சுமி மூவி மேக்கர்ஸ். ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி நடித்துள்ளனர்.
எஸ்எஸ் தமன் இசையமைக்க, யுகே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். நா.முத்துக்குமார், கார்க்கி, அண்ணாமலை பாடல்கள் எழுதியுள்ளனர். தளபதி தினேஷ் மற்றும் ஹரி தினேஷ் சண்டைப் பயிற்சி. ரொமான்டிக் காமெடியாக இந்தப் படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். முக்கியமாக சூரியின் காமெடி படத்தின் பக்க பலமாக இருக்கும். 
 
இந்தப் படத்துக்கு முதலில், அப்பாடக்கர் என்று பெயர் வைத்திருந்தனர். 30 சதவீத வரிச்சலுகை கிடைக்காது என்பதால் சகலகலா வல்லவன் என பெயரை மாற்றியுள்ளனர்.

ஆரஞ்சு மிட்டாய்
 
இந்த வாரம் வெளியாகும் படங்களில் முக்கியமான படம் இது. விஜய் சேதுபதி நடுத்தர வயதை கடந்த நரைத்ததலை மனிதராக இதில் நடித்துள்ளார். திரைக்கதை, வசனம், தயாரிப்பு, பாடகர் என்று இதில் அவருக்கு இன்னும் பல அவதாரங்கள், பொறுப்புகள். ஆம்புலன்சில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளனர். பிஜு விஸ்வநாத் படத்தை தயாரித்துள்ளார். 
பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை படத்தின் இயக்குனர் பிஜு விஸ்வநாத்தே கவனித்துள்ளார்.
 
ஆரஞ்சு மிட்டாயின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களைப் போல இந்தப் படமும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்தப் படங்கள் தவிர, டோனியென் நடித்துள்ள ஆக்ஷன் படம் ஸ்பெஷல் ஐடி, த கான் ஆர்ட்டிஸ்ட் (தமிழில் களவுக்கலைஞன்) ஆகிய படங்களும் வெளியாகின்றன. தமிழில் வெளியாகும் இன்னொரு படம், ராகதாளங்கள். இந்தப் படத்தின் விளம்பரங்களில் சில்க் ஸ்மிதா இருக்கிறார். சில்க் நடித்த படம் என்றே விளம்பரப்படுத்துகிறார்கள்.
 
அரைடஜன் படங்கள் வெளியானாலும் அனைவரது கவனமும் இருப்பது, ஆரஞ்சு மிட்டாயிடம்தான்.