1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Modified: புதன், 10 டிசம்பர் 2014 (08:56 IST)

இந்தவாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

படங்கள் என்பது அதிகம். படம் என்பதே சரி. அழகர் ஆற்றில் இறங்குகையில் உதிரி தெய்வங்களுக்கு யார் உச்சிவேளை பூ வைக்கப் போகிறார்கள்?
 
கோச்சடையானில் பொம்மை ரஜினியை பார்த்து பூப்பேறிய ரசிகர்களுக்கு வண்ண விருந்தளிக்க வருகிறது லிங்கா. ஒன்றுக்கு இரண்டு ரஜினி. அதனால் அண்ணிகள் இரண்டு, ஸ்டைல்கள் இரண்டு என எல்லாமே இரண்டிரண்டு.

தண்ணீர் அரசியலைப் பற்றியது என்பதால் கதையிலும் கந்தகம் அதிகம். பற்ற வைத்தால் பரபரவென கடைசி ரீல்வரை வெடிக்கும்.
 
இயக்கம் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி ரசிகர்களின் ருசி அறிந்து சமைப்பவர். ரஹ்மானின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்க போகிறது. ரத்னவேலுவின் கேமரா ட்ரெய்லரிலேயே ஜாலம் காட்டியது. காஸ்ட்யூம் ஹேர்ஸ்டைல் கலை இயக்கம் எல்லாம் சிறப்பு. குறுகிய காலத்தில் அத்தனையையும் சாதித்தது ரவிக்குமாரின் திறமையால்தான்.
 
ட்ரெய்லரில் பழமையுடன் இருந்தது ரஜினியின் நடிப்பும் ஸ்டைலும். இன்னொரு நடிகர் என்றால், ஒரே மாதிரி நடிக்கிறான் பார் என்பார்கள். ரஜினிக்கு அதுவே பலம். பழைய அதே உற்சாகம்பார் என்பார்கள். சந்தானம் இருக்கிறார். சத்தத்துக்கும், சிரிப்புக்கும் அவர் கியாரண்டி.
 
டிசம்பர் 12 திரையரங்குகள் கூட்டத்தால் திணறப் போகிறது.
 
லிங்கா வெளியாகும் நாள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாறப் போகும் ரசிகர்களை குறி வைத்து இரு படங்கள் வெளியாகின்றன. அதில் ஒன்று, யாரோ ஒருவன்.

பைஜு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கிளாமர் தாராளமாக இருக்கிறது. லிங்காவுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என்னுடைய படத்துக்கு வந்தாலே பிழைச்சுக்குவேன் என்று ஓபனாகவே கூறுயிருக்கிறார்.
 
இன்னொரு படம், இன்னுமா நம்பள நம்பறாங்க. எஸ்.ஆர்.பாலாஜி இயக்கியிருக்கும் இந்த மினிமம் பட்ஜெட் படத்தைப் பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை. காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க.

என்ன கொடும சார் என்ற ஒன்லைன் காமெடி வரியை வைத்து ரசிகர்களை இழுக்கப் பார்க்கிறார்கள். பாவம் அவர்களும் என்ன செய்வார்கள். படத்தில் தெரிந்த முகம் என்று யாருமில்லை.
 
எண்ணிக்கை மூன்று என்றாலும் ரசிகர்கள் எண்ணத்தில் நிறைந்திருப்பதும் கல்லா பெட்டியை நிறைக்கப் போவதும் ஒரேயொரு படம்தான், லிங்கா.